நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை, நாங்கள் ஒன்றுமே கேட்பதில்லை என காட்ட நினைக்கிறார்கள்'
வட மாகாண தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க அரசுடன் பேசி நாம் நடடிவக்கைகளை எடுத்தாலும் அவற்றைத் தடுத்துக் குழப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என முதலமைச்சர் க.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளில் வட மாகாண முதலமைச்சர் க. வி.விக்னேஷ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் உண்மையாக செயற்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாக நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சர் விக்னேஷ்வரனிடம் கேட்டபோது,
மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, நிலப் பறிப்புக்கள் உள்ளிட்ட முக்கிய 10 விடயங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் பேசியிருந்தேன். அப்போது சகலவற்றையும் நான் செய்வேன் என அவர் கூறியிருந்தார். ஆனால் ஒன்றையுமே செய்யவில்லை.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் பிரச்சினைகளின் தீர்வு தொடர்பில் அரசுடன் பேசிவருகிறோம். அதனை ஏற்று அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்தும் தடைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1000 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படும் என கூறினார்கள். அதுவும் நடக்கவில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
வட மாகாண மக்களுக்குத் தீர்வை வழங்க அரசு நினைத்தால் கூட அதனைத் தடுக்க பலர் முயற்சி செய்கின்றனர். இது இவ்வாறிருக்க நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை. நாங்கள் ஒன்றுமே கேட்பதில்லை என காட்ட நினைக்கிறார்கள். அவ்வாறானவர்களில் மக்கள் விடுதலை முன்னணியினரும் அடங்குவார்கள் எனவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment