காணாமல் போன கார்ச்சாரதி - திருப்பதியில் காத்திருந்த மைத்திரியும், மனைவியும்..!!
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாடு நடத்தச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கார் சாரதி காணாமற்போனதால், 12 நிமிடங்களுக்கு மேலாக காரில் காத்திருக்க நேரிட்டது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இரவு பெங்களூர் வழியாக திருப்பதியைச் சென்றடைந்தார்.
பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவைக் கழித்த அவர், நேற்று அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவையின் போது, திருப்பதி தேவஸ்தானத்துக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபாடு நடத்தினார்.
மைத்திரிபால சிறிசேன வழிபாடு முடித்துக் கொண்டு திரும்பி வந்து காரில் அமர்ந்த போது, சாரதி அங்கு இருக்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவசர அவசரமாக திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் அவரைச் சூழ்ந்து பாதுகாப்பு அளித்தனர்.
12 நிமிடங்களுக்குப் பின்னர் சாரதி வந்து சேர்ந்தார். அவர் ஏழுமலையானை வழிபடச் சென்றதே பரபரப்புக்குக் காரணமாகும்.
இதையடுத்து பத்மாவதி மாளிகைக்குத் திரும்பிய சிறி்லங்கா அதிபர் மீண்டும் 6.30 மணியளவில் குடும்பத்தினருடன், ஏழுமலையான் ஆலயத்துக்கு வந்தார்.
மிக முக்கிய பிரமுகர்கள் வழிபடும் நேரத்தில், அவர் குடும்பத்தினருடன் சென்று வழிபாடு நடத்தினார்.
இதையடுத்து, விருந்தினர் விடுதிக்குத் திரும்பிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பெங்களூருக்குப் பறப்பட்டுச் சென்றார்.
சிறிலங்கா அதிபரின் திருப்பதி பயணம் குறித்து முன்கூட்டியே தகவல் தரப்படாததால் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment