வடமாகாண உறுப்பினர் ஜவாஹிர் ஜனோபரின், முக்கியமான கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்காளர் பதிவு தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள், உலமா சபை, பள்ளி நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டுமென வடக்கு மாகாண சபை உறுப்பினரான ஜவாஹிர் ஜனோபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து புத்தளத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் வாழ்ந்து வந்த வட புல முஸ்லிம்கள் கடந்த காலங்களில் தாம் தற்காலிகமாக வசித்து வந்த பிரதேசங்களில் இருக்கும் கிராம சேவகர்களினூடாக வாக்காளர் பதிவிற்கு விண்ணப்பித்து தமது வாக்குரிமையை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
தற்சமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள சாதாரண சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்தும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளும் வட மாகாணத்தில் உள்ள நிர்வாக அமைப்பும் மீள் குடியேறி சொந்த மாவட்டங்களில் முகவரியுடன் வசிப்பவர்களுக்கு மட்டுமே வாக்கு பதியப்படும் எனும் நடைமுறையினை இறுக்கமாகக் கடைப்பிடிக்கின்றனர்.
இதன் மூலம் மீள்குடியேற்றத்திற்காகச் சென்று இன்று வரை காணியில்லாமல், காணியிருந்தும் வீட்டுத் திட்ட உதவிகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்து புத்தளத்திலோ, ஏனைய மாவட்டங்களிலோ தமது வாக்குகளைப் பதியாத குடும்பங்கள் பல இன்னல்களையும் புறக்கணிப்புகளையும் அனுபவித்துள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி முஸ்லிம்களுக்கு 25 வருட அகதி வாழ்வின் பின் இன்று வரை அரசினால் ஒரு அங்குலமேனும் அரச காணி வழங்கப்படாத நிலையில் இவர்களின் சொந்த மாவட்டத்தில் மீள்குடியேற்றம் என்து எந்த வகையிலும் சாத்தியமில்லை.
எனவே, தயவு செய்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய அமைச்சர்களாகிய நீங்கள் இவ் விடயத்தினை பாராளுமன்றத்திற்குக் கொண்டு சென்று புதிய சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ளாத விடத்து எமது சமூகம் வாக்குரிமையற்ற சமூகமாக மாற்றப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மீள்குடியேற்றத்திற்கான உதவிகள், நியமனங்கள், பல்கலைக்கழகம் நுழைவதற்கான வெட்டுப் புள்ளிகள் அந்த மாவட்டங்களின் இன விகிதாசாரம் என்பன இதனால் முற்றாக பாதிக்கப்படும் நிலையிலும் இம் முஸ்லிம்கள் உள்ளனர் என்பதை எமது மாவட்டத்தின் உலமா சபை, பொது அமைப்புகள், பள்ளி நிர்வாகங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் ஏனைய அமைப்புகள் சார்பாகவும் தங்களின் மேலான கவனத்திற்காக சமர்ப்பிக்கின்றேன்.
Post a Comment