கொட்டாவி விட்டவருக்கு விளக்கமறியல் - கொழும்பு நீதிமன்றத்தில் விசித்திரம்
கொட்டாவி விட்டு நீதிமன்றை அவமரியாதை செய்தமைக்காக இளைஞர் ஒருவருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று -29- இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றின் பணிகளை பூர்த்தி செய்து நீதவான், ஆசனத்தை விட்டு இறங்கி வரும் போது சத்தமாக கொட்டாவி விட்டதாக இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் சானீமா விஜேபண்டார, குறித்த இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைகின்றன அமைதியாக இருக்கவும் என அறிவித்த போது குறித்த இளைஞர் சத்தமாக கொட்டாவி விட்டுள்ளார்.
களனி பெத்தியாகொட பிரதேசத்தைச் சேர்ந்த சுரங்க ஜனக குமார என்ற இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கஞ்சா போதைப் பொருள் வழக்கு ஒன்றில் முன்னிலையாகியிருந்தார். சந்தேக நபருக்கு முன்னதாக 5000 ரூபா அபராதத்தை நீதிமன்றம் விதித்திருந்தது.
அபராதப் பணத்தைச் செலுத்தும் வரையில் குறித்த இளைஞர் நீதிமன்ற சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதன் போது நீதிமன்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகி நீதவான் செல்ல முயற்சித்த போது உரக்க கொட்டாவி விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டதனால், எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment