பத்ஹூல்லா கோலனும், அவரது இயக்கமும்
அல் ஜஸீராவின் நிகழ்ச்சிகளில் ஒன்று “பிலா ஹுதூத்” ஆகும். இதனை நடாத்துபவர் இஸ்லாமிய உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களின் ஒருவரான அஹ்மத் மன்ஸூர். இஸ்லாமிய உலகின் பல்வேறு நிகழ்ச்சிகளின் பின்னனியை ஆய்வதாக இந்த நிகழ்ச்சி அமைவதுண்டு.
இந்த வகையில் துருக்கியில் நிகழ்ந்த இராணுவ சதிப்புரட்சி பின்னணியை அவர் ஆராய முற்பட்டார். பத்ஹூல்லா கோலன் இந்த சதிப்புரட்சி பற்றி குற்றம் சாட்டப்பட்டு வருகிறார். அவரைப் பற்றியும் அவரது நற்பணிகள் இயக்கம் பற்றியும் இந்த நிகழ்ச்சி தகவல்கள் சேகரித்தது. அந்தவகையில் கோலனின் நற்பணிகள் மன்றத்தின் உபதலைவராக இருந்த லதீப் ஒர்தகோனை அஹ்மத் மன்ஸூர் பேட்டி கண்டார். அப்பேட்டியில் சொல்லப்பட்ட விடயங்களை இங்கே தொகுத்துத்தருகிறோம்:
(லதீப் ஒர்தகோன் 40 வருடங்கள் நற்பணி இயக்கத்தோடு இருந்தவர். அதன் பிரதித் தலைவராகவும் இருந்தவர். 2009ம் ஆண்டு இயக்கத் தலைவர் பத்ஹூல்லா கோலனின் உண்மை நிலை தெளிவாகிய போது அவர் இயக்கத்தை விட்டு வெளியேறினார். லதீப் ஒர்தகோனுக்குத் துருக்கிய ஜனாதிபதி தையீப் ஒர்தகோனுக்குக் குடும்ப உறவுகள் எதுவும் கிடையாது. வேறெந்த ஒட்டுதல் உறவும் அவருக்கில்லை.)
லதீப் ஒர்தகோன் :-
பத்ஹூல்லா கோலனை அமெரிக்காவில் ஒரு முறை நான் சந்தித்த போது ”நான் அல்லாஹ்வை சந்திக்கிறேன், அல்லாஹ் என்னோடு பேசுகிறான்” என்றார். மேலும் அல்லாஹ் சொன்னதாக கோலன் கூறினார் :
நான் முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக படைப்பினங்களை வைத்திருந்தேன். இப்போது உமக்காக வைத்திருக்கிறேன்.
லதீப் ஒர்தகோன் இதனை உறுதிப்படுத்தும் வகையில் சொல்கிறார் :
அல் குர்ஆனில் கைவைத்தவனாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் இதனைச் சொல்கிறேன். நான் சொன்ன இவற்றில் ஒரு சிறிதும் பொய் கலக்கவில்லை.
நான் பத்ஹூல்லாவை அல்லாஹ்வின் அவ்லியாக்களில் ஒருவர் என நம்பியிருந்தேன். அவ்லியாக்கள் ஒரு வகை மனப் பிறழ்வுக்கு உட்படுவதுண்டு. அத்தகைய ஒரு நிலையில் சொன்னதாகவே இதனை நான் நம்பினேன். இயக்கத்தில் நான் இவற்றைச் சொல்லவில்லை.
எனினும் அவர் ஒரு முறை இயக்க அங்கத்தவர்கள் ஒரு கூட்டத்தின் முன்னே கூறினார் :
”எனக்கு கோபம் வந்தால் புயலும், புவிநடுக்கமும் வெளியே உருவாகும்”.
கோலன் அவ்லியாக்களில் ஒருவர் என அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நம்புகிறார்கள். எனவே அவர் சொல்பவையே இஸ்லாம் என நம்பிப் பின்பற்றுகிறார்கள்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் உலகை இயக்கும் ஒழுங்குக்கேற்ப கோலன் தனது இயக்கத்தை ஒழுங்குபடுத்தியுள்ளார். துருக்கி உளவு ஸ்தாபனம் அமெரிக்க மத்திய உளவு ஸ்தாபனத்தோடு சேர்ந்து இயங்கி வந்தது.
கோலனின் இயக்க கட்டமைப்பு மிகத் தெளிவானதல்ல. கோலன் மட்டுமே அதன் ஒழுங்குகளைத் தெளிவாக அறிவார்.அதனை முழுமையாக இயக்குவது கோலனது மூளை மட்டுமல்ல.வெளியிலிருந்து சிலர் திட்டமிட்டு கொடுக்கும் நிலை காணப்படுகிறது. செயற்திட்டங்களையும் அவர்கள் வகுத்து வழங்குகிறார்கள்.
மேலும் லதீப் ஒர்த்துகோன் விளக்குகிறார். :-
துருக்கியப்படையின் 90 % ஜெனரல்கள் பத்ஹூல்லாவின் இயக்கம் சார்ந்தவர்கள். அவர்கள் மிகுந்த இரகசிய ஒழுங்கில் இயங்குகின்றனர்.
படையிலும் ஏனைய அரச நிறுவனங்களிலுமுள்ள பத்ஹூல்லாவின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஆவர்.
துருக்கியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஈரானில் கொமைனி உருவாக்கியது போன்றதோரு அரச கட்டமைப்பை உருவாக்கலே கோலனின் திட்டம். இதற்காக அவர் 20 வருடங்களாகத் திட்டமிட்டு இயங்கி வந்தார். கோலனின் பாடசாலைகள் 145 நாடுகளில் உள்ளன. இஸ்லாமிய உலகின் இயக்கங்களைக் கண்காணிக்கும் பொறுப்பை அமெரிக்கா இப்பாடசாலைகள் மீது சுமத்தியுள்ளது.
புரட்சி தோல்வியடைந்தமையை நோக்கும் போது துருக்கி மிகுந்த கஷ்டப்பட்டு ஒரு பெரும் தடையைத் தாண்டியுள்ளது என நாம் நம்பலாம். தையிப் ஒர்துகோன் தலைமையில் துருக்கிய அரசு கோலனின் இயக்கத்தை அரச நிறுவனங்களிலிருந்து விரட்டும் போதுதான் துருக்கி அரசு பலம் பெறும். ஆனால் இதற்கு மூன்றிலிருந்து, ஐந்து வருடங்கள் வரை செல்லும்.
Post a Comment