ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஒழுக்காற்று, நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும், கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம். இதுவே கட்சியின் ஆரோக்கியமான மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும் என கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
பொரல்லையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
விமர்சனமும் சுய விமர்சனமுமே ஜனநாயகத்தின் அடிப்படை சித்தாந்தமாகும். ஆனால் தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் வேரோடு அழிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் சுய விருப்புக்களின் அடிப்படையில் தாம் பிரதிநிதிதித்துவப்படுத்துகின்ற கட்சியில் இருந்து விலகி வந்து புதிதாக கட்சியொன்றை அமைக்க சுதந்திரம் இருக்கின்றது.
இது தான் ஜனநாயகமுமாகும். ஆனால் நாம் தேசிய அரசாங்கத்துக்கு எதிராக புதிய கட்சியொன்றை அமைக்க இருக்கின்றமையை முடக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எத்தகைய பாரதூரமான அழுத்தங்கள் எம் மீது பிரயோகிக்கப்பட்டாலும் நாம் தொடர்ந்து தேசிய அரசாங்கத்தின் எதேச்சதிகார போக்குக்கு எதிராகவும் , பிற்போர்க்கு தனமான ஆட்சிக்கு எதிராகவும் போராடுவோம்.
கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் , கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க வுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம். இதுவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது முகம் கொடுத்துள்ள பாரதூரமான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமைகின்ற அதே வேளை கட்சிக்கு தேவையான அத்தியாவசிய மறுசீரமைப்புக்கு இது வழிவகுக்கும்.
Post a Comment