இஸ்லாம் யார் சொத்து..?
-காலித் பைக்-
சில முஸ்லீம் அறிஞர்களும், முஸ்லீமல்லாத அறிஞர்களும் சில ஆண்டுகளுக்குமுன் ஒரு மாநாட்டில் ஒன்று கூடினர். ‘கோலாலம்பூர் சர்வதேச இஸ்லாமியப் பேரவை’ என்ற பெயரில் இம்மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டின் நோக்கம் இஸ்லாம் பற்றி சரியான, ‘முன்னேற்றமான’ அர்த்தங்களை வளர்ப்பதாகும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த மாநாட்டை நடத்தியவர்களின் கூற்றுப்படி, மிதமான, நவீனமயமான, சுதந்திரமான, ‘முன்னேற்றமான’ இஸ்லாம் குறித்துப் பேசி, இஸ்லாத்தின் ‘இமேஜை‘ உயர்த்திப் பிடித்து, முஸ்லீமல்லாத உலகத்தை இஸ்லாத்தின்பால் ஈர்த்திடுவது என்பதே இந்த மாநாட்டின் நோக்கம் என்று கூறப்பட்டது.
இது எப்படி சாத்தியமாகும்?
ஒரு வழக்கறிஞர் அதற்கு இவ்வாறு பதிலளிக்கிறார்: ‘இதன் விடை மிக எளிது. ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லது குழுவுக்கும் தான் எதை விசுவாசிக்கின்றானோ அதனைச் சொல்லும் உரிமை இருக்கிறது. எல்லா முஸ்லீம்களும் பொதுப்பிரச்சனைகளில் தங்கள் கருத்துகளை, தாங்கள் விளங்கி வைத்தவைகளை எடுத்துச் சொல்லலாம். இந்த கருத்துகளை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது மீதியுள்ள மக்களின் கையில் உள்ளது. அதனால் நாம் பாதுகாப்பான தளத்தில் நின்றுகொண்டு இஸ்லாம் எனும் ‘பிராண்டை’ அதனை விரும்புகின்றவர்களுக்கு விற்கலாம்.’
இவர்களுக்கு இஸ்லாம் என்பது சோப்பு, சீப்பு, கண்ணாடி, பவுடருக்கு அடுத்தபடியாக பேட்டி நிறைந்த இந்த உலகின் விற்பனைப் பொருள்.
இஸ்லாம் மனிதன் உருவாக்கிய விற்பனைப் பொருளல்ல. இஸ்லாம் இவ்வுலகைப் படைத்த அல்லாஹ்வால் வெளிப்படுத்தப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்.
இங்கு இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். ஒன்று, இது அல்லாஹ்வால் நெறிப்படுத்தப்பட்ட மார்க்கம். இரண்டாவதாக, இது அல்லாஹ்வால் போற்றிப் பாதுகாக்கப்படும் மார்க்கம்.
இந்த இரண்டு விஷயங்களும் மற்ற மதங்களுக்கு இல்லை. ஆதலால், இஸ்லாத்தை ‘நவீனப்படுத்தவும்’ தேவையில்லை. ‘முன்னேற்றவும்’ தேவையில்லை. சிலர் நாம் ‘இஜ்திஹாத்’ செய்யலாம் என்று எண்ணுகின்;றனர். ‘இஜ்திஹாத்’ என்ற பதத்திற்கு சாதாரணமாக உச்சக்கட்ட முயற்சி எடுப்பது என்று பொருள் கொள்ளப்படும்.
உள்ளார்ந்த அர்த்தம் என்னவெனில், எந்தப் பிரச்சனைக்கும் குர்ஆனும், சுன்னாவும் நமக்குத் தெளிவு காட்டாத விஷயத்தில், அதனை அடியொட்டி நேர்மையான, நிபுணத்துவமான முயற்சி எடுப்பது என்பது இதனுள் அடங்கும்.
யார் ‘இஸ்திஹாத்’ செய்யலாம்?
பொதுவாகச் சொல்லப் போனால், யார் வேண்டுமானாலும் ‘இஜ்திஹாத்’ செய்யலாம். ஆனால் அது ஏற்புக்குறியது என்பது ‘இஜ்திஹாத்’ செய்பவரின் தகுதியைப் பொருத்தது. அவரது இறையச்சம், நேர்மை, உழைப்பு ஆகியவைகளைப் பொருத்தது.
இஸ்லாம் என்பது எப்போதுமே நவீனமானதுதான். அதனை யாரும் நவீனப்படுத்தத் தேவையில்லை. எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடிய மார்க்கமே இஸ்லாம். ஆனால் முஸ்லீம்களுக்கு ஒரு முக்கியக் கடமை உள்ளது. அவர்கள் முஸ்லீமல்லாத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச்சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
இஸ்லாத்தை எத்தி வைத்து விடுவது, இஸ்லாத்தின்பால் மக்களை அழைத்திடுவது என்பது ஒவ்வொரு முஸ்லீமின் கடமையாகும். இஸ்லாம் பற்றி பிறமதச் சகோதரர்களிடம் இருக்கும் சந்தேகங்களை முஸ்லீம்கள் போக்கிட வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அழகாகவும், அமைதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் நாம் பதிலளிக்க வேண்டும். அந்த பதிலில் நேர்மை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும்.
ஆனால் அதனை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளமலிருப்பதும் பிறமதச்சகோதரர்களின் கையிலுள்ளது. எத்தி வைப்பது ஒன்றே நமது கடமை. மதத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை திருக்குர்ஆன் மிகத்தெளிவாக இப்படி எடுத்துரைக்கின்றது:
‘இஸ்லாம் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை’ (அல்குர்ஆன் 2:256)
இஸ்லாம் மார்க்கம் அல்லாஹ்வினக் சொத்து
இஸ்லாம் மார்க்கம் என்பது அல்லாஹ்வினக் சொத்து. அது எப்படி இறைவனிடமிருந்து வந்ததோ அதே போல் அது அனைவருக்கும் எடுத்து வைக்கப்பட வேண்டும். அதில் ஒரு சிறு மாற்றமும் இருக்கக்கூடாது.
திருக்குர்ஆன் தெள்ளத்தெளிவாகக் கூறுகின்றது:
‘எங்களுடைய தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதேயன்றி, (உங்களை நிர்பந்திப்பது) எங்கள் மீது கடமையில்லை என்று கூறினார்கள்.’ (அல்குர்ஆன் 36:17)
‘நிச்சயமாக இது நல்லுபதேசமேயாகும். விரும்பியவர் தன் இறைவன்பால் செல்லக்கூடிய (நேரான இதன்) வழியை எடுத்துக்கொள்ளவும்.’ (அல்குர்ஆன் 76:29)
இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் இணைவைப்பாளர்கள் இஸ்லாத்திற்கும், இறைநிராகரிப்புக்கும் (குஃப்ர்) இடையில் சமரசம் செய்வதற்கு பலதடவை முயன்றார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம், முஸ்லீம்கள் ஒருசில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதுதான். எல்லாவற்றையும் அல்ல. அதாவது கொஞ்சம் இஸ்லாத்தை ‘நவீனப்படுத்தினால்’ போதும் என்றார்கள்.
அந்த ‘விட்டுக்கொடுத்தல்’ என்பது வேறு ஒன்றுமல்ல, ஒரே ஓர் இறைவனை வணங்குவதோடு, இணைவைப்பாளர்களது கடவுள்களையும் வணங்க வேண்டும். அவ்வளவுதான். (நவூதுபில்லாஹ்)
இந்த பின்நவீனத்துவ காலத்திலும் இதே நிலைதான். பின்நவீனத்துவ காலத்தின் பாணி என்னவென்றால், கொஞ்சம் (விட்டுக்) கொடுத்துவிட்டு, கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம். ஆதலால் இஸ்லாமும், இறைநிராகரிப்பும் எந்தப்புள்ளியில் சந்திக்குமோ அந்தப்புள்ளி வரை கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாம்.
ஆனால், திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது:
‘உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு, என்னுடைய மார்க்கம் எனக்கு’ (அல்குர்ஆன் 109:6)
திருக்குர்ஆன் இதன்மூலம் இந்த ‘விட்டுக்கொடுத்தல்’ என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இஸ்லாத்தையும், இறைநிராகரிப்பையும் ஒன்றாக ஒரே சங்கிலியில் போட்டுப் பிணைக்கும் முயற்சியை இஸ்லாம் அடியோடு தடைசெய்து விட்டது.
இந்த ‘காஃபிரூன்’ (109 ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ் எந்த அளவுக்கு முக்கியத்துவமாக ஆக்கிவிட்டான் என்றால், இந்த அத்தியாயத்தை ஒவ்வொரு நாளும் படுக்கைக்குச் செல்லும் முன் நாம் ஓத வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளோம். அதுமட்டுமின்றி, ஃபஜ்ர் மற்றும் மஃக்ரிப் ஆகிய தொழுகைகளின் வலியுறுத்தப்பட்ட சுன்னத் தொழுகைகளிலும் இந்த அத்தியாயத்தை ஓதும்படி அறிவுருத்தப்பட்டுள்ளோம்.
இறைநிராகரிப்பில் உள்ளவர்களுக்கு அதிலேயே இருப்பதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், முஸ்லீம்களுக்கு இஸ்லாத்திலிருந்து எதனையும் கூட்டவோ, குறைக்கவோ அதிகாரம் கிடையாது.
இன்றைய நவீன செய்தி ஊடகம் (மீடியா) பகலை இரவாக்கிக் காட்டுவதிலும், இரவைப் பகலாக்கிக் காட்டுவதிலும் வல்லமை படைத்திருக்கிறது. அதற்காக நாம் அதற்கு வலைந்து கொடுக்க முடியுமா? இஸ்லாத்தை விட்டுக்கொடுக்க முடியுமா? ஒருபோதும் முடியவே முடியாது.
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த சோதனையே என்றுதான் ஒரு முஸ்லீம் எண்ணுவான்.
''(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்;. ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன்
3:186)
மீடியாக்கள் எவ்வளவு வலுவானதாக இருந்தாலும் சரி, அது எவ்வளவு வலுவாக இஸ்லாத்திற்கெதிராகப் பிரச்சாரம் செய்தாலும் சரி, அதனால் விளையப்போகும் ஆபத்துகளை முஸ்லீம்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்துள்ள சோதனை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லீமுக்கு விரக்தி என்பது இல்லை. அதனால் அந்த சோதனைகளை மனம் தளராமல் எதிர்கொண்டு, சாதனைகளாக்க வேண்டும். அப்பெபாழுதுதான் இஸ்லாம் எனும் இந்த அரிய மார்க்கத்தை அனைவருக்கும் எடுத்துச் சொன்னவர்களாவோம். இந்த அருமை மார்க்கத்தை இந்த அவனியில் நிலைநாட்டிய பெரும் பேறு பெற்றவர்களாவோம்.
சிறப்பான ஆக்கம்.இதில் இணைவைப்பாளர்களிடமிருந்து நிந்தனைகளை செவிமடுப்பீர்கள் எனவும் அதன்போது பொறுமை,பயபக்தி என்பற்றை கடைபிடிப்பதை சிறப்பித்து சுட்டிக் காட்டும் அல்குர்ஆன் வசனம் நாம் தற்காலத்தில் எதிர் கொள்ளும் நிலையையும் அதன் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் நன்றாக தெளிவுபடுத்துகிறது.
ReplyDelete