அதிர்ச்சியளித்த மைத்திரி, மஹிந்த தரப்பு என்ன செய்யப்போகிறது..?
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 40 பேர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் (17) முற்பகல் பதவிப் பிரமாணம்செய்துகொண்டனர். இந்த நிகழ்வு இன்று ஜனாபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
அந்தவகையில் புதிய தொகுதி அமைப்பாளர்கள் 16 பேர்களும் மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேர்களும் ஜனாதிபதி அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக மற்றும் அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65வது ஆண்டு விழா மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ள மாட்டார் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி நடைபெறும் சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் ஜோன் செனவிரட்ன, முன்னாள் ஜனாதிபதிக்கு மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பை விடுத்திருந்தார்.
நுகோகொடை மிரிஹானவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு நேற்று சென்ற அமைச்சர், இந்த அழைப்பை விடுத்ததுடன், அவரும் அதனை ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களான பலர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
காமினி லொக்குகே, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்த யாப்பா அபேவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, சீ.பீ. ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, உதித் லொக்குபண்டார உட்பட 41 பேரை தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கியுள்ள கட்சியின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு நெருக்கமானவர்களை அந்த பதவிகளுக்கு இன்று நியமித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை மகிந்த ராஜபக்சவுக்கு கொடுத்த சாட்டை அடியாக கருதப்படுகிறது.
கட்சியின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து விட்டு, மகிந்தவின் ஆதரவாளர்களை கட்சி பதவியில் இருந்து நீக்கியமையானது மகிந்த தரப்பினரை ஆத்திரமடைய செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இவ்வாறான நிலையில், குருணாகலில் நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் எனக் கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச தரப்பினர் குருணாகலில் நடைபெறும் மாநாட்டில கலந்து கொள்ள போவதில்லை என ஏற்கனவே கூறியிருந்தனர்.
இதற்கு பதிலாக மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் தனியான மாநாட்டை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக மகிந்த தரப்பினருக்கு சாட்டையடியை கொடுக்கும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு புறம் மகிந்தவுக்கு அழைப்பு விடுத்து விட்டு, மறுபுறம் அவரது ஆதரவாளர்களை பதவிகளில் இருந்து நீக்கியதாக அரசியல் தரப்பில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Post a Comment