துருக்கி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, 38.000 கைதிகளை விடுவிக்க அரசாணை
துருக்கி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 38,000 கைதிகளை விடுவிக்க வழிவகை செய்யும் அரசாணையை அந்த நாட்டு அரசு புதன்கிழமை வெளியிட்டது.
கடந்த மாதம் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையவர்களை சிறையிலடைப்பதற்கு ஏதுவாக, சிறைகளில் இடவசதி ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
துருக்கி அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையில், இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான சிறைத் தண்டனை பெற்றவர்கள், அந்தத் தண்டனையில் பாதி அனுபவித்திருந்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை, குடும்ப வன்முறை, பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டத் துறை அமைச்சர் பக்கீர் போஸ்டக் சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் தெரிவித்ததாவது:
அரசின் புதிய ஆணை செயல்படுத்தப்பட்டால் 38,000 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.
இந்த நடவடிக்கையை பொதுமன்னிப்பாகக் கருத முடியாது.
இது நிபந்தனையுடன் கூடிய விடுதலையே ஆகும் என்றார் அவர்.
துருக்கியில் அதிபர் எர்டோகன் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ராணுவத்தின் ஒரு பிரிவினர் கடந்த மாதம் முயன்றனர்.
எனினும், ராணுவத்தின் மற்ற பிரிவும், பொதுமக்களும் அந்த முயற்சியை முறியடித்தனர்.
270 பேரை பலி கொண்ட இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு, அமெரிக்காவில் வசித்து வரும் மத போதகர் ஃபெதுல்லா குலெனே காரணம் என்று துருக்கி அரசு குற்றம் சாட்டி வருகிறது.
அவரது ஆதரவாளர்கள் என்று கருதப்படும் 35,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், ராணுவத்தினர், காவல்துறையினர், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 17,000 பேர் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான வழக்கை எதிர்நோக்கியுள்ளனர்.
இவர்களை சிறையிலடைப்பதற்காக, சிறையில் இட வசதி ஏற்படுத்துவதற்காகவே பிற குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கைதிகளை விடுவிக்கும் அரசாணை தவிர, மேலும் 2,300 காவல்துறையினர், 136 ராணுவ அதிகாரிகள், 196 தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அரசாணையும் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
Post a Comment