'நெருப்புக் கடலாய் மாற்றப்படும்' வடகொரியா எச்சரித்துள்ளது
'தென் கொரியாவில், அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் நிறுவப்பட்டால், அப்பிராந்தியம் நெருப்புக் கடலாய் மாற்றப்படும்' என, வட கொரியா எச்சரித்துள்ளது.
வட கொரியா அணு மற்றும் ஏவுகணை சக்தியை அதிகரிக்கும் வகையில் தீவிர சோதனைகள் நடத்தி வருகிறது. இதனால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள அண்டை நாடான தென் கொரியா, அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து தென் கொரியாவில் 'தாட்' எனப்படும், அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை தென் கொரியாவில் நிறுவ அமெரிக்கா முன்வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள வட கொரியா நாட்டு ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்: 'உலகளவில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் 'தாட்' ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை தென் கொரியாவில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. 'தாட்' நிறுவப்படும் பகுதி, காலம் ஆகியவை உறுதி செய்யப்பட்டால், கடுமையான தாக்குதல் நடத்தப்படும்.
தென் கொரிய பிராந்தியத்தை நெருப்புக் கடலாய் மாற்றுவோம். வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி, அமெரிக்க அமைச்சரவை அவரை கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளது. இச்செயல், போர் பிரகடனம் போன்றது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு வட கொரிய ராணுவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே வட கொரியாவின் நட்பு நாடாக திகழும் சீனா, 'தென் கொரியாவின் பாதுகாப்பு தேவைகளை மிஞ்சும் வகையில் 'தாட்' தளவாடம் நிறுவப்படுகிறது. இதன் பின்னணியில் பயங்கர சதி இருப்பதை உணர முடிகிறது' எனத் தெரிவித்துள்ளது.
Post a Comment