முஸ்லிம் மாணவர்கள் மைத்தானத்தை, பயன்படுத்த பொலிஸார் தடைவிதிப்பு
மும்மான்ன முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் 38 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்திவந்த பாடசாலை விளையாட்டு மைத்தானத்தை பயன்படுத்த பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு மேலாக குருநாகல் மும்மான்ன முஸ்லிம் வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானம் தொடர்பில் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலை தொடர்ந்தது.
இதனை ஊர் பிரமுகர்கள் ஒன்றிணைந்து முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கைகூடவில்லை. மும்மான்ன முஸ்லிம் மக்களின் பொருளாதாரத்தை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கிலும் இனவாதிகள் பாரிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் முஸ்லிம்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதுடன் இனவாதிகள் சமாதானமாக வாழ்வதற்கு விரும்பாதவர்களாக அவர்களது செயற்பாடுகளை தொடர்கிறது.
இந்நிலையிலேயே கடந்த பத்தாம் திகதி மேற்படி முறுகல் நிலை உருவாகியுள்ள மும்மான்ன முஸ்லிம் கிராமத்தை அண்டிய விகாரையொன்றில் ஞானசார தேரர் பங்கேற்கும் மத வழிபாட்டு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஞானசார தேரர் சர்சைக்குரிய விடயங்கள் எதனையும் அன்றைய தினம் அவரது உரையில் தெரிவிக்கவும் இல்லை. முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்தது போன்று எந்தவித அசம்பாவிதங்களும் நிகழவில்லை.
அதனால் பிரதேச முஸ்லிம்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர். எனினும் இந்தப் பிரச்சினை இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதற்கு சான்றாகவே நேற்று முன்தினம் கல்விக் காரியாலயம் ஊடாக மைதானத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் தெரிவித்ததாவது,
கடந்த 24 ஆம் திகதி வழமை போன்று மாணவர்கள் உடற்பயிற்சி நேரத்தில் விளையாட்டு மைதானத்துக்குச் சென்று அவர்களின் வழமையான பயிற்சியில் ஈடுபட்டதுடன் சில மாணவர்கள் அங்கிருந்த காடுகளையும் துப்புரவு செய்துள்ளனர்.
இதனை ஒரு சிலர் தூர இருந்து வீடியோ செய்துள்ளதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக கிரியுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு வினவியுள்ளதுடன் சற்று நேரத்தில் பொலிஸாரும் பாடசாலைக்கு வந்தனர். அவர்களது கோரிக்கை பிரச்சினை ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாமென்பது.
அத்தோடு அதன் பின் அங்கு விஜயம் செய்த உதவிக்கல்விப் பணிப்பாளர் பதிவுப் புத்தகத்தில் “பாடசாலை மைதானம் தொடர்பாக சர்ச்சை நிலவுவதால் பாடசாலை மாணவர்களோ ஆசிரியர்களோ ஊழியர்களோ பாடசாலை மைதானத்துக்கு போக வேண்டாமென்று அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்” என எழுதியுள்ளார்.
மும்மான்ன பாடசாலை மாணவர்களுக்கென ஒரு மைதானம் இல்லாத நிலையில் சர்சையை தீர்த்துவைக்காது கல்வித் திணைக்களமும் பொலிஸாரும் நடந்து கொள்ளும் முறை நியாயமானதா என பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கேள்வி எழுப்புகிறது.
Post a Comment