Header Ads



அப்துர் ரஹ்மானின் அழைப்பு, காத்தான்குடியில் களத்தில் இறங்கிய தயாசிறி


காத்தான்குடி வடக்கு எல்லையில் அமைந்துள்ள சௌண்டஸ் விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடனும் கூடிய சிறந்ததொரு விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர உறுதியளித்தார். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG ) தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களின் அழைப்பின் பேரில் நேற்று சௌண்டஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த உறுதி மொழியினை அவர் வழங்கினார்.

 சௌண்டஸ் விளையாட்டுக்கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படவுள்ள மின்னொளி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (10.07.2016) சௌண்டஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.  சௌண்டஸ் விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான    NK. றம்ழான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்நிகழ்வின் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா அவர்களும் NFGGயின் தவிசாளர் அப்துர்ரஹ்மான் அவர்களும் கலந்து கொண்டிருந்ததோடு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி சார்ள்ஸ் அவர்கள் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டிருந்தார்.

 கடந்த 40 வருடங்களுக்கு மேலாக எந்தவித அபிவிருத்தியும் காணாது மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் சௌண்டஸ் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்றினை பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் கடந்த 05.03.2016அன்று சௌண்டஸ் விளையாட்டுகளக பிரதிநிதிகளோடு நடாத்தியிருந்தார். இந்த மைதானமானது, தாழ் நிலமாக இருப்பதன் காரணமாக இதனை முறையாக உயர்த்தி, நீர் வடிந்தோடக்கூடிய வடிகாண்களை அமைத்து சகல வசதிகளும் கொண்ட ஒரு மைதானமாக அபிவிருத்தி செய்வதுவே நிரந்தர தீர்வாகும் என்பதனை சுட்டிக்காட்டியிருந்த பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் இந்த பாரிய வேலைத்திட்டமானது, விளையாட்டுத்துறை அமைச்சின் விஷேட அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெளிவுபடுத்தியிருந்தார். அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை விரைவில் தான் முன்னெடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார். 

 இதன் தொடர்ச்சியாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜெயசேகர அவர்களை சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் சந்தித்த பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் இந்த மைதானத்தின் நிலைமையினை முதலில் நேரில் வருகை தந்து கண்டறியுமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த அழைப்பிற்கிணங்கவே நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் குறித்த மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, மைதானத்தின் நிலமைகளையும் நேரில் பார்வையிட்டார். இவ்வேலைகளை துரிதப்படுத்தும் முகமாக விளையாட்டுத்துறை அமைச்சின் பொறியியலாளரையும் கூடவே அழைத்து வந்திருந்த அமைச்சர் அவர்கள், இம்மைதானத்தினை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தினையும் அதற்கான செலவீனங்களையும் உடனடியாக தயாரித்து முடிக்குமாறும் உத்தரவிட்டார். அடுத்து வரும் சில வாரங்களுக்குள் இம்மைதானத்தினை நில அளவை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சின் பொறியியலாளர் உறுதியளித்தார். 

  நேற்றைய நிகழ்வின்போது 'சௌண்டர்ஸ்' விளையாட்டுக் கழகம் மற்றும் காங்கயனோடை 'நியூஸ்டார்' விளையாட்டுக்கழகம் என்பன கலந்து கொண்ட கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டியொன்றும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சகல வீரர்களையும் அமைச்சர் அவர்களும் ஏனைய அதிதிகளும் பாராட்டி ஊக்கப்படுத்தியதுடன் வெற்றிக் கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் அவர்களுக்கு வழங்கிவைத்தனர்.

 இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் இம்மைதான அபிவிருத்தியின் முக்கியத்துவத்துவம் பற்றியும் அதன் எதிர்கால நன்மைகள் பற்றியும் தெளிவு படுத்தியதோடு, முன்னுரிமை அடிப்படையில் இதனை நிறைவேற்றித்தருமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் அவர்கள் உரையாற்றும்போது, அப்துர் ரஹ்மான் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இம்மைதானம் அவசமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கான தேவையினை தான் புரிந்து கொண்டிருப்பதாகவும் இவ்வருடத்திற்குள் இம்மைதானத்தினை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்படுமென உறுதியளித்ததோடு,  அடுத்த வருட ஆரம்பத்தில் இதற்கான நிதி ஒதுக்கீட்டினை செய்வதாகவும் உறுதியளித்தார். அத்துடன் இந்நிகழ்விற்கு தன்னை வரவழைத்த பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  மஞ்சந்தொடுவாய் மற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டதோடு நிகழ்வின் இறுதியில் சௌண்டஸ் விளையாட்டுக்கழகத்தினால் நினைவுப்படிகம் ஒன்றும் அமைச்சர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.



No comments

Powered by Blogger.