Header Ads



ஷகீப்பின் கொலை பல மாதங்களாக திட்டமிடப்பட்டது, ஆதாரங்கள் அழிப்பு, 200 CCRV கள் ஆய்வு

பம்பலப்பிட்டியில் வசித்துவந்த கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை தொடர்பில் சேதாவக்க மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களில் வசிக்கும் இருவர் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுலைமானை படுகொலை செய்து சடலத்தை மாவனெல்லைக்கு கொண்டுச் செல்வதற்கு இவர்கள் இருவரும் உதவியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவர்களிடம் பொலிஸார் பல தடவைகள் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும், மேலும் பல சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, மொஹமட் சுலைமானின் படுகொலை, பல மாதங்களாக திட்டமிடப்பட்ட ஒன்றென தெரியவந்துள்ளது.

சுலைமானை கொலை செய்தவர்கள், ஆதாரங்களை அழித்துள்ளதாகவும் அவர்களை கண்டறிவதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 4 தொடக்கம் கொழும்பு 6 வரையும் கொழும்பு 4 தொடக்கம் 3 வரையும், கேகாலை தொடக்கம் மாவனெல்ல மற்றும் ஹெம்மாத்தகம பகுதி வரையும் பொருத்தப்பட்டுள்ள 200 சி.சி.ரி.வி காணொளிகளை தற்போது ஆய்வு செய்துவருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கொலையாளிகளை அடையாளம் காணும் வகையில் இதுவரை சுமார் 75 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொஹமட் சுலைமான் கொலை செய்யப்பட்டு, பத்து நாட்கள் கடந்துள்ள போதிலும் பொலிஸாரால் இதுவரை கொலையாளிகள் அடையாளம் காணப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொஹமட் சுலைமான் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சுமார் 20 பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.