Header Ads



உலக சக்திவாய்ந்த பிரமுகர்கள், அடுத்தடுத்து சிறிலங்கா வருகிறார்கள்

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் உயர்மட்டப் பிரமுகர்கள் அடுத்தடுத்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த சீன வெளிவிகார அமைச்சர் வாங் யி இன்று -10- பீஜிங் திரும்பவுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், மூன்று நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார்.

இவர் நாடு திரும்பியவுடன், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், சேர்ஜி லாவ்ரோவ் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இவர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார். மேலும், புல்லர்ஸ் வீதியில், புதிதாக அமைக்கப்பட்ட ரஷ்ய தூதரக கட்டடத்தையும் அவர் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவரையடுத்து, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகரானி சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து, கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியொன் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு ஆண்டில், மூன்று அல்லது நான்கு உயர்மட்டப் பிரமுகர்களின் பயணங்களே இடம்பெறுவது வழமை. ஆனால் அடுத்தடுத்து, ஐந்து முக்கிய நாடுகளின் உயர்மட்டப் பிரமுகர்கள் சிறிலங்கா வரவுள்ளனர்.

இதனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.