Header Ads



வெய்யிலின் கொடுமை - வியர்வையும், நாற்றமும்..!!

கோடையின் கொடுமைகளில் தவிர்க்க முடியாதது வியர்வையும், அதனால் ஏற்படுகிற நாற்றமும். சம்பந்தப்பட்டவருக்கு  மட்டுமல்ல... அருகில் உள்ளவர்களையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் பிரச்னை இது. வியர்வை வாடைக்குத் தீர்வு  உண்டா? பேசுகிறார் சரும நல  மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரன்...

கோடைக்காலத்தில் நம்முடைய உடலில் இருந்து அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். குறிப்பாக, மடிப்பு  அதிகம் காணப்படுகிற அக்குள், கை, கால் இடுக்கு போன்ற இடங்களில் இருந்து ஏராளமாக வியர்வை வழியும். நமது  உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறும்போது, ஏராளமான கிருமிகள் உருவாகின்றன. இதனால், பாக்டீரியா  தொற்று உண்டாகி, துர்நாற்றம் வீசுகிறது. வியர்வையுடன் துர்நாற்றம் வெளிப்படுவதை தடுப்பதற்கு பல வழிமுறைகள்  உள்ளன.

தினமும் காலை, மாலை என இருமுறை குளிப்பது அவசியம். தேவைப்பட்டால் இரவில் குளிப்பதும் பயன் தரும்.  அவ்வாறு குளிக்கும்போது, கிருமி நாசினி சோப்பை (Anti Bacterial Soap) உயோகிக்க வேண்டும். பருத்தி  உடைகளையே அணிய வேண்டும்.  சிலருக்கு வியர்வை காரணமாக, உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, அக்குள் போன்ற  இடங்களில் உள்ள ரோமங்கள் பிரவுன் நிறமாக மாறத் தொடங்கும். இதற்கு அந்த இடங்களில் உள்ள  Chromhidrosis கிருமி காரணம். அதனால், இங்குள்ள முடிகளை அடிக்கடி அகற்ற வேண்டும். 

இந்தக் கிருமி வளர வளர உள்ளாடைகளின் நிறம் மாற ஆரம்பிக்கும். உள்ளாடைகளை முறையாகத் துவைத்துப்  பயன்படுத்த வேண்டும். கோடைக்காலத்தில்  ஒரு நாளில் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.  உடலில் சூரிய ஒளி படுமாறு செய்வதும் அவசியம். இதன் மூலம், துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளை மற்ற  இடங்களுக்குப் பரவாமல் தடுக்கலாம். பிரச்னை அதிகமாக உள்ளவர்கள் சரும நல மருத்துவர் ஆலோசனைப்படி, Anti  Bacterial மருந்து, மாத்திரைகளை 3 முதல் 5 நாட்கள் வரை சாப்பிட்டு வர வேண்டும். 

கோடைக்காலத்தில் ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க மோர், இளநீர், ஜூஸ்  போன்ற திரவ உணவுகளை அடிக்கடி குடித்து வருவது நல்லது. உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை  சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலில் இருந்து நீர்ச்சத்து அதிகம் வெளியேறுவதை தடுப்பதோடு, வியர்க்குரு, கட்டி  போன்றவை ஏற்படுவதையும் நிறுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு கிருமிகளாலும் காளானாலும் சரும பாதிப்பு  அதிகமாக ஏற்படும். இவர்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். அது வியர்வையால் துர்நாற்றம் ஏற்படுவதையும் குறைக்கும்.

கோடைக்காலத்தில் குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின்  உடலில் இருந்து வியர்வை சரியாக வெளியேறாவிட்டால் வியர்க்குரு, அரிப்பு, சருமம் தடித்தல் (Rashes) போன்ற  பிரச்னைகள் ஏற்படும். இதற்காக குழந்தைகளுக்கான பிரத்யேக பவுடர் பயன்படுத்தலாம். அது ஒருசில குழந்தைகளுக்கு  ஏற்றுக்கொள்ளாது. வியர்வை வெளியேறும் துவாரத்தை அடைத்து விடும். இதனால் தொற்று உண்டாகி சூடுகட்டி  ஏற்படும். அதோடு, சரும நல மருத்துவர் ஆலோசனைப்படி, ஆன்டிபயாடிக் மருந்து, ஆன்டிபயாடிக் சோப்பு உபயோகிப்பதே  பாதுகாப்பானது’’ என்கிறார் டாக்டர் ரவிச்சந்திரன்

No comments

Powered by Blogger.