Header Ads



வடகிழக்கு இணைப்புக்கு, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை - அடித்துக்கூறும் ஹிஸ்புல்லாஹ்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதன் மூலமே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப் பெற முடியும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்று வரும் நிலையில், வட கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அது இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது எனவும் மீள்குடீயேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இப்பிரச்சினை தலைதூக்கிய ஆரம்ப காலம் முதல் அதனை வெளிப்படையாக எதிர்த்து வரும் அரசியல்வாதி என்ற வகையில் அன்றும் இன்றும் ஒரே நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். 

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதனை நான் பல தடவைகள் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தியுள்ளேன். எனினும், இனப்பிரச்சினைக்கு வடகிழக்கு இணைப்பு தான் ஒரே தீர்வு என தமிழ் அரசியல் தலைமைகள் கருதுமானால் அதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது – உடன்படவும் முடியாது. 

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்போது ஏற்பட்டுள்ள அமைதி நிரந்தரமாக நீடிக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும், இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்பதிலே நாம் மிகத்தெளிவாக இருக்கின்றோம். ஆனால், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதன் மூலம் அது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. 

ஆகவே, இனப்பிரச்சினைக்கு தீர்வு வடக்கு கிழக்கு இணைப்பு அல்ல. மாறாக, நாட்டில் உள்ள 9 மாகாணங்களும் தனித்துவமாக இயங்கக்கூடிய வகையில் 13 ஆவது திருத்தச் சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்பட வேண்டும். 

பொலிஸ், காணி போன்ற அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் தமது மாகாணத்துக்கு தேவையானவற்றை நிறைவேற்றக் கூடியவர்களாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைந்திருந்த போதே நாங்கள் முஸ்லிம்களுக்கு தனி அலகு வேண்டும் என வலியுறுத்தினோம். எனினும், இன்று வடக்கு கிழக்கு பிரிந்துள்ள நிலையில் எமக்கு தனி அலகு அத்தியவசியமில்லை. 

த.தே.கூ. கூறுவது போன்று வடக்கு கிழக்கு இணைக்கப்படுமாயின் அதில் முஸ்லிம்களின் விகிதாசாரம் 16 %  ஆகும். அதனால் முஸ்லிம்களின் தேவை அங்கு நிறைவேற்றப்படும் என்று உறுதியாக கூற முடியாது. – என அவர் மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. Welcome you Sir.....Within separated north and east provinces, we want an united independent province for us.

    ReplyDelete
  2. எழகிரி... இதை வரவேற்கின்றோம்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் உறுதியுடன் இருங்கள் வெற்றி நிச்சயம் பணத்துக்காக பேரம் போகும் அரசியல் வாதிகலை விட நீங்கள் மேல்,

    ReplyDelete

Powered by Blogger.