பிரான்ஸில் ஜுலை 1 முதல், அமுலுக்கு வரும் புதிய சட்டங்கள்
பிரான்ஸ் குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அந்நாட்டு அரசு யூலை 1-ம் திகதி முதல் புரட்சிகரமான மாற்றங்களை அமுல்படுத்த உள்ளது.
பிளாஸ்டிக் பைகளுக்கு நிரந்தர தடை
பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் யூலை 1-ம் திகதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படும். இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள், மருந்துக்கடைகள், பேக்கரிகள், பெட்ரோல் நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட அனைத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகள் அளிப்பது தடை செய்யப்படும். இதற்கு பதிலாக, காகித பைகள் அல்லது வலுப்படுத்தப்பட்ட பைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கலாம். எனினும், அடுத்தாண்டு ஜனவரி முதல் இந்த நடைமுறையும் முற்றிலுமாக தடை செய்யப்படும்.
சூற்றுச்சூழலை பாதிக்கும் வாகனங்களுக்கு தடை
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வாகனங்கள் யூலை 1-ம் திகதி முதல் தடை செய்யப்படும். அதாவது, 1997ம் ஆண்டு ஜனவரி 1-ம் திகதி முன்னால் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் தலைநகர் பாரீஸில் பயணிக்க தடை விதிக்கப்படுகிறது. பாரீஸில் உள்ள Peripherique என்ற பகுதிக்குள் வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை அனைத்து விதமான கார்களும் நுழைய தடை விதிக்கப்படுகிறது. அதேபோல், 1999ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் இப்பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் அபராதம் விதிக்கப்படும். முதல் முறையாக 35 யூரோ அபாரதம் விதிக்கப்படும். அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் விதிமுறையை இரண்டாவது முறையாக மீறும் தனியார் கார் ஓட்டுனர்களுக்கு 68 யூரோவும், ட்ரக்ஸ் வாகனங்களுக்கு 135 யூரோவும் அபராதம் விதிக்கப்படும்.
பல்பொருள் அங்காடி ஞாயிறு மட்டும் திறக்கப்படும்
மத்திய பாரீஸில் உள்ள BHV என்ற பல்பொருள் அங்காடி இனி ஞாயிற்று கிழமைகள் மட்டும் திறக்கப்படும். இந்த பல்பொருள் அங்காடியானது 12 சர்வதேச சுற்றுலா பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளதால், இங்குள்ள கடைகள் அனைத்தும் நள்ளிரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும். Boulevard Haussmann என்ற பகுதியில் உள்ள Galeries Lafayette மற்றும் Printemps ஆகிய இரு பல்பொருள் அங்காடிகள் யூலை மாதத்தின் இறுதி 3 ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும்.
கருத்தடை குறித்து இலவச ஆலோசனை
யூலை மாதம் முதல் 15 முதல் 18 வயதுடைய இளம்பெண்கள் கருத்தடை செய்துக்கொள்ள மருத்துவர்களிடம் இனி இலவசமாக ஆலோசனை பெறலாம். மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 2013ம் ஆண்டு முதல் பெண்கள் இலவசமாக கருத்தடை செய்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் யூலை மாதம் முதல் கருத்தடைகான ஆலோசனையையும் இலவசமாக பெறலாம்.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு புதிய வசதி
பிரான்ஸ் நாட்டில் Airbnb மற்றும் Drivy ஆகிய இணையத்தளங்கள் மூலம் வீடுகளை வாடகை பெற்று வருபவர்களுக்கு புதிய வசதி அறிமுகமாகவுள்ளது. இதன் அடிப்படையில், இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர அறிக்கையை கட்டாயமாக அனுப்பி வைக்க வேண்டும் என்ற புதிய விதிமுறைகளையும் எதிர்வரும் யூலை 1-ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment