Header Ads



இலங்கை முஸ்லிம்கள், ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களா..?

-அஸ்லம்-

"கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்­கையை சேர்ந்த 45 பேர் இரகசியமாக சிரியாவை சென்றடைந்துள்ளனர். அவர்களில் பலர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கபெற்றன. "

இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன.
(Jaffnamuslims இணையத்தளம்)

இவ்வாறான அறிக்கைகள் மூலம் நாம் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என அறிய முடிகிறது

இன்று இனவாத சக்திகளாக  உருவெடித்திருக்கும்  முஸ்லீங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பாஸிஸ நடவடிக்கைகள் சாதாரானமாக எடை போட முடியாது கிட்டிய கால இடைவெளிக்குள் முஸ்லிம்களின் 40க்கும் அதிகமான இறையில்லம் இனவாதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளமை, இலங்கை வாழ் முஸ்லிம்களின் எதிர்கால இருப்புக்கு இனவாதிகள் விடுக்கும் மிகப்பெரும் அபாய சமிக்ஞையாகவே கருதவேண்டியுள்ளது.

தம்புள்ளை மஸ்ஜிதுல் கைராத்தில் ஆரம்பித்து, குருநாகல் குர்ஆன் மத்ரஸா வரை சென்று, இன்று தெஹிவளை தாருர் ரஹ்மான் இறையாலயத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வரை இறையில்ல ஒழிப்பு நடவடிக்கை நீண்டு செல்வது, இந்நாட்டின் புர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் கலாசார மையங்களை அழித்து, முஸ்லிம்களின் இருப்புக்கான வரலாற்று சுவடுகளை கூட எச்சங்களாய் மிச்சம் வைக்கக் கூடாது என்ற இனவாத சிந்தனையின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலை துள்ளியமாய் எடுத்துக்காட்டுகின்றது.
தொப்புல் கொடி உறவாய் ஒன்றித்து வாழ்ந்து, இலங்கை தேசத்தின் சுதந்திரத்திற்கும் சுபீட்சத்துக்குமாய் அளப்ரிய தொண்டாற்றிய முஸ்லிம்களை கருவறுக்க முயலும் இனவாதக் காடைத்தனம் இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. 1900ஆம் ஆண்டளவில் ‘சிங்கள ஆதிக்கம் இலங்கை மண்ணில் நிறுவப்பட வேண்டும்’ என்று அநகாரிக தர்மபாலவினால் விதைக்கப்பட்ட முஸ்லிம் விரோத மனப்பான்மை இன்று நீருபுத்த நெருப்பாய் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது.

1915ஆம் ஆண்டு கம்பளையில் முஸ்லிம்களை கருவறுப்பதில் ஆரம்பித்த முஸ்லிம் எதிர்ப்புப் படலம் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதையடுத்து விஷ்பரூபம் எடுக்கலானது. 1974ஆம் ஆண்டு மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராய் தோற்றுவிக்கப்பட்ட இனவன்முறை, 1976ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலில் 7 உயிர்களை காவுகொண்ட காடைத்தனம், 1980ஆம் ஆண்டு கொம்பனித்தெரு பள்ளிவாசலில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சுடு, 1982ஆம் ஆண்டு காலியில் தீக்கிரையாக்கப்பட்ட கடைத்தொகுதிகள், 1983ஆம் ஆண்டு ஜூலைக் கலவரத்தில் பலிகடாவாக்கப்பட்ட 10 க்கு மேற்பட்ட முஸ்லிம் உயிர்கள், 1990 களில் கொதிநிலைக்கு வந்த திக்குவல்லை சம்பவம், தீகவாவி பொன்னன்வெளி வன்முறைகள், ஹிரிப்பிட்டிய பள்ளிவாயல் எரிப்பு, அளுத்கமை இனப்பகைமை, கலகெதர மோதல், வட்டதெனிய கைகலப்பு, திஹாரிய இனமுறுகல், 1999ஆம் ஆண்டு பன்னல எலபடகம பிரதேசத்தில் தீ வைத்து கொழுத்தப்பட்ட சொத்துக்கள், 2001ஆம் ஆண்டு மாவனல்லையில் அரங்கேற்றப்பட்ட இனவன்முறைத் தாக்குதலும் பொருளாதார ஒழிப்பு எத்தனங்களும், 2002ஆம் ஆண்டு பேருவலையில் தூபமிட்டு வளர்க்கப்பட்ட இனமோதல்கள் உள்ளிட்ட முஸ்லிம்களுக்கெதிரான அத்தனை அடாவடித்தனங்களும் இனவாதிகளின் நெறிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் வரலாறு நெடுகிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதனை வௌ்ளிடை மலையாய் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

மாறி மாறி ஆட்சிக்கதிரையில் அமர்ந்த இரு பிரதான கட்சிகளான பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இவைகளுக்கு ஒத்தூதும் வலது சாரி இடது சாரி கட்சிகள் யாவும் முஸ்லிம்களை கருவறுக்கும் பணியினை கையிலெடுக்கத்தவறவில்லை. DS இல் ஆரம்பித்து JR வரைக்கும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பெரும்பான்மை குடியேற்றங்களை நிறுவியதன் மூலம் முஸ்லிம்களின் சனச் செறிவை மட்டுப்படுத்தும் தந்திரோபாயங்கள் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளன. JR இனால் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் விளைவாக வடக்கு - கிழக்கை தாண்டிய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாத அரசியல் வங்குரோத்து நிலை முஸ்லிம்களுக்கு பீடிக்க வழிக்கோலியது. இனவாதத்தின் இச்சங்கிலித் தொடரின் ஒரு கட்டமே இன்று தம்புள்ளையிலும், குருநாகலையிலும், தெஹிவலையிலும் எதிரொலிக்கிறது.

எனவே, முஸ்லிம் சமூகத்தின் வாழ்வுரிமை, வழிபாட்டு உரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமை போன்றவற்றை வென்றெடுப்பதாயின் அதற்கான மாற்றுப்பரிகாரம் என்ன? இருக்கும் ஆட்சியை மாற்றுவது மட்டும் இதற்கு தீர்வாகுமா? வரலாறு அதனை பொய்ப்பித்துவிட்டது. இரண்டாவது பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்த்தால் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நப்பாசையும் இன்று சிலரால் விதைக்கப்பட்டு வருகிறது. 1992 ஆம் ஆண்டு வடபுல மண்ணிலிருந்து ‘வடக்கு தமிழர்களின் தாயகம்’ என்ற கோஷத்தின் கீழ் முஸ்லிம்களை புர்வீக புமியை விட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அகதிகளாய் துரத்தியடித்து, காத்தான்குடியிலும் ஏராவுரிலும் பல உயிர்களை சுட்டுக்கொன்றது மட்டுமின்றி, வடக்கிலும் மன்னாரிலும் முஸ்லிம்களின் சொந்த இடங்களில் அவர்களை மீள்குடியேற்றுவதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் ஒரு சாராருடன் இணைந்து எம் உரிமைகளை பெறலாம் என்று நினைப்பது அறிவுடைமையாகமாட்டாது.

இன்றைய இவ்வினவாத சுழலில் முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டிய முப்பெரும் சவால்கள் உள்ளன.

1.இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும், பள்ளிவாசல்களின் செயற்பாடுகள் குறித்தும் இனவாத சக்திகளினால் மீடியாக்கள் வாயிலாக பெரும்பான்மை பொது மக்களிடம் பரப்பப்பட்டு வரும் அவதூறுகள் மற்றும் போலிப்பிரசாரங்களுக்கு அறிவார்ந்த விளக்கங்களை வழங்கி, இஸ்லாத்தின் மீதான கறைகளை அகற்றி, முஸ்லிம்கள் பற்றிய நல்லென்னத்தை பெரும்பான்மை மக்களிடம் விதைப்பது.

2.பரிக்கப்படும் அரசியல் மற்றும் மத உரிமைகளை சாத்வீக ரீதியாக வென்றெடுப்பதற்காக, அதிகார கதிரைகளுக்கு விளைபோகாத, இஸ்லாமிய விழுமியங்களை விட்டும் விலகிச்செல்லாத, சமூகப்பற்றுள்ள, அரசியல் சாக்கடையில் வீழ்ந்து தனித்துவம் கரைந்துபோகாத, கட்சி அரசியலுக்கு அப்பால் செயற்படக்கூடிய ‘அரசியல் அழுத்தக் குழு’ ஒன்றினை உருவாக்குதல்.

3.முஸ்லிம் சமூகத்தின் குரலை அனைத்து மட்டங்களிலும் ஓங்கி முழங்கச் செய்யும் விதத்தில் சட்டவல்லுணர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொடர்புடக துறை விற்பண்ணர்கள் போன்றோரை திட்டமிட்டு உருவாக்குவதோடு, எமக்கென்று ஒரு நாளாந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செனல் ஒன்றை உடனடியாய் உருவாக்குதல்.

முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளும், புரவலர்களும், சமூக ஆர்வலர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் இது குறித்து சிந்திப்பார்களா?

No comments

Powered by Blogger.