ஹஜ் - உம்ரா நூல் விமர்சனம் .
-யாழ் அஸீம்-
'அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜுக்கான கூலி சுவர்க்கமே அன்றி வேறில்லை' (புஹாரி, முஸ்லிம்)
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையைப் பலர் நிறைவேற்றி வருகின்றனர். ஆனாலும் அவர்களது ஹஜ் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படும் போதுதான் அந்த ஹஜ்ஜுக்கான கூலியான சுவர்க்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே ஹஜ், பற்றிய ஆழ்ந்த அறிவையும், அக்கடமைகளின் போது நிறைவேற்றப்படும் ஒவ்வொரு கிரியைகளுக்கான காரணத்தையும் பின்னனியையும் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்.
அவ்வகையில் ஹஜ் - உம்ரா பற்றிய தெளிவான விளக்கங்களுடனும், விரிவான விபரங்களுடனும், விளக்கப்படங்களுடனும் கூடிய ஒரு நூலை பன்னூலாசிரியரும், பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஐ.எம். அமீன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
அல்ஹஸனாத் வெளியீடான இந்நூலுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்.ஏ. முபாரக், முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.எச்.எம். ஸமீல் ஆகியோர் வழங்கியிருக்கும் அணிந்துரைகள் இந்நூலின் தரத்துக்கு சிறந்த சான்றுகளாகும்.
'ஹஜ்ஜுக்கு நாட்டம் வைத்தோரை அழைத்துச் சென்று செய்விப்பது போன்ற ஒரு உணர்வை இப்புத்தகம் தருகின்றது. ஹஜ்ஜின் அமல்களோடு சம்பந்தப்படுகின்ற விடயங்களை சரித்திரச் சான்றுகளுடன் எடுத்துச் சொல்வது மிகவும் விசேடமாக அமைந்திருப்பதுடன் சட்ட நுணுக்கங்களையும் அவ்விடங்களில் கூறியிருப்பது பொருத்தமாக அமைந்துள்ளது' என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்.ஏ. முபாரக் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
'தக்வாவை பெற்றுக் கொள்வதற்கும், ஹஜ்ஜை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கும், ஹஜ் தொடர்பான விடயங்கள் பற்றிய அறிவு மிக முக்கியமானதாகும். அந்த வகையில் எம்.ஐ.எம். அமீன் அவர்களது 'ஹஜ் - உம்ரா' என்னும் நூல் ஹஜ், உம்ரா பற்றிய பூரண அறிவை வழங்கும் ஒரு நூலாக அமைந்துள்ளது. மேலும் இந்நூலானது ஹஜ் தொடர்பான சகல விடயங்களையும் ஆய்வுக்குட்படுத்தியிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும்' என முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.எச்.எம். ஸமீல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
ஹஜ் வணக்கத்தின் உயிர் நாடி அல்லாஹ்வை நினைவில் இருத்தல் என்ற தலைப்பில் ஹஜ்ஜின் தத்துவத்தை சிறப்பாக எடுத்துக் கூறும் ஆசிரியர், வீட்டில் இருந்து புறப்பட்டு ஹஜ்ஜை முடிக்கும் வரையில் தேவைப்படும் அறிவுறுத்தல்களை, ஹஜ் ஒரு நடைமுறை விளக்கம் என்ற தலைப்பில் விரிவாக எழுதியுள்ளார். அத்துடன் ஹஜ் வணக்கத்துடன் தொடர்புடைய இடங்களையும், ஹஜ் கடமையுடன் தொடர்பில்லாத ஹாஜிகள் தரிசிக்கும் இடங்களையும் பற்றிய விரிவான விளக்கமும் வரலாற்றுப் பின்னனியும் சிறப்பாக இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சட்டக் கலை, இஸ்லாமிய நாகரிகம், அரேபியர் வாழ்வில், இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் போன்ற பதினெட்டு நூல்களை எழுதியுள்ள அனுபவமும், ஆற்றலும் நிறைந்த எம்.ஐ.எம். அமீன் அவர்களது ஹஜ் - உம்ரா என்னும் இந்நூலானது ஒவ்வொரு ஹஜ், உம்ரா யாத்திரிகர்களும் படித்து பயன்பெற வேண்டிய நூலாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்நூல் கிடைக்குமிடம்:
இஸ்லாமிக் புக் ஹவுஸ்
77, தெமட்டகொட வீதி
கொழும்பு - 09
Everything is fine but except one.the money which is v r spending should have been earned halal.otherwise useless.
ReplyDelete