Header Ads



இன்னும் எத்தனை, உயிர்ப்பலி வேண்டும்..?


சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸ் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடைபெற்றது. அப்போது குடியிருப்புப் பகுதிகள் மீது தீமூட்டும் ஆயுதங்கள் (incendiary weapons)  வீசப்பட்டன. அதில், காயமடைந்த ஒரு சிறுவனுக்கு முதலுதவி அளிக்க போதிய மருத்துவ வசதிகளும் மருந்துகளும் இல்லாததால், அந்தச் சிறுவனின் உடம்பிலுள்ள தீக்காயங்கள் மீது சேற்றைப் பூசி சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஹோம்ஸ் மாகாணத்தை, அதிபர் பஷார் அல் ஆஸாதின் படையினர் சுற்றிவளைத்து உள்ளனர். மேலும், அவர்கள் அத்தியாவசியப் பொருட்களான உணவு, மருத்துவப் பொருட்களை உள்ளே அனுமதிக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

ஹோம்ஸ் மாகாணம்!

காயத்துடன் பரிதவிக்கும் அந்தச் சிறுவன் மீது சேறு பூசப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், அந்தச் சிறுவன் வலியால் கை நடுங்கும் காட்சி பார்ப்பவர்களைப் பதறவைக்கிறது. அரசாங்கப் படைகளால் சூழப்பட்டுள்ள ஹோம்ஸ் மாகாணத்தில் மருத்துவப் பொருட்கள் முற்றிலுமாகத் தீர்ந்துவிட்டன. இதனால், காயமடைந்தவர்களுக்குப் போதிய முதலுதவிகூட அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் ஜனவரி மாதம் சிரியாவில் உள்ள மடாயா என்னும் நகரத்தில் சுமார் 3 லட்சம் மக்கள் ஒரு மாத காலமாக உணவின்றிச் சாகும்நிலைக்குத் தள்ளப்பட்டனர். பின்னர் சர்வதேச தலையீட்டின் காரணமாக அங்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் இதர தொண்டு நிறுவனங்கள் மூலமாக மடாயா நகரத்துக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதேநிலை இங்கு தொடர்ந்தால் மடாயாபோல், ஹோம்ஸ் மாகாண மக்களும் அதே நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

வாழ்வாதாரத்துக்கே வழி இல்லை!

2012-ல் தொடங்கிய சிரிய உள்நாட்டு யுத்தம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உலகின் ராணுவ வல்லரசுகள் அனைத்தும் தலையிட்டும் இது முடியவில்லை. ஐ.நா-வின் அகதிகள் அமைப்பு, கடந்த மாதம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் 2015-ம் ஆண்டில்தான் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான அகதிகள் தஞ்சம் கேட்டு வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.

2015-ம் ஆண்டு தஞ்சம் கேட்டு ஐரோப்பாவை அடைந்த அகதிகளின் 50 சதவிகிதம் பேர் சிரியாவைச் சேர்ந்தவர்கள். மேலும், இவர்கள் இந்த உள்நாட்டுச் சண்டையைப் பயன்படுத்தித் தங்களது பொருளாதார மேம்பாட்டுக்காகத்தான் ஐரோப்பாவை நாடினார்கள் என்று தவறான ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் 2012-ல் இருந்தே சிரியாவைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகியவற்றில் தஞ்சமடைந்து, அங்கும் முகாம்களில் அடைக்கப்பட்டு வாழ்வாதாரத்துக்கே வழி இல்லாமல் இருந்தனர். மேலும், இவர்களது நிலைமை 2015-ல் ஐ.நா அகதிகள் அமைப்பு, மற்ற தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து வந்த நிதியுதவியும் வற்றிப்போக, அன்றாடம் உணவுக்கே வழியில்லாமல் உயிரை பணயம்வைத்து கடல் மார்க்கமாக ஐரோப்பாவை அடைந்தனர்.

ஆயுதங்கள் ஒழிக்கும் பணி!

வியட்நாம் போரின்போது அமெரிக்கப் படையினர் பயன்படுத்திய நாபாம் குண்டுகள் இங்கும் வீசப்பட்டுள்ளன. 1980-ல் கையெழுத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கையின்படி நாபாம் குண்டுகள் மற்றும் தீமூட்டும் ஆயுதங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் மீது பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டு யுத்தம் தொடங்கிய நாள் முதல் ஆசாத் தலைமையிலான அரசு, கிளர்ச்சியாளர்களை ஒடுக்க பல்வேறு தாக்குதல் முறையைக் கையாண்டு வந்தது. அதில், ரசாயனத் தாக்குதலும் அடக்கம். ரசாயனக் குண்டுகள் மூலம் அப்பாவி பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட பின்பு, ஐ.நா தலைமையில் சிரியாவிலுள்ள ரசாயன ஆயுதங்கள் ஒழிக்கும் பணி 2014-ல் நடைபெற்றது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகள் முன்னின்று ஐ.நா பொது சபையில் நிறைவேற்றிய தீர்மானம் மூலம் அந்தப் பணி நடைபெற்று வந்தாலும் இன்னும் ஆசாத் தலைமையிலான அரசாங்கப் படையினர் நாபாம் குண்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் கொல்லப்படுவது அப்பாவி பொதுமக்களே.

நாபாம் குண்டுத் தாக்குதலில் உடம்பு முழுதும் தோல் எரிந்த நிலையில் ஒரு சிறுமி உடையில்லாமல் உதவி கேட்டு வரும்போது எடுத்த புகைப்படம்தான் வியட்நாம் யுத்தம் நிற்க முக்கியக் காரணம். இன்னும் எத்தனை அயலான் குர்தி, ஒம்ரான் போன்ற எந்தப் பாவமும் அறியாத சிறுவர்களை இந்தச் சிரிய யுத்தம் துன்பப்படுத்திப் பலி கொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.

No comments

Powered by Blogger.