சிங்ஹலே பற்றி அறிக்கை கோரும் ரணில், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் பற்றி ஆராயவும் உத்தரவு
- ARA.Fareel-
இனவாத செயற்பாடுகள் மற்றும் இனவாத பிரசாரங்களுக்கு எதிராக அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சிவில் அமைப்புகளின் அமைதிப் பேரணியை 'சிங்ஹ லே' அமைப்பினர் குழப்பி முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை வெளியிட்டு அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கும் படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவைப் பணித்துள்ளார்.
நேற்று முன்தினம் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலும் கொழும்பில் நடைபெற்ற இனவாதத்துக்கு எதிரான அமைதிப் பேரணியை சிங்ஹலே குழப்பியமை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கு கருத்து தெரிவிக்கையில்
‘நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்கி வருகிறது. இனவாதத்துக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கக்கூடாது. அரசாங்கம் இதனை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொழும்பில் இடம்பெற்ற இனவாதச் செயற்பாடுகள் மற்றும் இனவாத பிரசாரங்கள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேரணி சிங்ஹலே அமைப்பைச் சேர்ந்தவர்களால் குழப்பியடிக்கப்பட்டுள்ளது.
அவர்களால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பொலிஸாரினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இச் சம்பவம் தொடர்பான அறிக்கையொன்று பொலிஸ்மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் இனவாதத்துக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கடந்த 15 ஆம் திகதி கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் சிவில் அமைப்புகள் ‘நாமெல்லோரும் ஒரே இரத்தம்’ என்ற தொனிப்பொருளில் அமைதிப் பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தன.
இப்பேரணியில் அனைத்து இனத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். நாமனைவரும் ஒரே இரத்தத்தைச் சேர்ந்தவர்கள். எல்லோரினது இரத்தமும் சிவப்பு என்று அவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அமைதிப் பேரணி ஆரம்பித்த சிறிது நேரத்தில் பௌத்த குருமார்கள் அடக்கிய சிங்ஹலே அமைப்பினர் அவ்விடத்துக்கு வந்து அமைதிப்பேரணியை குழப்பினர்.
முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டனர். அரை மணி நேரத்துக்குள் முஸ்லிம்களை அழித்து விடமுடியும் என்றும் அச்சுறுத்தினர்.
இதனையடுத்து பொலிஸார் அவர்களை அவ்விடத்திலிருந்தும் அப்புறப்படுத்தினார்கள். அவர்கள் பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Not for action but for documentation
ReplyDelete