பல்கலைக்கழகக் கல்வியும், பறிபோகும் கண்ணியமும் (கட்டுப்பாடு மீறி, நடப்பவர்களுக்கு மட்டும்)
-Izzath Binth Hassan-
"அறிவைத்தேடி பெற்றுக்கொள்வது முஸ்லிமான ஆண், பெண் இருபாலார் மீதும் கடமையாகும்." என்ற நபிமொழிக்கமைய, நாம் அனைவரும் கற்றுக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றோம். அதைச் சொல்லிச் சொல்லியே கற்றுக்கொண்டும் இருக்கின்றோம். கற்பித்துக்கொண்டும் இருக்கின்றோம்.
ஆனால்...
எதைக் கற்பது?
எதற்காகக் கற்பது?
எப்படிக் கற்பது?
எங்கு கற்பது?
எப்போது கற்பது?
எதுவரை கற்பது?
என்பதைத் தீர்மானிப்பதில் தான் பிழைத்து விடுகின்றோம்.
இப்பொழுது எம் சமுதாய இளைஞர்களும் யுவதிகளும் அதிகமாக, ஆர்வமாக படித்து பல்கலைக்கழகம் செல்கின்றனர். உயரிய குறிக்கோள்களை மனதில் பதித்து, உயர்கல்வியைத் தொடங்குகின்றனர். பெற்றவர்களும் தம் பிள்ளைகள் நல்ல நிலையில் சிறப்பாக, சமூக அந்தஸ்தோடு பலர் முன் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில், நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து, கஷ்டங்களை சகித்து, பொருளாதார சிக்கல்களை சமாளித்து பிள்ளைகளை படிக்கவைக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
அப்பெற்றோரை அள்ளாஹ் பொருந்திக் கொள்வானாக!
ஆனால் இந்த உயர்கல்வியைத் தொடரும் #ஒரு-சில-சகோதர-சகோதரியர்... (அனைவரும் அல்ல)
குறிப்பாக #பெண்கள்
தங்கள் நோக்கம் மறந்து...
மார்க்கம் துறந்து...
தாக்கம் அறியாமல்...
நடந்து கொள்ளும் முறைகள் மிக மிகவேதனைக்குறியது. அவமானத்திற்குறியது.
இவர்கள் நல்ல குடும்பப் பின்னனியில் இருந்தும், இஸ்லாமிய முறையில் வாழ்ந்தும் வந்தவர்கள். மார்க்கம் தெரிந்தவர்கள். ஆனால் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த பின் தன் #மானம், #மார்க்கம் இரண்டையும் பறக்கவிட்டு...... மாற்று மத தோழியருடன் சேர்ந்து, மஹ்ரமல்லாத உறவுகளுடன் பேசுவது மட்டுமல்லாது, நெருங்கிப் பழகுவது, தொட்டுப்பேசுவது, பகிடி, கேலி, தமாஷ் என எத்தனையோ வடிவங்களில் கூடி சிரித்து மகிழ்வது, விளையாடுவது என அனாச்சாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இத்துடன் நிறுத்தாமல் #காதல் என்று ஒரு கூட்டம் அலையும் அவலநிலை வேறு. "கெம்பஸ் போனால் இதெல்லாம் சகஜம்" என்ற ஒரு சமாளிப்பு. அங்கு படிப்பதில் ஓர் மமதை. இவர்கள் தங்கள் பெற்றோரைப் பற்றி கவலைப்படாவிட்டாலும் படைத்தவனைப்பற்றிய பயம் கூட இல்லாமல் போய் கண்டபடி அந்நிய கலாச்சாரத்தில் ஊறிப்போய் வாழ்கின்றனர். அவர்களுக்கு தவறுகள் தவறுகளாகத் தெரிவதில்லை. அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை. அது தான் நாகரீகம் என்று அதற்குள் அமிழ்ந்து விடுகின்றனர்.
மூடி மறைத்து முக்காடிட்டவர்கள் சிலர் தலைகீழாக மாறி மாற்று மத சகோதரிகளையே ஆடை விடயத்தில் மிஞ்சி விடுகின்றனர். "இந்த நாகரீகம் நரகத்துக்கு வழி வகுக்கும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்."
#••முத்தெடுக்கப்போய்~மூச்சுத்திணறி~மூழ்கி விடுகின்றனர்••
இப்படியானவர்களைக் கண்டபின் தான் சில பெற்றோர் தங்கள் படிக்கக் கூடிய பெண்பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பத் தயக்கம் காட்டுகின்றனர். தம் பிள்ளைகள் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் அப்படிப்பட்ட சூழலில் வழிதவறி விடுவார்களோ என்ற அச்சம் இப்படியானவர்களை பார்த்ததும் வருவது இயல்பு தானே.
வழிகாட்டிகள் தவறான பாதையை தேர்ந்து கொண்டால்முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களே முறைதவறி, நடக்கும் போது.... பின்பற்றித் தொடர வேண்டிய இளைய தலைமுறை பிழைத்துப் போகும் வாய்ப்புக்கள் உருவாகலாம்.
சிலரின் இவ்வாறான நெறிபிறழ்ந்த நடைமுறைகளினால்... இறையச்சத்தோடு, ஒழுக்கமாக வாழும் சகோதரிகளின் நிலை பரிதாபத்திற்குறியதாகின்றது. அவர்கள் பரிகாசிக்கப்படுகின்றனர். அவர்களின் கண்ணியமான ஆடைகளும் இஸ்லாமிய நடத்தைகளும் விமர்சனம் செய்யப்படுகின்றன.
எமது சமூகத்தையே தலைகுனிய வைக்கும் இந்த மேதைகள் எப்போது தங்கள் தவறுகளை சீர்திருத்தப் போகின்றார்கள்?
ஏன் சிலர் இப்படி மூளையை அடகுவைத்து நடக்கின்றனர்?
ஏன் இவ்வாறு மாறத் துணிகின்றனர்?
எம்மால் எமது மார்க்கம் காட்டித் தந்திருக்கும் வரையறைக்குள் இருந்து கொண்டே கற்றுத்தேற முடியாதா?
இஸ்லாமிய விழுமியங்களுடன் பன்முகத்தேர்ச்சி பெற்ற எத்தனை ஆளுமை நிறைந்த இஸ்லாமிய சகோதரிகள் எமக்குள் இருக்கின்றனர்.
ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்?
"கல்வி கற்பது அவசியம். அதைவிட மார்க்கம் அத்தியவசியம். இறைகட்டளைகளை மீறி, கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து, தன் இஷ்டத்திற்கு நடந்து தான் பட்டம் பெறவேண்டும் என்றால்... அந்த படிப்பும் பட்டமும் பதவியும் தேவையில்லை." என்பதை அனைவரும் உணர்ந்து நடக்கவேண்டும். உணர்த்தப்படல் வேண்டும்.
இவர்களைப் போன்ற எத்தனை இஸ்லாமிய உறவுகள் அழகான முறையில், மரியாதையாக கெம்பஸ் வாழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்கின்றனர் என்பதை ஏன் எண்ணிப்பார்ப்பதில்லை.
இவற்றை ஆழமாக சிந்திப்பதும், அவசரமாக ஓர் தீர்வை அமுல்படுத்துவதும் இன்றைய காலத்தின் அவசிய, அவசரத் தேவையாகும். இதற்கு மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மார்க்க அறிஞர்கள், பள்ளி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரதும் பங்களிப்பு கட்டாயம் வேண்டும். அப்போது தான் ஒரு நல்ல, சீரான சமுதாயமாக எம் இளம் தலைமுறையினரை உருவாக்கலாம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
இன்ஷாஅள்ளாஹ்!
(கட்டுப்பாடு மீறி நடப்பவர்களுக்கு மட்டும்)
பெரும்பாலான பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களுக்கு மறுமையுடைய விடயங்களை பேசுகின்ற சபைகள் கிடைப்பது குறைவு.அதனால் அவர்களது உள்ளங்கள் உலக கவர்ச்சியிலும் பரபரப்பிலும் கட்டுண்டு ஈமானிய பலத்தை இழந்துவிடுகின்றன.அதனால்தான் இஸ்லாத்திற்கு மாற்றமான இந்நிலை.இஸ்லாத்தை நடைமுறையில் காண வேண்டுமென்றால் மறுமை பற்றிய சிந்தனை தொடர்ச்சியாக ஊட்டப் பட வேண்டும்.அதனால்தான் கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் அடிக்கடி அறிஞர்களை ஓன்றுகூட்டி மரணத்தைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் பேசச் சொல்லுவார்கள். எனவே ஈமானிய உணர்வுள்ள விரிவுரையாளர்கள் அல்லாஹ் தந்த செல்வாக்கை பயன்படுத்தி மறுமை மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகளை பேணல் தொடர்பான சொற்பொழிவுகளையும் ஆன்மீகப் பயிற்சிகளையும் தொடராக ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் இடம் பெறச் செய்வதனூடாக நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்கலாம்.
ReplyDeleteWell said Aariff Ali
ReplyDeleteஆம்.Aariff Ali சொன்னதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ReplyDelete