Header Ads



இது புன்னகைக்கும் விஷயம் இல்லைங்க..!

டூத் பேஸ்ட் விளம்பரங்களில் ஒரு பிரஷ் முழுக்க பேஸ்ட்டைப் பிதுக்கிப் பல் துலக்குவதைப் பார்த்திருப்போம். உண்மையில் அவ்வளவு பேஸ்ட்டைப் பயன்படுத்தக் கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? டூத் பேஸ்ட்டில் ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசயானப் பொருட்கள் உள்ளன. எனவே,  ஒரு பட்டாணி அளவு எடுத்துத் பல் துலக்கினாலே போதும்; அதற்கு மேல் சேர்ப்பதால், அளவுக்கு அதிகமான ஃபுளோரைடு உடலில் சேரும்.

'அப்ப, ஃபுளோரைடு பல்லுக்கு நல்லது இல்லையா ?' என்று கேட்கலாம். எதுவும் அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்துதான்! ஃபுளோரைடு கலந்த பற்பசைகளைப் பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம் வசிக்கும் இடத்தில் , நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள ஃபுளோரைடின் அளவைப் பொறுத்து இந்த அறிவுரை மாறுபடும். ஃபுளோரைடு இயற்கையாகவே கிடைக்கும் ஒரு தாதுஉப்பு. அது நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ஃபுளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்குப் பற்குழி விழுவது குறைகிறது, அல்லது தவிர்க்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும், அளவுக்கு அதிகமாக ஃபுளோரைடு உபயோகிப்பதால், பற்களுக்கு ஊறு ஏற்படும்; அது மட்டும் அல்லாமல், உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

'அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான எஃப்டிஏ (FDA), ஃபுளோரைடு கலந்த பற்பசைகளில் ஓர் அறிவுரையை அச்சிட அறிவுறுத்தி உள்ளது.  "இந்தப் பற்பசைகள் குழந்தைகள் கையில் எட்டாத உயரத்தில் வைக்கப்பட வேண்டும்.  இந்தப் பற்பசைகளை அவர்கள் அளவுக்கு அதிகமாக உண்டுவிட்டால், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்" என்று அச்சிட வேண்டும் என எஃப்டிஏ அறிவுறுத்தி உள்ளது.

அதிக அளவு ஃபுளோரைடு உபயோகம், ஃபுளோரோசிஸ் எனும் பற்சிதைவு ஏற்படக் காரணமாகிறது. குழந்தைகளுக்குப் பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ஃபுளோரைடு உபயோகித்தால், பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக்கூடும். பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1000ppm அளவுக்கு மிகாமலும், சிறுவர்களுக்குக்கான பற்பசையில் 500ppm அளவுக்கு மிகாமலும் ஃபுளோரைடு  இருக்க வேண்டும்.

பேஸ்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

1.வண்ண நிறங்கள்கொண்ட பேஸ்டைவிட வெள்ளை நிறத்திலான பேஸ்ட் சிறந்தது. 

2.ஃபுளோரைடு குறைந்த பேஸ்ட்டா எனப் பார்த்து வாங்கலாம்.

3.குழந்தைகளுக்காக வாங்கும்போது ஃபுளோரைடு இல்லாத பேஸ்ட் வாங்குவதே நல்லது.

4.ஜெல் பேஸ்ட்டுகள் பற்களின் எனாமலைப் பாதித்து, தேய்மானத்தை ஏற்படுத்தும் என்பதால், க்ரீம் பேஸ்ட்டுகளே சிறந்தவை.

5. 'அப்ராசிவ்ஸ்' (Abrasives) எனப்படும் கறைநீக்க வேதிப் பொருட்கள் விகிதம் அதிகம்  உள்ள பற்பசைகள் பற்களைப் பாதிக்கும். எனவே, இதன் அளவையும் கவனித்து வாங்கவும்.

6.சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்சைடு உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கலந்த பேஸ்ட்டுகளைத் தவிர்க்க வேண்டும்.

No comments

Powered by Blogger.