Header Ads



‘அப்படி அந்த செல்போன்ல என்னதான் இருக்கோ...? அச்சுறுத்தும் ஆய்வின் முடிவுகள்..!

‘அப்படி அந்த செல்போன்ல என்னதான் இருக்கோ?’ என்று எதிரே இருப்பவர்களை கேள்வி கேட்க வைக்கும் அளவு செல்போன் பயன்பாடு இன்று அதீதமாகிவிட்டது. அதிலும் அது ஸ்மார்ட் போனாக மாறிய பிறகு அதற்கு இடம், பொருள், ஏவல் என எந்த வரையறையும் இல்லை. சாப்பிடும்போது, பரபரப்பான சாலையில் நடக்கும்போது, திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கும்போது என எல்லா இடங்களிலும் மொபைல் ஒளிர்கிறது. இவ்விஷயத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிந்திருக்கிறது சமீபத்திய ஆய்வு!

தென் கொரியாவில் இருக்கும் 6 கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இடையே இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஆயிரத்து 236 மாணவ, மாணவிகள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த ஆய்வின் படி... ஒரு நாளில் 29.4 சதவிகித ஆண்கள் சராசரியாக 4 மணி நேரம் செல்போன் பயன்படுத்துகிறார்கள். பெண்களில் இந்த அளவு 52 சதவிகிதமாக உள்ளது. 6 மணி நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிற பெண்களின் சதவிகிதம் 22.9% என்பதும், ஆண்களில் இந்த சதவிகிதம் 10.8% என்பதும் அறியப்பட்டிருக்கிறது.‘பெண்களின் செல்போன் பயன்பாடு பற்றி வெளிவந்திருக்கும் முதல் புள்ளிவிவரம்’ என்ற பெருமையுடன் Journal Public Health Reports இதழில் இந்த ஆய்வின் முடிவு வெளியாகி உள்ளது.

‘ஆண்கள் ஓய்வு நேரங்களில் ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பெண்கள் மற்றவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போதும் ஸ்மார்ட் போன் திரையின் மீதே அவர்களின் கண்கள் உள்ளது. கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன் ஒரு போதையாகவே பெண்களிடம் மாறியிருப்பது கவலை அளிக்கிறது’ என்று கூறியிருக்கிறார் ஆய்வை நடத்திய பேராசிரியரான சங் ஜேயான். ஆண்களைவிட பெண்கள் ஏன்  அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். ‘ஆண்களைவிட பெண்களுக்கு மொழித்திறன் அதிகம். 

உரையாடுவதிலும் ஆண்களைவிட பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் அதிகம். சமூக வலைத்தளங்களும் இதில் முக்கிய இடம்பிடிக்கிறது. 5 பெண்களில் ஒருவர் தங்களுடைய பாதுகாப்பற்ற உணர்வு காரணமாகவும் ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்’என சில நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 

பொழுதுபோக்காக ஆரம்பிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு, கடைசியில் மனநல பாதிப்பை உண்டாக்கும் அளவு செல்வதால் உங்கள் செல்போன் நேரம் எவ்வளவு என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள் நிபுணர்கள்.

No comments

Powered by Blogger.