Header Ads



நடுவானில் விமான என்ஜின் பிய்ந்து, நடுக்கடலில் விழுந்தது...!


நடுவானில் விமான என்ஜினின் ஒரு பகுதி திடீரென பிய்ந்து சேதமானது. இந்த விசித்திர சம்பவத்தில் பயணிகள் எந்த ஆபத்துமின்றித் தப்பினர்.

அமெரிக்காவின் செளத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த போயிங்-737 ரக விமானம் லூயிசியானா மாகாணத்திலுள்ள நியூஆர்லியன்ஸ் நகரிலிருந்து ஃபுளோரிடா மாகாணம், ஆர்லண்டோ நகருக்கு சனிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் 99 பயணிகள், விமானிகள் உள்ளிட்ட 5 ஊழியர்கள் இருந்தனர்.

சுமார் அரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, அந்த விமானம் மெக்ஸிகோ வளைகுடாவுக்கு மேல் 30,700 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென வெடிப்பு சப்தம் கேட்டது. அந்த விமானத்தின் இடது பக்க இறக்கையில் பொருத்தப்பட்ட என்ஜினின் மேல் பாகம் திடீரென பிய்ந்து நடுக்கடலில் விழுந்தது. என்ஜின் பாகம் பிய்ந்து போனதையடுத்து, விமானம் பலத்த குலுக்கத்துக்கு ஆளானது. என்ஜினின் உள்பாகத்துக்கு எந்தப் பாதுகாப்புமற்ற நிலையில், அதிலிருந்து பெரும் புகை எழுந்ததை பயணிகள் கண்டனர்.

இரு என்ஜின்கள் கொண்ட அந்த விமானத்தில் ஒரு என்ஜின் மட்டுமே செயல்பட்ட நிலையில், விமானி மிகவும் ஜாக்கிரதையாக அந்த விமானத்தை திசை திருப்பி ஃபுளோரிடா மாகாணம், பென்ஸகோலா நகர விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கினார்.

அவசரத் தரையிறக்கம் என்றபோதிலும், விமானம் பாதுகாப்பாக இறக்கப்பட்டது என்றும், பயணிகள் எவரும் காயமடையவில்லை என்றும் செளத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

என்ஜின் பாகம் சேதமடைந்ததை பல பயணிகள் தங்கள் செல்லிடப்பேசிகளில் படம் பிடித்தனர். மேலும், ஆபத்தான நிலையில் விமானம் பறந்தபோது மூச்சுத் திணறலை சமாளிக்க முகத்தில் ஆக்ஸிஜன் கவசம் அணிந்த நிலையில் பல பயணிகள் செல்லிடப்பேசிகளில் கைப்படம் எடுத்துக் கொண்டனர்.

1 comment:

  1. சாகுற நேரத்துலயும் பைத்தியங்களுக்கு செலஃபீ

    ReplyDelete

Powered by Blogger.