Header Ads



வருடாந்தம் 4000 கோடி இழப்பை ஏற்படுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்கள்


தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரம் மூலம் வருடத்திற்கு 4000 கோடி ரூபாவை அரசாங்கம் இழப்பதாகக் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்டாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்.

தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குகின்றமை சட்டத்திற்கு முரணானது எனத் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அந்த மனு எதிர்வரும் 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரம் காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தைக் கருத்திற்கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதை இரத்து செய்வதற்கு ஒரு முறை தீர்மானம் எடுக்கப்பட்டது.

எனினும், கடந்த மே மாதம் 2 ஆம் திகதி அந்தத் தீர்மானம் மாற்றப்பட்டு, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந் நிலையில், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு கடந்த ஜூன் மாதம் அரசாங்கம் 117 கோடி ரூபாவிற்கான குறை நிரப்பு பிரேரணையை சமர்ப்பித்தது.

22 அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 32 பிரதி அமைச்சர்களுக்கு கார்களைக் கொள்வனவு செய்வதற்கு இதன்போது நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த வாகனங்களைக் கொள்வனவு செய்யும் தீர்மானம் தற்காலிகமாக பிற்போடப்பட்டிருந்தாலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் மூலம் வாகனங்கள் தற்போது கொள்வனவு செய்யப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தீர்வை வரியற்ற வாகனக் கொள்வனவிற்கு வரி அறவீட்டு விசேட சட்டமூலத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் வரியைக் கைவிடுவது உகந்தது என்பது நிதி அமைச்சரின் நிலைப்பாடாக இருந்தால், அவரினால் வரியைக் கைவிட முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், வரியைக் கைவிட முடியுமான அனைத்துப் பொருட்களையும் மீண்டும் விற்பதாக இருந்தால், அதற்கு முன்னர் வரி அறவீட்டு ஆணையாளரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு வரியை செலுத்தி அதனை விற்க முடியும் என்பதே சட்டப் பின்புலமாகும்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற எந்தவொரு அனுமதிப் பத்திரமும் இந்த நிபந்தனையில் உள்வாங்கப்படுவதில்லை என, தீர்வை வரியற்ற அனுமதிப்பத்திர முறைமையை சவாலுக்கு உட்படுத்தும் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.