Header Ads



முஸ்லிம் காங்கிரஸின், உயர்பீடக் கூட்டத்தில் அமளிதுமளி..?

-மூத்த ஊடகவியலாளர்ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (23) இடம்பெற்று சற்று நேரத்துக்கு முன்னர் முடிவடைந்துள்ளது. குறித்த கூட்டமானது கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் நியாயத்துக்காகப் பேராடுபவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலிப்பதாகவே அமைந்திருந்தது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பபட்ட நிலையில் கூவி விற்கும் மீன் சந்தையில் எழும் சத்தம் போல் காணப்பட்டுள்ளது.

தங்களது கருத்தை வெளியிடும் சுதந்திரம் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் மறுக்கப்படக் கூடாது என்ற பொதுவியல் இந்தக் கூட்டத்தில் திட்டமிட்டு புறந்தள்ளப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் தொடர்பான விடயமே பெரிதாகப் பேசப்பட்ட நிலையில், அவர் தன்னிலை வாதத்தை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் அடாவடித்தனமான முறையில் பலாத்காரமாக ஏலவே பேசி திட்டமிட்ட முறையில் மறுக்கப்பட்டது வெட்கக் கேடானது.

கொழும்பு வெக்க்ஷோல் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருல் ஸலாம் கட்டடம் மற்றும் அதன் ஊடாக கிடைக்கும் வருமானம் தொடர்பில் கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் பகிரங்கமாக ஊடகங்களுக்கு வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கருத்துகளை முன்வைத்தார். இது தொடர்பில் சுமார் அரை மணி நேரமாக தன்னிலை வாதத்தை ஹக்கீம் முன்வைத்துள்ளார். இறுதியாக அவர் இவ்வாறான விடயங்களை ஊடகங்களில் வெளிபடுத்துவதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரச்சினைகள் இருந்தாலும் எமக்குள் பேசித் தீர்ப்போம் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் தனது கருத்துகளை முன்வைப்பதற்காக எழுந்த போது, மிக மோசமான இடையூறுகள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயகப் பண்பு, கருத்துத் தெரிவிக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டு அவரைப் பேச விடாமல் பலர் தடுத்துள்ளனர்.

கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் எழுந்து தலைவரான ஹக்கீமை நோக்கி, குறித்த விடயம் தொடர்பில் தன்னால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதிலைத் தரவில்லை என்று கூறியது மட்டும்தான்.. உடனடியாக அங்கிருந்த தவம், பழீல் மன்சூர், லாஹிர் உட்பட மற்றும் பலர் பஷீரை பேசவிடாமல் தடுத்துள்ளனர். பஷீர் ஷேகு தாவூத் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் பேச முடியாதவாறு குறித்த நபர்கள் கூச்சலிட்டு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் அவர்கள், பஷீரை பேச விடுங்கள் என்று பலமுறை கேட்டுக் கொண்டும் குறித்த நபர்கள் பஷீர் உரையாற்றுவதனை முழுமையாகத் தடுத்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அமைசச்ர் ஹக்கீம் எழுந்து கூட்டத்தை உடன் முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்து விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் அவர்கள் பஷீரை பேச விடுங்கள் என்று பலமுறை கேட்டுக் கொண்டும் அதனை மீறி குறித்த நபர்கள் இடையூறு ஏற்படுத்தினார்கள் என்றால் எங்கே கட்சியின் தலைமைத்துவக் கட்டுப்பாடு? இன்றேல் இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையா? அப்படியாயின் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதாக அல்லவா அமைந்து விடும்?

ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களிடையே கருத்து மோதல்கள், முரண்பாடுகள் காணப்படலாம். ஆனால் அவற்றைப் பேசித் தீர்க்கவும் தன்னிலை வாதத்தை முன்வைக்கவும் கட்சிக்குள் ஜனநாயகம் நிலவ வேண்டும். ஆனால், இன்று முஸ்லிம் காங்கிரஸுக்குள் இவைகள் கூட இல்லாமல் போனமை வெட்க கேடான விடயம்.

பிரச்சினைகள் வந்தால் எமக்குள் பேசித் தீர்ப்பபோம் என்று ஹக்கீமும் கூறியுள்ளார். ஆனால் சிஷயர்கள் அதற்கு வழி விடுவதாக இல்லையே..?

5 comments:

  1. தலைமை சரியில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதில் மாற்று கருத்துக்கே இடம் இல்லை. உண்மையான முஸ்லீம் காங்கிரஸ் போராளிகள் இந்த மாற்றத்தை ஏட்படுத்துவதட்கு முன் வருவார்களா? அப்படி மாற்றம் வராது விட்டால் அதன் பலனை நிட்சயமாக எதிர் காலத்தில் முஸ்லிம்களும் முஸ்லீம் காங்கிரசும் அறுவடை செய்யும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

    அடிப்படையில் தலைமைத்துவத்தில், மாற்றம் வேண்டும் என்பதை உளத் தூமையுடன் பஷீர் சேகு தாவுத் முன்னெடுப்பாரானால், அவரது கரம் பலப்படுத்தப்பட வேண்டும். அதை செய்து முடிக்கக் கூடிய அத்தனை துணிவும் ஆற்றலும் அவரிடம் உண்டு என்பது எமது கணிப்பாகும். நேற்று வந்த இந்த காளான்களும், அட்டைகளும் இப்படி தன்னிலை மறந்து கூத்தடிக்கும் போது ஆரம்பகாலத்து, தங்களது வாழ்க்கையையே இந்த கட்சிக்காக, சமூகத்தின் உரிமைக்காக அர்ப்பணித்த சிங்கங்கள் அமைதி காத்தது போதும் களத்தில் இறங்குங்கள். நீதியை நிலை நாட்டுங்கள்.

    இந்த முஸ்லீம் சமூகத்தின் நன்மைக்காக புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும் மாற்றத்துக்கான தங்களது பங்களிப்பை செய்வார்களா?????

    ReplyDelete
  2. இ்து தி்ட்டமிடப்ப்ட்ட சதியாக இருக்கலாம் இதெல்லாம் என்ன ்பெரிய விசயமா

    ReplyDelete
  3. வாழ்க்கை ஒரு நாடகம்.

    ReplyDelete
  4. கருத்துக்களை, கருத்துக்களால் வெல்லவேண்டும். தன்னால் தொடுக்கப்படட வினாக்களுக்கு தெளிவான விளக்கத்தினை உரியவரிடமிருந்து எதிர்பார்க்கின்றார்? இதில் இடையில் புகுந்து தனது பக்க கருத்துக்களை தெரிவிக்கவிடாமல் தடுப்பதானது அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையை தெளிவாக்க காட்டுகின்றது? ஏதோவொரு சந்தர்ப்பத்தில் உங்கள்பக்க நியாயம்களையும் தெரிவிக்கவிடாமல் இவ்வாறு தடைகளை ஏட்படுத்தலாமல்லவா? தற்போது கடசிக்குள் நடக்கும் விடயங்களை உயர்பீட உறுப்பினர்களைவிட மக்கள் தெளிவுடன் எதிர்பாக்கின்றனர்.

    ReplyDelete
  5. SLMC eppa vandazo appawe thuwesamum vandazu

    ReplyDelete

Powered by Blogger.