இது பில்கிஸின், கண்ணீர் காவியம்..!
-ஆமினா முஹம்மத்-
பில்கிஸை நீங்கள் மறந்திருக்கக் கூடும்! பலருக்கு இப்பதிவே முதல் அறிமுகமாகவும் இருக்கலாம்... மறந்தவர்களுக்கு நினைவூட்டலாகவும், புதியவர்களுக்கு சுருக்கமான அறிமுகத்துடனும் கட்டுரையை துவக்கலாம்.."ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். ஒருவரால் அல்ல..
கற்பனை செய்து பாருங்கள்! கொடூரமாய் இருக்கிறதல்லவா? நல்லவேளை நமக்கேதும் இப்படியொன்று நிகழவில்லை என்ற பெருமூச்சு வெளிப்படுகிறதா? நம்மைப்போல் ஒரு பாதுகாப்பான சூழலில், அழகான வாழ்க்கையில், இயற்கையின் வனப்பைபோலவே செழிப்பாக இருந்த குடும்பம் தான் பில்கிஸ் உடையது! கோரச் சம்பவம் நடக்கும் வரை அவரை யாருக்கும் தெரியாது... அவர் தனக்கான நியாயத்தை கேட்டு வாதாடி நிற்கவில்லை எனில் 14க்கும் மேற்பட்ட குடும்ப உறவினர்கள் மண்ணோடு புதைக்கப்பட்டது போல் நமக்கும் தடயம் கிடைக்காது போயிருக்கும் !
பில்கிஸுக்கு நேர்ந்த அவலம் எதனால்?
அவர் முஸ்லிம் பெண்மணி என்ற ஒரே காரணத்தினால் !!! ஆம்... அவ்வடையாளத்தை தவிர்த்து அவரை பாலியல் வன்முறைக்குள்ளாக எந்த முகாந்திரமும் அந்த நாசக்காரர்களுக்கு தெரிந்திருக்கவில்லை!
சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்க முடிந்த கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த , 'வாழும் துயரம்' அவர்.
பெப்ரவரி 27, 2002ல் கோத்ரா ரயிலில் பற்றிய தீ கலவரமாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை காவு வாங்கியது.
தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதற்கு பலர் உயிரோடு இல்லை, பலர் உயிருக்கு பயந்து சொல்லத்தயாராய் இல்லை! ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் படிப்பறிவற்ற ஓர் இளம்பெண் துணிந்து வந்தார்.
அதனை அவர் சொல்லக் கேட்போம்...
"என் கணவர் வேலையில்லாதவராக அப்போது இருந்தாலும், வசதிகொண்ட வீட்டில் திருமண வாழ்க்கை சுகமாக சென்றுக்கொண்டிருந்தது. எங்களுக்கு 3 வயதில் ஒரு மகள் இருந்தாள். பெயர் சாலிஹா. நான் 5 மாத குழந்தையை வயிற்றில் சுமந்தவளாக இருந்தேன்.
பெப்ரவரி 28! சரியாக கோத்ரா சம்பவத்திற்கு அடுத்த நாள் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்துத்துவாவினரால் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அது கலவரமாக மாறிப்போக பல முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாகின. நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல நாடிய போது ஊர்த்தலைவர் தடுத்து "யாராலும் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்த முடியாதென்று" உறுதி கூறினார்.
ஆனால், அதன் பின்னர் கலவர கும்பல் எங்கள் இல்லங்களை நோக்கி கற்களை வீசத்தொடங்கின. அதிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தோம். அப்போது நான் செருப்பு கூட அணிய அவகாசம் பெற்றிருக்கவில்லை.
உறுதி கொடுத்த ஊர் தலைவர் வீட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் , குழந்தைகள் ஒன்று கூடினோம். ஆனாலும் பாதுகாப்பற்றவர்களாய் உணர்ந்தோம். நாங்கள் தப்பி வேறிடம் செல்வதற்குரிய எல்லா வழிகளும் கலவரக்காரர்களால் அடைக்கப்பட்டிருந்தன.
28ஆம் திகதி நள்ளிரவில் எங்கள் வீடுகள் திட்டமிட்டு எரிக்கப்பட தொடங்கின. நாங்கள் உங்களை கொல்வோம், நாங்கள் உங்களை வெட்டியே தீருவோம் எனும் கோஷங்கள் உரக்க ஒலித்தன.
காட்டில் அடைக்கலம்
எங்களுக்கு பொலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டது. அதற்காக கிராம ஆண்கள் காவல்நிலையத்தில் உதவி கேட்டனர். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டது.
வேறு வழியில்லாமல் பல முஸ்லிம்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள காடுகளுக்கு சென்று சில நாட்கள் மறைந்து வாழ்ந்தனர்.
அன்றைய நாள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ண உணவின்றி அருந்த நீருமின்றி உயிருக்கு பயந்து எங்கள் கிராமங்களிலேயே பல்வேறு இடங்களில் ஒளிந்துகொண்டே இருந்தோம். ஆனால் அசாதாரண சூழல் திணிக்கப்பட்ட நிலையில் அது சாதாரண விஷயமாக இருக்கவில்லை.
எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அவர்களை வெளியே அனுப்பவில்லை எனில் உன் வீட்டையும் கொளுத்துவோம் என்று ஆவேசமாக அவர்கள் கத்தியதால் பலரும் அடைக்கலம் கொடுக்க அஞ்சினர்.
மிரட்டலுக்கு அஞ்சிய , உறுதி அளித்த எங்கள் ஊர் தலைவரும் அவர் வீட்டிலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டார். எங்கள் வீடுகளுக்கே செல்லலாமென நினைத்தால் , அது ஏற்கனவே தீக்கு இரையாகியிருந்தது.
மீண்டும் காவல்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு கோரினோம். அவர்களோ எங்களை அக்கிராமத்தை விட்டு வெளியேறிச்செல்ல அறிவுறுத்தினர்.
இரவாகியிருந்தது. அருகிலிருக்கும் கிராமத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிஜல்பாய் தாமோர் வீட்டுக்கு அடைக்கலம் தேடி சென்றோம். துரதிஷ்டவசமாக அவர் அப்போது ஊரிலில்லை. அவர் மகனும் கூட எங்களை ஆசுவாசப்படுத்த குடிக்க நீரும் சில திண்பண்டங்களையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி சொல்லிவிட்டார்.
வேறு வழியில்லை! வேறிடம் செல்ல வேண்டும். இன்னுமொரு கிராமத்திற்கு சென்றால் அங்குள்ள முஸ்லிம்கள் உயிருக்கு பயந்து எங்கோ தப்பியோடியிருந்தனர். அங்கிருந்த பள்ளிவாசல் அன்றைய இரவுக்கு பாதுகாப்பு கொடுத்தது.
ஷாமின்! என் ஒன்றுவிட்ட சகோதரி... நிறைமாத கர்ப்பிணி. திடீரென பிரசவ வலி ஏற்பட மருத்துவ உதவியும் கிடைக்காத அந்த நேரம் செய்வதறியாது திகைத்தோம். அவள் பள்ளிவாசலிலேயே தன் குழந்தையை பிரசவித்தாள்.
பள்ளிவாசல் அமைந்திருந்த, நாங்கள் தங்கியிருந்த கிராமம் ஏற்கனவே இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டதால் அங்கிருப்பது பாதுகாப்பற்றது என எண்ணி குத்ரா எனும் கிராமத்திற்கு பழங்குடியினர் உதவியுடன் சென்றோம்.
எங்கள் கிராமத்திலிருந்து 500 முஸ்லிம்கள் தப்பி வந்தோம். 17 உறுப்பினர்கள் மட்டும் குத்ராவில் தங்கிக்கொண்டோம். ஷாமினால் பயணிக்க முடியவில்லை. ஈன்றெடுத்த வேதனை அவளை சோர்வாக்கியிருந்தது.
ஆகையால் இக்கிராமத்திலேயே 3 நாள் வரை மறைந்திருக்க எண்ணினோம். எங்கள் அடையாளங்களை மறைக்க பழங்குடியினர் அவர்களின் துணிகளை எங்களுக்கு அணியவைத்தனர். ஷாமின் மீதான இரக்கத்தால் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். இல்லையேல் அதுவும் கிடைத்திருக்காது.
ஆனால் அதுவும் எளிதானதாக இருக்கவில்லை. முஸ்லிம்களை அவர்கள் தங்களுடன் வைத்துள்ளார்களா என பலர் விசாரணைகளுக்கு உள்ளாகினர். எனவே அதிகாலை 4 மணிக்கு மாறுவேடத்தில் அங்கிருந்து புறப்பட்டோம்.
துயரங்கள் தொடர்ந்தன
உயிருக்காய் பயந்தோடிய நாட்கள் எல்லாம் கண்ணீர் மட்டுமே சுமந்திருந்தோம். அடுத்த நொடி என்ன ஆபத்திருக்கிறது என்பதை அறியாத படபடப்புகள் கொடூரமானவை. எதுவும் சிந்திக்க முடியவில்லை! சிந்தனையெல்லாம் எப்படி உயிரை காப்பாற்றுவதிலேயே இருந்தது.
இரு நாட்களுக்கு பிறகு பழங்குடியினரின் வழிகாட்டல் உதவியுடன் சபர்வாட் கிராமத்திற்கு சென்றோம். இங்கிருந்து ,மானாபாய் எனும் நீண்டநாள் நண்பரை சந்தித்து உதவி பெற நினைத்தோம். அவர் இருக்கும் பகுதி பனிவேலா. அங்கு செல்லும் வழியில் ஒரு குக்கிராமத்தில் ஓய்வெடுத்துக்கொண்டோம். அது இரு மலைகளுக்கு இடைபட்ட இடம்.
குறுகிய சாலை வழியே செல்லக்கூடிய பகுதி.
நாங்கள் சாலை வழியே சென்ற போது திடீரென ஒரு நபர் என் மாமாவை தாக்கினான். கீழே சரிந்த அவர் ஒரு மணி நேரத்திற்கு பின்பே சுயநினைவு பெற முடிந்தது. விரைவிலேயே சில நபர்கள் சூழ்ந்துகொண்டனர். அவர்களை முன்பே எனக்கு தெரியும். ஆம்! அவர்கள் என் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்.
சற்று முன்னர் நாங்கள் தங்கிய சபர்வாட் கிராமத்தினர் தான் நாங்கள் எங்கேசெல்கிறோம் என்ற தகவலை இவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். இவ்வெறியர்கள் டாட்டா ஸ்மோவில் வந்திருந்தனர்.
"முஸ்லிம்கள் இங்கேயிருக்கிறார்கள்! கொல்லுங்கள்! கொல்லுங்கள்" எனும் ஆவேச குரல்களை எழுப்பினர்.
அவர்கள் சபர்வாட் மற்றும் பனிவேலா கிராமத்திலிருந்த வெறிபிடித்த மக்களை திரட்டி வந்திருந்தனர். தொடர் ஓட்டத்தின் காரணமாக எங்கள் உடல் சோர்ந்திருந்தது, உதவிக்கு ஆள் இல்லாத நிலை உள்ளத்தையும் சோர்வடைய செய்திருந்தது. எங்களால் இனி அவர்களுடன் சண்டையிட முடியாது! அதற்குரிய சக்தியையும் இழந்துவிட்டோம்.
ஆனாலும் ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடிக்க நினைத்தோம்! பயனில்லை- சுற்றிவளைக்கப்பட்டோம். நாங்கள் 17 நபர்கள் தான்... நான்கு ஆண்கள் மட்டுமே எங்களில் உண்டு! எட்டு பெண்களும் மீதமுள்ளவர்கள் சிறு குழந்தைகளாகவும் இருந்தனர்.
அவர்களிலோ 25க்கும் மேற்பட்ட வெறியர்கள் இருந்தனர்.
அவர்கள் எம் பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்.
அவர்களின் வெறி 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தையையும் விட்டுவைக்கவில்லை! ஷாமின் 2 நாள் வயது குழந்தையை கொடூரமாக கொன்றனர். என் தாய்மாமா, என் தந்தையின் தங்கை மற்றும் அவரின் கணவரையும் அடித்துக்கொன்றனர். வன்புணர்வுக்காளான பெண்களையும் கொன்றனர்.
பஞ்சாக எறியப்பட்ட பிஞ்சுமகள்
அதன் பின் என்னிடம் வந்தனர். நான் என் 3 வயது மகளை கையில் ஏந்தியிருந்தேன். என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக அவளை பறித்துக்கொண்ட அந்த வெறியர்கள், தன் வெறியின் விசைக்கேற்ப அவளை தூக்கி வீசினர். அவளின் பிஞ்சு தலை பாறையில் மோதிய போது என் இதயமே சுக்குநூறாய் உடைந்தது.
அவள் இறந்து போனாள். நான்கு பேர் என் கை மற்றும் கால்களை பிடித்துக்கொள்ள பலபேர் ஒருவர் பின் ஒருவராக என்னை வன்புணர்வுக்குள்ளாக்கினர். அவர்களின் வெறி அடங்கிய பின்பும் கூட கண்மூடித்தனமாக என்னை உதைத்தும் அடித்தும் துன்புறுத்தினர். என் கழுத்துப்பகுதியினை காலால் அழுத்தியிருந்தான் ஒருவன். கற்கள் கொண்டு தாக்கப்பட்டேன்.
இரும்பு தடியால் என் தலையில் தாக்கிய போது நினைவிழந்து போனேன். நான் இறந்துவிட்டதாக நினைத்த அந்த வெறியர்கள் என்னை புதருக்குள் தூக்கி வீசினர்.
எங்களை தாக்கிய போது அவர்கள் உதிர்த்த முறைகேடான வார்த்தைகளை என்னால் எப்போதும் திருப்பிச்சொல்ல முடியாத அளவுக்கு கேவலமானவை. " கோத்ராவில் எங்கள் மக்கள் கொன்றதற்காக உங்களை கொல்வோம்! எந்த ஒரு முஸ்லிமையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டோம்" என ஆக்ரோஷமாக கத்தினர்.
என் கண் முன்னே என் அம்மா, என் தங்கை மற்றும் என் 12 உறவினர்களும் கொல்லப்பட்டனர். தன் துன்பத்தை கத்தி சொல்ல முடியாத மிருகங்களை துன்புறுத்தி துடிதுடிக்க வைத்து கொல்லப்படுவதை போலவே என் உறவினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
இத்தனைக்கும் 28ம் திகதி காலையில் என் கணவரும் இன்னும் சில உறவினர்களும் பிஜேபி ஊழியர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமத்தினர்க்கான கூட்டத்தில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கெஞ்சியுள்ளார்.
இப்போது எங்களை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொன்றவர்கள் அப்போது அக்கூட்டத்தில் இருந்தவர்கள் தான்!
17 பேரில் 2 குழந்தைகளும் (சதாம் -வயது 7, ஹுசைன் -வயது 5) நானும் மட்டும் பிழைத்துக்கொண்டோம்! அவர்கள் இருவரும் எப்படி தம்மை காத்துக்கொண்டார்கள் என எனக்கு தெரியவில்லை.
நாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களில் எவரும் ஹிந்து பெண்கள் இல்லை. அவர்கள் அனைவரும் நடுத்தர வயது ஆண்கள் மட்டுமே. நாங்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட போது இவர்களெல்லாம் ஆபாச வார்த்தைகளில் கத்திக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் என்னை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போது நான் ஐந்து மாத கர்ப்பிணி என கூட என்னால் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் கால்கள் என் கழுத்திலும், வாயிலும் மிதிபட்டிருந்தன.
சொந்த ஊர் மக்களாலேயே வன்புணர்வுக் கொடுமை
ஹிந்துக்களில் சாதி பேதமின்றி இந்த கொடூரத்தில் பங்காற்றினர். என் கிராமத்தை சேர்ந்தவர்களும் அதில் ஒரு பகுதியினர் தான்! எப்படி என்னால் அவர்களை அடையாளம் காண முடியாமல் போகும் ? அவர்கள் என் கிராமத்தை சேர்ந்தவர்களே!
இரண்டு மணி நேரத்திற்கு பின் என் கண்களை திறந்த போது என் உலகம் சிதைக்கப்பட்டதை கண்டேன். என்னால் நிற்க கூட முடியவில்லை! ஆனால் அவர்கள் கையில் மீண்டும் சிக்க விரும்பவில்லை. நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள கந்தல் துணியேனும் கிடைக்குமா என தேடியலைந்தேன். மேலங்கி கிடைத்தது.
என்னை சுற்றி என் உறவினர்களின் பிணங்கள் இருந்தன. மண்ணில் சரிந்திருந்த அந்த உடல்களை பார்க்கவும் என்னால் முடியவில்லை.
ஓர் இரவும் கழிந்து, அடுத்த நாள் பகல் பொழுதும் கழிந்தது. தண்ணீர் தாகமும் பசியும் என்னை மேலும் துன்புறுத்தின. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! தாகத்திலேயே செத்துவிடுவேனோ என எண்ணத்தோன்றியது. அதனால் மலைப்பாங்கான அந்த இடத்தை விட்டு கீழிறங்கி உணவும் உடையும் கிடைக்குமா என தேடியலைய ஆரம்பித்தேன்.
சில தொலைவில் அடிகுழாய் ஒன்றை பார்த்தேன். அது அந்த பகுதியில் வாழும் பழங்குடியினர்க்கு சொந்தமானது. என்னை கண்டதும் நான் ஒரு முஸ்லிம் என அறிந்து என்னை தாக்க வந்தனர்.
அதிலிருந்து என்னை காத்துக்கொள்ள நான் முஸ்லிம் இல்லை என்றும் உங்களை சேர்ந்தவள் தான் என்றும் பொய் சொன்னேன் அவர்கள் மொழியிலேயே. அவர்கள் நம்பினார்கள். எனக்கு நீரும் உடையும் கொடுத்தனர்.
கொஞ்சம் உறங்கினேன். அப்போது தான் பொலிஸ் வேன் அந்த பகுதிக்கு வந்து தேட ஆரம்பித்தது. ரந்திக்புர் கிராமத்திலிருந்து வந்த குடும்பத்தினர் கொல்லப்பட்டதை குறித்து அவர்கள் அங்கே கேட்டார்கள்.
பொலிஸ்காரர்கள் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என நம்பினேன். அவர்களும் என்னை அவர்கள் கொண்டு வந்த வண்டியின் பின்புறம் ஓய்வெடுத்துக்கொள்ள சொன்னார்கள். உயிர் பிழைத்தது என் அதிஷ்ட்டம் என்றார்கள். அவர்களுடன் அங்கிருந்து புறப்பட்டேன். லிம்கேதா விற்கு அழைத்து சென்றனர்.
எனக்கு உணவு கொடுத்த பின் என் கதையை கேட்டார்கள். ஆனால் என் புகாரை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவர்கள் என்னை பயம் காட்டினர்.
ஒருவேளை இந்த வன்புணர்வு சம்பந்தமான குற்றச்சாட்டை சொன்னால் என்னுடல் இருக்கும் மோசமான நிலையில் என்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றும் விஷ ஊசி செலுத்தி என்னை மருத்துவர்கள் கொல்வார்கள் என்றும் கூறினர். நான் பயந்தேன் , எனினும் நான் சொன்னவற்றை ஒன்று விடாமல் புகாராக ஏற்றுக்கொள்ளச் சொன்னேன்.
ஆனால் அவர்களோ நான் சொன்னவற்றுக்கு புறம்பாக 500 பேர் சேர்ந்த மக்கள் குழு என்னையும் உறவினரையும் அடித்துவிட்டதாக கதை கட்டி எழுதினர். சக்தி முழுவதும் இழந்த என்னால் என் புகார் குறித்து பொலிஸாருடன் முறையிட முடியவில்லை. இவர்களிடம் அது பயனளிக்காது என்பதையும் அறிந்துகொண்டேன்.
ஆகையால் என் எண்ணத்தை கைவிட்டு என்னை கோத்ரா முகாமிற்கு அழைத்துச்செல்லும்படி வேண்டுகோள் விடுத்தேன்! நான் என் உறவினர்களை பார்க்க விரும்பினேன்.
கண்முன்னே உறவினர் படுகொலை
நான் படிக்காதவள். நான் சார்ந்த அமைப்பு பெண்களை பள்ளிக்கு செல்வதை அனுமதிக்காத தப்லீக் ஜமாத்தை சேர்ந்தது. ஆனாலும் கற்பழிப்பு நடத்தப்பட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு, மெடிக்கல் செக்கப் செய்ய முடிவெடுத்தேன். நான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதை உறுதி செய்யும் சான்றிதழை பெற்றேன்.
என் அம்மா, என் 2 சகோதரர்கள், இரு சகோதரிகள் மற்றும் என் மூன்று வயது மகள் கொல்லப்பட்டனர்.
ஆனாலும் என்னால் அந்த குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும். அந்த மிருகங்களை பல வருடங்களுக்கு முன்பிருந்தே எனக்கு நன்கு தெரியும். நாங்கள் ஊரில் பால் விற்று வந்தோம்.
எங்களிடம் பால் வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்கள் அவர்கள். ஒருவேளை அது அவர்களுக்கு அவமானமாக இருந்தால் அதற்காக அவர்கள் இவ்வாறு என்னை செய்திருக்க வேண்டியதில்லை. இந்நிகழ்வுகளுக்கெல்லாம் பிறகு என் தந்தை மனநிலை குன்றியவராகிவிட்டார்.
எண்ணிப்பார்க்க முடியாத திருப்பங்களுடனும் மோசமான சொற்ப நாட்களுக்குள்ளும் நான் அனாதையாக்கப்பட்டுவிட்டதால் சக்தி முழுவதும் இழந்துவிட்டேன் ! ஆனாலும் இதனை பாதியிலேயே நான் கைவிடுவதாக இல்லை! எப்படி என்னால் அவர்களை மன்னிக்க முடியும் ? "
முடித்தார். பத்திரிக்கையாளர் ஷீலா பட்-இடம் தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் விவரித்தார் பில்கிஸ். அதன் பின்னர் தான் பலரின் கவனத்திற்கு இக்கொடூரம் சென்றது.
எதிர்பார்த்த படியே மோடியின் காவல்துறை 2003ல் இந்த வழக்கை "சம்பவம் உண்மைதான். ஆனால் கண்டுபிடிக்க இயலாதவை" என கூறி முடிவுக்கு கொண்டு வந்தது. இதுபற்றி சகோதரி பில்கிஸ் குறிப்பிடுகையில் " இருமுறை புகார் அளித்தேன். முதலாவதாக லிம்கேதா வில், அடுத்ததாக நான் தங்கியிருந்த கோத்ரா முகாமில் .
அவர்கள் என் கைரேகையை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் படிப்பறிவற்றவளாக இருந்ததால் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை நான் அறியவில்லை"
அதன் பின் பில்கிஸ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக அஃது அஹ்மதாபாத் சுப்ரிம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் இவ்வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட பின் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவர்களும் பொலிஸும் இந்நிகழ்வுக்கு துணை புரிந்ததும், தடயங்களை அழித்ததும் அம்பலமானது. 2 மருத்துவர்கள், 6 பொலிஸ் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
சிபிஐ தன் அறிக்கையில் இந்நிகழ்வு குஜராத் பொலிஸ்ஸின் ஒட்டுமொத்த தோல்வியையும் அவர்களின் உடந்தையையும் சுட்டிக்காட்டியது. இந்த வழக்கு போக்கின் காரணமாக பில்கீஸ் அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்ததன் காரணமாக அவருக்கு CISF பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்தது முதல் வழக்கு முடியும் வரையில் 20க்கும் அதிகமான இடங்களுக்கு பாதுகாப்பு கருதி மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பில்கிஸ் குஜராத்துக்கு வெளியே வழக்கு விசாரணை நடத்தும்படி சுப்ரிம் கோர்டில் மனு கொடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று இவ்வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. "நீதியின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க வைத்தது" என இம்முடிவு குறித்து கூறினார்.
இதற்கிடையில் பொலிஸாரால் பில்கீஸ் உறவினர்கள் புதைக்கப்பட்ட பனிவேலா கிராமத்தை ஏய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தோஹ்ரா குழு ஆய்வு செய்த போது அங்கே 60 கிலோ உப்பு கிடைத்தது.
உடலை சீக்கிரமாக மக்கச்செய்வதற்காக திட்டமிட்டு போலிஸார் இவ்வாறு செய்தது நிரூபணமானது. மண்ணின் ஈரப்பதம் காரணமாக அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. பில்கிஸ் சொன்ன அடையாளங்கள் வயதும் மருத்துவகுழு ஆராய்ச்சி முடிவோடு ஒத்துப்போனது. 8 பேரின் உடல்கள் மட்டும் கிடைத்தன. மீதம் ஆறுபேர் காணாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மருத்துவக்குழுவின் அறிக்கை இவ்வழக்கின் போக்கை மேலும் வலுவாக்கியது.
ஆறுவருட போராட்டத்தின் பயனாக, பில்கிஸ் வைத்திருந்த நம்பிக்கையை காக்கும் வண்ணம் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பளித்தது. பிடிபட்ட 20 பேரில் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 2008, ஜனவரி 18ல் ஆயுள் தண்டனை விதித்தது. ஒருவர் விசாரணையின் போதே இறந்துவிட்டிருந்தார். 7 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டனர்.
நீதி கிடைத்த போதும் விடுவிக்கப்பட்ட ஆறுபேருக்காக தன் ஆதங்கத்தையும் சகோதரி பதிவு செய்தார். அந்நபர்களுக்கும் தண்டனை பெற்றுத்தருவதில் உறுதியாய் உள்ளார். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த கேஸ்களுக்கும் சிபிஐக்கு தன் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இத்தீர்ப்பு பற்றி ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசியபோது " இது என் தனிபட்ட போராட்டமல்ல. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல பெண்களுக்கான போர்.
பாலியல் வன்முறை திட்டமிடப்பட்டு எங்கள் சமுதாயப் பெண்கள் மீது நடத்தப்பட்டது. என்னுடைய இப்போராட்டம் பாதிப்படைந்த பல பெண்களுக்கு சக்தியை கொடுக்கும். அவர்கள் தண்டிக்கப்படுவதால் மட்டுமே வெறுப்பு ஓய்ந்து விடாது.
ஆனால் நீதி இன்னும் சாகவில்லை என்பதற்கான சிறிய அறிகுறிதான் இது..!" என்றார். உண்மை தான் ! எவ்வித பணபலமும் இன்றி, எந்த ஒரு அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இன்றி தனித்து போராடி தனக்காக நீதியை தனியாளாய் நிலைநாட்டிய பில்கிஸ்ஸின் செயல் ஒவ்வொரு பாதிப்படைந்தவர்களுக்கும் ஒரு முன்மாதிரி தான்.
மோடிக்கு தலையிடி
மோடிக்கு பெரும் தலைவலி என்றே தான் எண்ணத்தோன்றும் சகோதரி பில்கிஸ் அவர்கள் தரும் பதிலடிகளைப்பார்த்தால்! முதலமைச்சர்க்கான தேர்தல் சமயத்தில், "நீங்கள் ஓட்டுப்போடுவீர்களா?" என கேட்கப்பட்ட போது, "நான் ஏன் ஓட்டளிக்க வேண்டும் ?, பல கொடுமைகள் எனக்கு நிகழ்த்தியதோடு என் குடும்பத்தாரை என் கண் முன்னே கொடூரமாய் கொன்றார்கள். இவற்றுக்கு பின்னாவது குஜராத் அரசு என்னை பாதுகாத்திருக்க வேண்டும், எனக்கு நீதி பெற்றுத் தந்திருக்க வேண்டும். இவையெல்லாம் செய்ய வக்கற்ற அரசு இயந்திரத்திற்காகவா நான் ஓட்டளிக்க வேண்டும். முடியாது. நான் விரும்பவுமில்லை" என்றார் காரமாக.
இப்படியான விரக்தியாளர்களை தான் இந்த மதவாத அரசு உருவாக்கியுள்ளது. உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி மோடியின் ஆதரவுக்காக அவரை சென்று சந்திப்பீர்களா என கேட்டபோது " தன் சொந்த மாநிலத்தில் எனக்கு நீதியும் பாதுகாப்பும் தர முடியாத நபரை நான் எப்போதும் சந்திக்க விரும்பவில்லை.
நான் அவரை நம்பப்போவதுமில்லை " என்ற அவரின் ஒவ்வொரு சொல்லும் மோடியின் ஒவ்வொரு பிம்பத்தையும் உடைத்துக்கொண்டே வந்தன.
இன்று இவரை நாம் மறந்திருக்கலாம், இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மக்கள் புறக்கணித்திருக்கலாம். நமக்கொரு துன்பம் நிகழாத வரை அத்துன்பத்தின் ரணங்கள் நமக்குப் புரியப்போவதில்லை! ஆனால் அவருக்கான அநீதிகளை ஒதுக்கிவிட்டு கொடூரனை ஆட்சிகட்டிலில் அமர வைக்க துடித்த ஒவ்வொரு சாமானியனும் குற்றவாளிகளே தான். வெட்கபட வேண்டும் நாம்...
மூன்று பெண்குழந்தை ஒரு ஆண் குழந்தையுடன் 20க்கும் மேற்பட்ட முறை வீடும் ஊரும் மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டும், அவ்வப்போது பொலிஸ் நெருக்கடிகளோடும், இதற்கு சாவே மேலோ என்ற சிந்தனையில் அடிக்கடி வயப்பட்டும் கூட "வாழ்வதற்காய் போராட வேண்டுமெனில் போராடத் தயங்கமாட்டேன்"
என திடமாய் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கிறார்... 14 வருடத்தில் ஏதேதோ நடந்துவிட்டது! குற்றவாளிகளெல்லாம் சுதந்திரமாய்... பில்கிஸ் மட்டும் கேள்விக்குறியாய்......... டெல்லி மாணவி நிர்பயா இறந்ததே நலம் தான்! இந்தியாவில் நீதி வேண்டுவோர் தான் குற்றவாளிகள்.
சகோதரி பில்கிஸ்ஸின் நல்வாழ்வுக்காய் பிரார்த்திப்போம்.
-விடிவெள்ளி-
Indian PM Modi and his puppets are notorious criminals. They must be hanged in the presence of ICC jurists.
ReplyDelete