ராஜபக்ச என்ற பேயை, விரட்ட வேண்டும் - சரத் பொன்சேகா
குருணாகலிலிருந்து ராஜபக்ச என்ற பேயை விரட்ட வேண்டும் என பீல்ட் மார்ஷல், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரசியல் என்பது தனது இரத்தத்தில் இல்லை என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் அழைப்பிற்கமையவே தான் அரசியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஹெட்டிப்பொல நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு மலர்மாலை அணிவித்து ஐக்கிய தேசிய கட்சி தன்னை அரசியலுக்குள் வரவழைத்ததாகவும், இதற்கு மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்பு என்பன ஒத்துழைப்பு நல்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் மஹிந்தவின் ஆட்சி மற்றும் அராஜகங்களுக்கு பயந்து ஐக்கிய தேசிய கட்சியானது மிகவும் பின்னடைந்து காணப்பட்டதோடு, யாரும் எதற்கும் முன்வரவில்லை.
தற்போது தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியலுக்கு வந்து அவர்களின் பயங்களை போக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் ராஜபக்ச என்ற பேயை குருணாகலிலிருந்து விரட்டுவதோடு, மீண்டும் இந்தப் பக்கத்திற்கு வருவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் சரத் எச்சரித்துள்ளார்.
Post a Comment