Header Ads



வசீம் தாஜுதீன் படுகொலையில் ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகையின் பங்களிப்பு

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்ட தினத்தன்று, ஜனாதிபதி செயலகத்திலிருந்தும் அலரி மாளிகையிலிருந்தும் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டேமியன் பெரேராவுக்கு மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் தொடர்பான விவரங்கள், ஜனாதிபதி செயலகத்திலிருந்து அழிக்கப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு, நேற்றுப் புதன்கிழமை (24) கொண்டு வந்தனர். ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், தொலைபேசி அழைப்பு வசதிகள், அவற்றைப் பதிவு செய்து வைத்தல் போன்றனவற்றுக்குப் பொறுப்பான அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் அழித்துள்ளதுடன், அவர்களது பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளதாக, சீ.ஐ.டி தெரிவித்தது. இந்தத் தரவுகளை அழித்து, பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான, பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, நீதிமன்றத்திடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். இந்தத் தரவுகளைச் சேமித்துவைக்கும் கணினியைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த சி.ஐ.டியினர் அதுதொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர். பிரதிப் பொலிஸ்மா அதிபரைக் கட்டணம் செலுத்தும் விடுதியில் அனுமதிப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டைத் தனக்கு அறிவிக்குமாறு, சிரேஷ்ட அரச வழக்குரைஞரை, மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் பணித்தார். இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ், நேற்றுப் புதன்கிழமை (24) உத்தரவிட்டார். அத்துடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேராவையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். வசீம் தாஜுதீன், காரொன்றுக்குள் இறந்து கிடந்த நிலையிலேயே, 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியன்று நாரஹேன்பிட்டிய சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Bunch of rogues and thieves in the previous regime.....The Rajapaksas responsible

    ReplyDelete

Powered by Blogger.