ஹஜ்ஜின் போது, ஷைத்தானுக்கு கல்லெறியும் நேரம் குறைப்பு
(எம்.ஐ.அப்துல் நஸார்)
கடந்த வருட ஹஜ் யாத்திரையில் கல்லெறியும் கடமையின் போது நெரிசலில் சிக்கி சுமார் 2,300 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஹஜ் கடமையின்போது இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஹஜ்ஜின் போது நிறைவேற்றப்படும் ஜம்றத் அனுஷ்டானத்தின் நேரம் 12 மணி நேரத்தால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமை போன்று மக்காவிலுள்ள பெரிய பள்ளிவாசலுக்குத் கிழக்கே சுமார் ஐந்து கிலோமீற்றர் (மூன்று மைல்) களுக்கு அப்பால் அமைந்துள்ள மினாவில் செப்டம்பர் 11ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்களுக்கு ஷைத்தானுக்கு கல்லெறியும் அனுஷ்டானம் இடம்பெறும்.
ஆனால் இவ்வருடம் கல்லெறியும் முதலாவது நாளில் காலை 06.00 மணி தொடக்கம் 10.30 மணி வரையும், இரண்டாவது நாளில் பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 6.00 மணிவரையும், மூன்றாவது நாளில் முற்பகல் 10.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரையும் கல்லெறிவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ஹஜ் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையின் காரணமாக யாத்திரிகர்கள் இலகுவாக கல்லெறிய முடியும் என்றும் அதிகமானோர் ஒரே நேரத்தில் ஒன்றுகூடுவதால் ஏற்படும் நெரிசலைக் குறைக்க முடியும் என்றும் அமைச்சின் கீழ்நிலைச் செயலாளர் ஹுஸைன் அல்-ஷரீப் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தப் புதிய நேர வரையறை யாத்திரிகர்கள் நெரிசலை எவ்வாறு குறைக்கும் என அவர் விளக்கவில்லை.
ஹஜ் வரலாற்றில் கடந்த வருடம் நடைபெற்ற சன நெரிசலே மிக மோசமானதாகும். இந்த சனநெரிசல் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான செலவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான ஐந்து தட்டுக்களைக் கொண்ட ஜம்ரத் பாலத்திற்கு வெளிப்புறத்திலேயே நடைபெற்றது.
இந்தப் பாலம் கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் (அரை மைலுக்கும் அதிகமான) நீளமுடையது. இதன் மூலம் ஒரு மணித்தியாலத்தில் மூன்று இலட்சம் யாத்திரிகர்கள் கல்லெறியும் கடமையினை நிறைவேற்ற முடியும்.
நெரிசலுக்கு காரணம் பொலிஸாரினால் வீதி முடப்பட்டிருந்தமை, வாட்டும் வெயிலில் இலட்சக் கணக்கான யாத்திரிகர்களை உரிய முறையில் கையாளத்தவறிய முகாமைத்துவம் ஆகியவை என யாத்திகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சம்பவம் நடைபெற்றதும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், ஹஜ் குழுவின் தலைவருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் நாயிப் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் அதன் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை. எவ்வாறெனினும், கல்லெறியும் நேர அட்டவணை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வெளிநாட்டு அதிகாரிகளின் தகவலுக்கு அமைவாக செப்டம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்த யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்தது 2,297 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிலரின் உடல்களை அடையாளம் காண முடியாதுள்ளதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 796 என சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
சன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக ஹஜ்ஜின் ஆரம்பத்தின்போது புனித பெரிய பள்ளிவாசலில் வழக்கமான நாளாந்த தொழுகைகளுக்கு ஒரு மணிநேரம் முன்னரும், ஒரு மணிநேரம் பின்னரும் கஃபாவை தவாப் செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் சவூதி ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வருட ஹஜ் செப்டம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகிறது. ஆனால் இலட்சக் கணக்கான யாத்திரிகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து ஏற்கனவே வந்து சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment