இலங்கை ஜனாதிபதி அனுப்பிய, கடிதம் பரீசீலிக்கப்படுகிறது - சவூதி அறிவிப்பு
இலங்கைக்கு மேலதிக ஹஜ் கோட்டா வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமெனவும் சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சர், முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு இவ்வருடம் மேலதிகமாக ஹஜ் கோட்டா வழங்குமாறு அமைச்சர் ஹலீம், சவூதி ஹஜ் அமைச்சருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சவூதி மன்னருக்கும் வேண்டுகோள் விடுத்து கடிதங்கள் அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, இவ்வருடம் அமுல்படுத்தப்பட்ட புதிய கோட்டா முறை மூலம் பாதிக்கப்பட்ட ஹஜ் முகவர்கள் சிலர் அமைச்சர் ஹலீமை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
மேலதிக கோட்டா இலங்கைக்கு வழங்கப்பட்டால் பாதிக்கப்பட்ட ஹஜ் முகவர்களுக்கு கோட்டா பகிரப்பட வேண்டுமெனவும் அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கு மேலதிக கோட்டா கிடைத்தால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிவரும் ஹஜ் முகவர்கள் தொடர்பில் பரிசீலிக்கப்படுமெனவும் இவ்வருட ஹஜ் கோட்டா, ஹஜ் யாத்திரிகர்கள் மற்றும் முகவர்களின் நலன் கருதியே ஏற்பாடு செய்யப்பட்டதெனவும் எந்தவோர் ஹஜ் முகவர்களுக்கும் அநீதி இழைக்கப்படவில்லையெனவும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
-விடிவெள்ளி ARA.Fareel-
Post a Comment