நல்லாட்சி அரசாங்கம் மீது சந்தேகம் - அப்துர் ரஹ்மான்
'தகவல் அறியும் சட்ட மூலம் தற்போது அமுலுக்கு வந்துள்ளதானது நல்லாட்சியை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். அதேவேளை, இதனை செய்வதற்கு இத்தனை மாதங்கள் தாமதித்தமையானது எவ்வகையிலும் நியாயப்படுத்தக் கூடியதுமல்ல. இந்த நிலையில் இச்சட்ட மூலத்தை முறையாக அமுல்படுத்துவதற்கான கட்டமைப்புகளை தாமதமின்றி அரசாங்கம் உருவாக்கவும் வேண்டும். அதுபோ லவே, இச்சட்ட மூலத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும் பொதுமக்கள் முன்வர வேண்டும். ' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி( NFGG) யின் தவிசாளர் பொறியியலளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பல மாத கால எதிர்பார்ப்பிற்கு பின்னர் தகவலறியும் சட்டமானது தற்போது சட்ட மாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது....
"மிக நீண்ட காலமாக இலங்கையில் எதிர்பார்க்கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் கூட , இதனை அமுலுக்கு கொண்டு வருவதில் ஏற்படுத்தப்பட்ட தாமதம் கவலையளிக்கிறது.
நல்லாட்சி என்பதன் அடிப்படைப் பண்புகளில் ஒன்று வெளிப்படைத் தன்மையாகும். அதற்கு நடை முறைவடிவம் கொடுக்க வேண்டும் என்றால் தகவல் அறியும் சட்டம் என்பது மிகவும் அத்தியவசியமாகும். இந்த தகவல் அறியும் சட்டத்தின் பலனாகவே இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மோசடிகளை முறியடிக்க முடிந்திருக்கிறது.
அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை சட்ட பூர்வமாக இலங்கை மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக பலமாக முன் வைக்கப்பட்டு வந்துள்ளது.
இச்சட்ட மூலத்திற்கான அங்கீகாரம் அமைச்சரவை மட்டத்தில் சில வருடங்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் கிடப்பில் போடப்பட்டே வந்தன.
இதன் பின்னணியிலேயே தற்போதைய ஜனாதிபதி அவர்களும் அரசாங்கமும் இச்சட்ட மூலத்தை உடனடியாக கொண்டு வருவதாக கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் அதற்குப் பிந்திய பொதுத் தேர்தல் காலத்திலும் தொடர்ச்சியான வாக்குறுதிகளை வழங்கி வந்தனர். அதனையும் அடிப்படையாகக் கொண்டே மக்கள் இந்த அரசாங்கத்திற்கான ஆதரவை வழங்கியிருந்தனர். இருப்பினும் , 19 மாதங்கள் கடந்து விட்ட பின்னரே அது தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பலமாத இழுத்தடிப்புக்களுக்குப் பிறகு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்ட மூலம் கடந்த 24.06.2016 அன்று பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. இருப்பினும் அது அமுலாக்கம் செய்யப்பட வேண்டுமாக இருந்தால் சபாநாயகரின் கையெழுத்து அவசியமாகும். ஆனால் அதிலும் கூட தொடாச்சியான தாமதங்கள் நிலவி வந்தன. இறுதியாக ஜூலை 7ஆம் திகதி இதில் சபாநாயகர் கையெழுத்திடுவார் என அறிவிகக்ப்பட்டிருந்தது. அதுவும் தாமதிக்கப்பட்டு இப்போது ஒரு சில தினங்களுக்கு முன்னரே சபாநாயகரின் கையெழுத்து அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இப்போதாவது இச்சட்டமூலமானது அமுலுக்கு வந்துள்ளது நல்லாட்சியை விரும்பும் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தியேயாகும். அதேவேளை இதனை செய்வதற்கு இத்தனை மாதங்கள் தாமதிக்கப்பட்டமையானது எவ்வகை யிலும் நியாயப்படுத்தக்கூடியது அல்ல. அத்தோடு நல்லாட்சியை உறுதிப்படுத்தக்கூடிய சட்டங்களை உருவாக்குவதில் இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருக்கும் அர்ப்பணத்தையும் இந்தத் தாமதமானது சந்தேகம் கொள்ளச் செய்கிறது.
இந்த நிலையில், இது வெறும் சட்டமாக மாத்திரம் இருந்து விடாமல் இதன் நன்மைகளை மக்கள் நேரடியாக அனுபவிக்கக்கூடிய கட்டமைப்புகளை அரசாங்கம் காலதாமதமின்றி உடனடியாக உருவாக்க வேண்டும். அதன் மூலம் நல்லாட்சி தொடர்பான தமது அர்ப்பணத்தை அரசாங்கம் நிரூபிக்க முன்வரவேண்டும்.
அத்தோடு இச்சட்டம் பற்றிய விரிவான விழிப்புணர்வுகளை மக்கள் பெற்று தத்தமது பிரதேசங்களில் நடைபெறும் அரச கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் அபிவிருத்தி வேலைகள் என்பன தொடர்பில் இச்சட்ட மூலத்தைப் பயன்படுத்தி தகவல்களைப் பெற்று ஊழல் மோசடிகளுக்கெதிராக குரல் கொடுக்கின்றவர்களாக மக்கள் மாற வேண்டும். அவ்வாறு தகவல் அறியும் சட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்துகின்றபோது மாத்திரமே அதன் முழுமையான நோக்கத்தை அடைய முடியும் என்பதோடு நல்லாட்சி ஒன்றினை வலுப்படுத்தவும் முடியு ம்."
Post a Comment