பிரதமர் ரணில், முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கிறாரா..?
-க.முகம்மதுத்தம்பி-
(கல்வியமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர்)
நிகாபிற்கு தடைவிதிக்கும் யோசனைக்கு உறுதியான மறுப்பினை இன்றைய நல்லாட்சி அரசின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழுள்ள அரசாங்கத்தின் மீது முஸ்லிம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் பலப்படுத்தியுள்ளது.
இதற்காக முஸ்லிம் சமுகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றியுள்ளவர்களாக என்றும் இருப்பர்.
சென்ற ஆட்சியின் போது முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்ததன் பேறாக நாட்டில் உள்ள சகல மக்களும் கட்சி பேதமின்றி ஜனாதிபதித் தேர்தலின் போது பொது அபேட்சகராக களம் இறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்க முன்வந்தனர்.
முஸ்லிம் மக்கள் இந் நாட்டில் பூரண மத சுகந்திரத்துடனும், ஏனைய மதத்தவர்களுடன் சகோதர உணர்வுடனும் ஏனைய மதங்களை மதித்தவர்களாகவுமே என்றும் வாழ விரும்புபவர்கள். சென்ற ஆட்சிக் காலத்தில் பாரியளவில் முஸ்லிம்களது மத கலாச்சார உரிமைகள் பாதிக்கப்பட்டு பெரிதும் கவலைப்பட்டவர்களாக அன்றைய ஆட்சியிலிருந்து விடுபட ஆட்சி மாற்றம் வேண்டி பூரணமாக பொது அபேட்சகருக்கு ஆதரவளித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காரணமாயிருந்தனர். இது நாடறிந்த உண்மையே.
இன்றைய நல்லாட்சியில் முஸ்லிம்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பாரியளவில் ஒத்துழைப்பும் வழங்கி வருகின்றனர். முஸ்லிம்கள் எதிர்வரும் காலங்களிலும் இவ்விரு தலைவர்களின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு ஆதரவளிப்பதும் “இன்ஷா அல்லாஹ்” உறுதியே.
தற்போதைய பாராளுமன்றத்திலும் பொது எதிரணி (JO) குழுவினர் BBS அமைப்பினர் எடுத்ததற்கெல்லாம் இன பாகுபாட்டுடனும், குரோத மனப்பாங்குடனும் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர். இதனால் இவர்கள் மீது முஸ்லிம்கள் எவ்வித நம்பிக்கையும் கொள்வதற்கில்லை.
இவ் அரசாங்கம் பதவிக்கு அமர்த்தப்பட்டதும் முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களுக்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமித்து முஸ்லீம்கள் சமய/மத உரிமைகளை பேணுதல் மற்றும் பள்ளிவாசல்கள் பராமரிப்பு மேம்பாடு மொத்தமாக முஸ்லிம்களது சமய கலாசார நலனில் அக்கறை கொண்டு செயற்பட வழிவகுத்தமை முஸ்லிம்கள் மீது கொண்ட அக்கறையே.
இதனையும் முஸ்லிம்கள் பெரிதும் வரவேற்றுள்ளதோடு, இன்றைய அரசு தங்களது விவகாரங்களில் அக்கறையுடன் செயற்பட்டு வருவதையிட்டு பெரிதும் நம்பிக்கையும் கொண்டுள்ளனர்.
இன்றைய ஆட்சியிலும் ஆங்காங்கே நாட்டில் அமைதியையும் சக வாழ்வையும் விரும்பாத சில சக்திகள் வீணான குழப்பங்களை மக்கள் மத்தியிலும் ஏற்படுத்த முற்படும் வேளையில் இன்றைய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் உண்மையாக மக்களது சகவாழ்வில் அக்கறை கொண்டு செயற்படுவதால், அவ்வப்போதே பிரச்சனைகள் தீர்ப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படுவதும் பாராட்டுக்குரியதாகும்.
இவ் அரசாங்கத்தின் காலப்பகுதியில் முஸ்லிம்களது பள்ளிவாசல் நிர்மாணம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சமயம் தொடர்பான ஷரீஆ சட்ட தொடர்பான விடயங்களில் உள்ள கருத்து வேறுபாடுகள் அனைத்தும் களையப்பட்டு தங்களது சமய/மார்க்க கடமைகளை நிறைவாக பூரணமாக பின்பற்றுவதற்கும் ஏனைய மதத்தவர்களோடு சௌஜன்யான முறையில் வாழ்வதற்கும் வழிவகைகள் மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் வளர்த்து வருகின்றனர்.
மேலும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு பூரண பொறுப்புடன் செயற்பட்டு எமது மக்களை நிம்மதியாக பூரண சமய கலாசார விழுமியங்களை பேணியவர்களாக எமது நாட்டின் அரசியல் யாப்பில் உறுதியளிக்கப்பட்டவாறு பூரண மத சுதந்திரத்துடன் வாழ்வதற்கேற்ப சகல காரியங்களையும் முன்னெடுத்து பாதுகாப்பளிக்கும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்கள் கொண்டுள்ளனர்.
இதன்பால் சகல முஸ்லிம் அமைப்பினர்களும் ஒற்றுமையாக ஒரே சமூகம் என்ற பார்வையில் வீணான கருத்து மோதல்கள் முரண்பாடுகளைத் தவிர்த்து சமய ஒழுக்க நெறிக்குட்பட்ட அமைப்பில் எமது வாழ்க்கையை சம்பூரணமாக ஆக்கிக்கொள்வதானது, எமது சமூக மேம்பாட்டுக்கு பெரிதும் உதவக் கூடியதாக அமையும்.
முஸ்லிம்களைப் பாதிக்கும் எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாது என்று அண்மையில் எமது பிரதமர் நிகாப் ஆடை தொடர்பாக தெரிவித்த கருத்து அவர் முஸ்லிம்களின் சமய கலாசார விடயங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பில் செயற்படுவதில்லை என்பதனை உறுதியாக தெளிவுபடுத்தியுள்ளார்.
முஸ்லிம் மக்களது விடயத்தில் இவ்வாறு பிரதமர் கருத்து தெரிவிப்பது இன்றைய அரசு எமது சமூகத்தின் சமய கலாசார நலனில் பூரண அக்கறையுடன் செயற்படுவதனை வெளிக்காட்டி நிற்கின்றது.
இதன்பால் இன்றைய ஆட்சியாளர்களுடன் நாம் ஒற்றுமையாக என்றும் விசுவாசமாக எமது செயற்பாடுகளை முன்னெடுத்து எமது சமூக நலன்பேணிடுவோம்.
வரவேற்கத்தற்க கருத்துக்கள்.
ReplyDelete