உலமாக்கள் ஆண்மீகத் துறையில், தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் - மௌலவி அப்துல் ஹாலிக்
உலமாக்கள் ஆண்மீகத் துறையில் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அகில ஜம்மியத்துல் உலமா சபை உப தலைவர் மௌலவி அப்துல் ஹாலிக் வலியுறுத்தியுள்ளார்.
புத்தளம் தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் முப்பெரும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இதில் விஷேட பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள அப்துல் ஹாலிக் மௌலவி மேலும் தெரிவித்துள்ளதாவது,
மதரஸாக்களிலிருந்து வெளியாக்கூடிய உலமாக்கள் தங்களை ஆண்மீகத் துறையில் வளர்த்துக் கொள்வது அவசியமாகும். கடந்த காலங்களில் நம்முடைய சஹாபாக்கள், சாலிஹீன்கள் தம்முடைய ஆண்மீக பலத்தைக் கொண்டு உலகில் பல சாதனைகளை செய்தார்கள்.
தூனுஸ் என்ற நாட்டில் உள்ள, கைருவான் என்ற ஊருக்கு பெரும் படையுடன் சென்று பயங்கரமான விஷஜந்துக்கள் உள்ள காட்டுப் பகுதியில் இரவு வேளையில் தங்கியுள்ளார்கள்.
உக்பத் இப்னு நாபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சத்தமாக ஒரு கல்லுக்கு மேலே ஏறிநின்று சொன்னார்கள், ஏ. விஷ ஜந்துக்களே , விலங்குகளே, காட்டு மிருகங்களே நாங்கள் நபியுடைய விருந்தாளிகள் வந்திருக்கிறோம். நீங்கள் இந்த இடத்திலிருந்து அவசரமாக காலி செய்யுங்கள் என் உத்தரவை இடுகிறார்கள். இந்த உத்தரவைக் கேட்டு அங்கிருந்த காட்டு மிருகங்கள் அந்த இடத்தை விட்டு அகன்றதாக சரித்திரத்தில் நாங்கள் பார்க்கலாம்.
இந்தியாவில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆங்கிலேயேர்களை எதிர்த்து நின்றார். அதேபோன்று லிபியாவில் பிரான்ஸ் படைகளை உமர் முக்தார் எதிர்த்தார்.
இப்படி இஸ்லாமிய அறிஞர்களில் பலர் தாம் எதிர்கொண்ட சவால்களை தமது ஆண்மிக பலத்தினால் வெற்றி கொண்டார்கள்.
இந்த மத்ரஸாவிலிருந்து தற்போது வெளியாகும் உலமாக்கள், அவர்களை வாழ்த்த வந்திருக்கும் அவர்களுடைய தாய்மார்கள், தந்தைமார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் ஆண்மீகத்துறையில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆண்மீகத்துறை எப்படி வளருமென்றால் அல்லாஹ்வுடைய கட்டளைகள், நபி அவர்களுடைய சுன்னத்துக்களை எங்களுடைய எல்லா நடவடிக்கைகளிலும் முழுக்கமுழுக்க பின்பற்றி நடப்பதன் மூலமாக இன்ஷா அல்லாஹ் அந்த ஆண்மீக பலம் எங்களுக்குள் வளரும்.
இதன்மூலம் இந்த உலகத்தில் எங்களுக்கு எதிராக இருக்கக்கூடிய சவால்களை வெற்றிகொள்ள முடிவதுடன், எதிரிகளுக்கு பதிலடியும் கொடுக்கலாம். இதனால் அல்லாஹ்வுடைய உதவிகளையும் நிச்சயமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தனதுரையில் அப்துல் ஹாலிக் மௌலவி குறிப்பிட்டார்.
Post a Comment