Header Ads



ஜில்லுனு கொஞ்சம் தண்ணீர்

ஃப்ரிட்ஜ் என்பது வீட்டு உபயோகப் பொருட்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. ஃப்ரிட்ஜில் குளிரூட்டப்பட்ட  நீரை அருந்துவது வெப்பத் தகிப்பிலிருந்து விடுதலை பெற்றது போன்ற ஓர் உணர்வை எல்லோருக்கும் கொடுக்கும்.  ஃப்ரிட்ஜ் தண்ணீர் நம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருமா? பொது மருத்துவர் ஆல்வின் கிறிஸ்டோபரிடம் கேட்டோம்.

‘‘ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உளவியல் ரீதியாக ஒரு விடுபடல் கிடைக்கிறது. தாகம் சீக்கிரம் அடங்கி  விடும். வெப்பமான சூழலில் குளிர்ச்சி யான தண்ணீரைக் குடிக்கும்போது உடலும் குளிர்ச்சியாகும் என்கிற ஒரு உணர்வு  மட்டும்தான் நமக்குக் கிடைக்கும். மற்றபடி அது உடலைக் குளிர்ச்சியாக்குவதில்லை. அதே நேரம் உடலுக்கு எந்த ஊறும்  விளைவிப்பதில்லை. ஆனால், ஃப்ரிட்ஜிலிருந்து வெளிப்படும் வாயு சூழலுக்கு விரோதமானது. ஆஸ்துமா போன்ற  தொந்தரவுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு ஃப்ரிட்ஜ் தண்ணீர் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் குளிரூட்டப்பட்ட  தண்ணீரை அருந்துவதைத் தவிர்க்கலாம். 

இயற்கையான முறையில் உடலைக் குளிர்ச்சி செய்ய பழ வகைகளை சாப்பிடலாம். மண்பானைத் தண்ணீர் குடிக்கலாம்.  கோடைக்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலின் வெப்பம் சமநிலையில் இருக்கும்.  குடிப்பதைக் காட்டிலும் குளிர்ந்த நீரில் குளிக்கும்போது நல்ல பலன் கிடைக்கும். குளித்து முடித்த 2 மணி நேரத்துக்கு  வெளியிலுள்ள வெப்பம் உடலின் வெப்பத்தைத் தாக்காமல் இருக்கும். நிறைய தண்ணீர் குடித்தும், நாளொன்றுக்கு இரு  முறையாவது குளிர்ந்த நீரில் குளித்தும் உடலின் வெப்பத்தை சரியான நிலையில் வைத்துக் கொள்ளலாம்’’ என்கிறார்  ஆல்வின் கிறிஸ்டோபர்.

No comments

Powered by Blogger.