Header Ads



என்ன பெயர் சூட்டலாம்..?

-மவ்லவி A.U. பி.எம்.கலீல் அஹ்மது மன்பஈ-

‘மறுமையில் உங்கள் பெயரையும் உங்கள் பெற்றோர் பெயரையும் வைத்து நீங்கள் அழைக்கப்படுவீர்கள். எனவே, உங்கள் பெயரை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹமத், அபூதாவூத்)

பெயர்கள் கட்டிடத்தின் அஸ்திவாரம் போன்றது. மனிதர்களின் உடைகள் போன்று கவனிக்கப்பட வேண்டியது என்று ஓர் அறிஞர் கூறுகிறார். மண்ணில் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. அதில் எவைகளையும் தனித்தனியே பெயர் சொல்லி அழைப்பதில்லை. மனிதன் மட்டும் தான் பெயர் வைத்துக் கொள்கிறான். பெயர்கள் மூலம் அழைக்கப்படுகிறான்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைப்போன்று நல்ல பொருள் வாய்ந்த, அழைப்பதற்கும் இனிமையான - இலகுவான பெயர்களை நாம் சூட்டிக்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளுக்கும் சூட்ட வேண்டும்.

நம்மிடம் ஒரு தீய பழக்கம் உண்டு. குறிப்பிட்ட ஒரு மாதத்தில் குழந்தைகள் பிறந்தால் குறிப்பிட்ட பெயரைத் தான் சூட்ட வேண்டும். மற்ற பெயர்களை சூட்டக்கூடாது எனும் பழக்கம் நம்மிடையே நிலவுகிறது. இந்த பழக்கத்தை மாற்ற வேண்டும். எந்த மாதத்தில் குழந்தைகள் பிறந்தாலும் நல்ல பெயர்களை சூட்டும் பழக்கம் ஏற்பட வேண்டும்.

பெயருக்கேற்றபடிதான் அவர்கள் வாழ்க்கை அமையும். நல்ல பொருள் தரும் பெயராக இருந்தால் அவர்கள் சுபீட்சமாக வாழ்வார்கள். தீய பொருள் தரும் பெயர்களைச் சூட்டினால் அவர்கள் தீயவர்களாகவே வாழ்வார்கள்.

யஸார் - கஷ்டம், ரபாஹா – லாபம், நஜிஹா – லேஸ், அப்லஹ் - வெற்றி, நாபிஆ – பலன், யஃலா – மேலேருதல், பரகத் - அருள், மலிக்குல் அம்லாக் - அரசனுக்கெல்லாம் அரசன், ஆஸியா – மாறு செய்பவன், இனப் - திராட்சை ரசம், மது, தஹர் - காலம்

மேற்குறிக்கப்பட்டுள்ளது போன்ற தனி வார்த்தைகளை பெயர்களாகச் சூட்டக்கூடாது. என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் ரஹ்மத், நிஃமத், ஸகீனா, தவ்லத், ஃபர்ஜானா போன்ற தனி பெயர்களை சூட்டுவது நல்லதல்ல என சில அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

ஏனெனில், நம்மிடம் ஒருவர் வந்து, உங்கள் ரஹ்மத் (அல்லாஹ்வின் அருள்) இருக்குதா? என்று வினவும்போது நாம் இருந்தால் இருக்கிறது என்போம். வெளியில் சென்றிருந்தால் இல்லை என்போம். நாம் நமது மகளை இல்லை என்று சொல்லும் அதே வேளையில் அல்லாஹ்வின் அருளே இல்லை என்ற கருத்தும்; அல்லவா அர்த்தமாகிறது! என சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

பக்கத்து வீட்டு குழந்தைகள் நம் பிள்ளைகளை விளையாட அழைக்க வருகையில் ‘என்னங்க! உங்க ஃபர்ஜ் (பெண்ணுருப்பு) இருக்கா? நாங்களெல்லாம் விளையாடப்போறோம்!’ என்று அழைக்கையில் பொருள் தெரிந்தவர்கள் சிரிப்பார்கள். தவறான பெயர்கள் சிலசமயம் எவ்வளவு விபரீதமான ஒரு பொருளாகிறது என்பதை சிந்தித்தாவது இதுபோன்ற பெயர்களை சூட்டுவதை தவிர்க்க வேண்டும்.

எனவே, நாம் நல்ல பெயர்களாக சூட்ட வேண்டும். தீய பெயர்களை வைத்திருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும். வயது வரம்பை பார்க்கக்கூடாது. எவரும் அருவருப்பான தீய பெயர்களை வைத்திருந்தால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாற்றி விடுவார்கள்.

அஸ்ரம் - துண்டிப்பவர் என்று ஒருவர் இருந்தாபர். அவருக்கு குழந்தைகள் குறைவாக இருந்தது. அவர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உமது பெயர் என்ன?’ என வினவினார்கள்.

அவர், ‘அஸ்ரம்’ என்று கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இல்லை! நீ ‘ஜுர்அத்’ (எதையும் அழகாக்கி வைப்பவன்) என்று பெயரை மாற்றிக்கொள்.’ என்றார்கள். அவரும் தன் பெயரை மாற்றிக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே சிலருடைய பெயர்களை மாற்றியுள்ளார்கள். ஆஸ் - கஷ்டம்;

அஜீஸ் - கண்ணியமானவன் (இது அல்லாஹ்வின் பெயர் தனியாக சூட்டக்கூடாது (நூல்: மிர்காத்) – அப்துல் அஜீஸ் (கண்ணியமானின்- அல்லாஹ்வின்- அடிமை) என்று சூட்ட வேண்டும்.

அத்வா – தீமையின்பால் ஓடுபவன், ஷைத்தான் - மனிதனின் எதிரி, அல்ஹக்மு – வயோதிகன், குராப் - காகம், ஹவாப் - பல்லின் பளபளப்பு, ஷிஹாப் - எரி நட்சத்திரம்

ஏன்பன போன்ற பெயர்களை மாற்றி வைத்தார்கள். (அறிவிப்பாளர்: பஷீர் பின் மைமூன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுத்)

ஒருவர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உமது பெயர் என்ன?’ என வினவினார்கள். அவர் எனது பெயர் ‘கஜன்’ (கவலை) என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இல்லை! நீ ‘ஸஹ்ல்’ (இலகுவானவன்) என்று பெயரை மாற்றிக் கொள்!’ என்றார்கள். அதற்கவர் ‘எனது மூதாதையர் எனக்கு சூட்டிய பெயரை மாற்ற விரும்பவில்லை’ என்றார். ஷையது பின் முஸையப் என்பவர் கூறுகிறார், ‘அவர் அதற்குப்பின் வாழ்நாள் முழுவதும் கவலையிலேயே மூழிகியிருந்தார்.’ (அறிவிப்பாளர்: அப்துல் ஹமீது பின் ஜுபைர் பின் ஷைபா ரளியல்லாஹு அன்ஹு,

நூல்: புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ‘எனது பெயர் உட்பட நபிமார்கள் பெயரை சூட்டுங்கள். இறைவனுக்கு விருப்பமான பெயர் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை), அப்துர்ரஹ்மான் (அருளாளனின் அடிமை) என்பதாகும்’ என்றார்கள். (நூல்: மிஷ்காத்)

ஆகவே நல்ல பெயர்களை நம் பிள்ளைகளுக்கு சூட்டுவோம். ஆவர்கள் நல்லவர்களாக வாழ்வில் சிறந்தோங்கட்டும்.

3 comments:

  1. அதிகமான பெற்றோர் பெயர் வைத்தலிலும் பெஷனைத்தான் பார்க்கிறார்கள்.இது அப்படியானவர்களின் இஸ்லாத்துடனான தொடர்பு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை காட்டப் போதுமானதாக இருக்கிறது.எனவே மேற்கூறிய நிலை தவிர்க்கப்பட்டு அல்குர்ஆனில் நேரடியாக கூறப்பட்டுள்ள அல்லது மூலச் சொல்லுடைய பெயர்கள்,அஸ்மாஉல் ஹுஸ்னாவில் கூறப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இஸ்லாத்திற்காகப் பாடுபட்ட நபிமார்கள்,ஸஹாபாக்கள்,அறிஞர்கள் ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட வேண்டுமென்பதில் அதீத கவனம் எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. என பெயரும் அஸ்ரம் தான் நான் இப்போ என்ன செய்றது??

    ReplyDelete
  3. நபியவர்கள் அஸ்ரம் என்ற பெயரை மாற்றி வேறு பெயர் வைத்துள்ளார்கள். நீங்களும் அப்படி செய்வதுதான் சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.