ஹஜ் குழு, தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் நடந்தவை
-ARA.Fareel-
ஹஜ் குழு இவ்வருடம் ஹஜ் கோட்டாவை கையாண்ட புதிய முறையின்படி ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் நேற்று -28- உத்தரவு வழங்கியதுடன் ஹஜ் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் விசாரணையை அடுத்தவருடம் ஜனவரி 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
மனுதாரர்களால் புதிய முறைக்கு தடையுத்தரவு கோரப்பட்டும் அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
மூன்று ஹஜ் முகவர் நிலையங்களான கரீம் லங்கா டிரவல்ஸ், அம்ஜா டிரவல்ஸ், இக்ராஃ டிரவல்ஸ் ஆகியன இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளுக்கு எதிராக இவ்வழக்கினை தாக்கல் செய்திருந்தன. பிரதிவாதிகளாக ஹஜ் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் என்போர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கிற்கு இடையீட்டு மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 10 ஹஜ் யாத்திரிகர்கள் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர். மனுவில் இவ்வருடத்துக்கான கோட்டா கையாளப்பட்ட முறைமையினால் ஹஜ் யத்திரிகர்கள் நலன் பேணப்பட்டுள்ளதாகவும் ஹஜ் கட்டணங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
யாத்திரிகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் முகவர்களைத் தெரிவு செய்ய முடியுமானதாக இந்த புதிய முறை அமைந்துள்ளதால் புதிய முறையை அமுல்படுத்த உத்தரவு வழங்கும்படியும் நீதிமன்றினைக் கேட்டிருந்தனர்.
இடையீட்டு மனுவின் விசாரணையின்போது ஹஜ் யாத்திரிகர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி புதிய முறையே சிறந்தது என வாதிட்டார்.
ஹஜ் கமிட்டி உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள வழிமுறைகளை (Guide Lines) பின்பற்றியுள்ளதாகக் கூறினார். யாத்திரிகர்கள் எந்த முகவர் மூலம் பயணிக்க வேண்டும் என ஹஜ் கமிட்டி தீர்மானிக்காது யாத்திரிகர்களே தமது முகவர்களைத் தீர்மானிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முகவர்களின் தனி உரிமை இல்லாமற் செய்யப்பட்டுள்ளதெனவும் ஹஜ் கட்டணங்கள் புதிய முறையின் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் வாதிட்டார்.
ஹஜ் யாத்திரிகர்களின் விபரங்கள் அடங்கிய தரவுகள் சவூதி ஹஜ் அமைச்சருக்கு அனுப்பி வைக்க வேண்டிய இறுதித் தினம் ஜூலை மாதம் 7 ஆம் திகதியாகும் என்றும் சட்டத்தரணி தனது வாதத்தை முன்வைத்தார்.
இதனையடுத்து உயர்நீதிமன்றம் மார்க்கக் கடமைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்றும் ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கருதியும் புதிய முறையில் ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஹஜ் குழுவுக்கு அனுமதி வழங்கியது.
பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் பணிப்பாளர் எம்.எம்.எம்.ஸமீல் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுரேன் ஞானராஜ் மற்றும் ஹஜ் கமிட்டியின் சார்பில் சட்டத்தரணி பரதலிங்கம் உட்பட 9 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
வாதிகளான மூன்று ஹஜ் முகவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான மனோர டி சில்வா, ருஷ்தி ஹபீப், இரேசா காளியதாச ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் ஹஜ் குழு உறுப்பினர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் கருத்து தெரிவிக்கையில்;
இது ஹஜ் யாத்திரிகர்களுக்கும் ஹஜ் குழுவுக்கும் கிடைத்த வெற்றியாகும். புதிய ஹஜ் வழிமுறைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.
வழக்கினைத் தாக்கல் செய்திருந்த மூன்று ஹஜ் முகவர் நிலையங்களில் ஒரு முகவர் நிலையமான கரீம் லங்கா நிறுவனத்தின் உரிமையாளர் கரீம் ஹாஜியார் கருத்து தெரிவிக்கையில்;
‘வழக்கு இன்னும் முடியவில்லை. அது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் ஓர் இடையீட்டு மனுவினைத் தாக்கல் செய்து வழக்கினை தொடர்வதற்கு எம்மால் முடியும்.
அப்படிச் செய்தால் ஹாஜிமாரே பாதிக்கப்படுவார்கள். அதனால் ஹாஜிமாரின் நலன்கருதி நாம் மௌனமாக இருக்கிறோம்’ என்றார். விடிவெள்ளி
Post a Comment