வெள்ளிப் பதக்கத்தின், பின்னால் உள்ள இரகசியங்கள்..!
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நோக்கத்தில் சிந்துவின் செல்போனை அவரிடம் இருந்து பறித்து வைத்திருந்த பயிற்சியாளர் கோபிசந்த், அதனை திரும்ப ஒப்படைக்கப் போவதாக கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து பேட்மின்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கடும் உற்சாகமடைந்துள்ளார். விளையாட்டு உலகைப் பொறுத்த வரை, கோபிசந்த் கடுமையான விதிமுறைகளை பின்பற்றும் பயிற்சியாளர்களில் ஒருவர். சாய்னா முதல் பி.வி சிந்து வரை பயிற்சியின் போது கடும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டுமென கோபிசந்த் எதிர்பார்ப்பார்.
ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக கூட, சிந்துவின் செல்போனை கோபிசந்த் வாங்கி வைத்துக் கொண்டார். கடந்த 90 நாட்களாக ஃபேஸ்புக்,வாட்சப்பில் கூட நண்பர்களுடன் உறவாட முடியாத நிலையில்தான் சிந்து இருந்தார். முக்கியமாக ஐஸ்கிரீமுக்கும் தடை. சிந்துவுக்கோ ஐஸ்கிரீம், இனிப்பு என்றால் உயிர். ஆனால் சாதிப்பவர்கள் சில விஷயங்களை தியாகம் செய்ய முன்வர வேண்டுமென்பதுதான் கோபிசந்தின் லாஜிக்.
ஒலிம்பிக் இறுதிப் போட்டி வரை கடுமையான பயிற்சியாளராக தெரிந்த கோபிசந்த் தற்போது சிந்துவின் மூத்த சகோதரராகவே மாறி விட்டார். சிந்துவிடம் செல்போனைத் திரும்ப கொடுத்துவிட்டார். வாட்ஸப்பில் நண்பர்களுடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் அனுமதித்துள்ளார். இது குறித்து கோபிசந்த் கூறுகையில், ''கடந்த 3 மாதங்களாக சிந்துவின் செல்போன் என்னிடம்தான் இருக்கிறது. முதல் விஷயமாக செல்போனை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறேன். இரண்டாவது சிந்துவுக்கு லஸ்ஸி மிகவும் பிடித்த விஷயம். அதனை சாப்பிடவும் தடை விதித்திருந்தேன். ஐஸ்கிரீமுக்கு தடை விதித்திருந்தேன். இனிமேல் அவர் என்ன வேண்டுமோ விரும்பியபடி சாப்பிட்டுக் கொள்ளலாம்.
கடந்த இரண்டு மாதங்களாகவே சிந்து கடுமையாக உழைத்தார். அதற்காக பலத் தியாகங்களை செய்ய வேண்டியது இருந்தது. ரியோவில் அவர் என்ன செய்ய வேண்டுமென்று நான் கருதினேனோ அதனை செய்துள்ளார். இப்போது நான் அடைந்துள்ள மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நம்மை பெருமையடைய வைத்துள்ளார். சிந்துவுக்கு இன்னும் வயது இருக்கிறது. இது ஒரு தொடக்கம்தான். போடியம் ஏறும் போது சிந்துவிடம் நான் ஒரு விஷயம் சொன்னேன். தங்கம் இழந்ததற்காக வருத்தப்படாதே. வெள்ளி வென்றதற்காக பெருமைப்படு என்றேன் '
Post a Comment