பரபரப்பான சூழ்நிலையில், SLMC உயர்பீடம் இன்று கூடுகிறது
(செயிட் ஆஷிப்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு அதன் தலைமையகமான தாருஸ்ஸலாமில் தலைவர்- அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது.
கடந்த மார்ச் 19ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டுக்குப் பின்னர் நடைபெறவுள்ள முதலாவது உயர்பீடக் கூட்டம் இது என்பதனால் இக்கூட்டம் எல்லோராலும் மிகவும் முக்கியத்துவத்துடன் எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி இம்மாநாட்டை பகிஷ்கரித்ததைத் தொடர்ந்து கட்சிக்குள் ரகசியமாக இருந்து வந்த முரண்பாடுகள் சந்திக்கு வந்து பூதாகரமாக வெடித்தது.
செயலாளர் நாயகம் ஹசன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் தலைமையில் கட்சிக்குள் கிளர்ச்சி ஒன்று வெடிப்பதற்கான முஸ்தீபுகளும் இடம்பெற்றன.
இதனால் கடந்த ஏப்ரல் 15ஆஅம் திகதி நடைபெறவிருந்த உயர்பீடக் கூட்டம் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும் அன்றைய தினமும் உயர்பீடம் கூட்டப்படாமல் இன்று 03ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
செயலாளர் நாயகம் ஹசன் அலியின் அதிகாரங்கள் தலைவர் ரவூப் ஹக்கீமினால் பிடுங்கப்பட்டதனால் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடி நிலை உயர் பீடக் கூட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சியே ரவூப் ஹக்கீம் இரு தடவைகள் கூட்டத்தை ஒத்திவைத்து காலத்தை இழுத்தடித்து, ஹசன் அலி தரப்பினரை ஆசுவாசப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பேராளர் மாநாட்டுக்கு முன்னதாக ஹசன் அலியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி முஹம்மது மூலம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை தோல்வியில் முடிந்திருக்கின்றன. பின்னர் கட்சிக்குள் குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் மூலம் சமரசப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. உயர்பீடக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் இப்பேச்சுவார்த்தைகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
இதன்போதெல்லாம் ஹசன் அலி தனது செயலாளர் நாயகத்திற்கான அதிகாரங்கள் மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வந்துள்ளார். இதற்குப் பகரமாக தேசியப்பட்டியல் எம்.பி.பதவியை ஹக்கீம் தருவதற்கு தயாராக இருக்கிறார் என்றும் அதனை ஏற்றுக் கொள்ளுமாறும் அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவர் அதனை முற்றாக நிராகரித்துள்ளார்.
செயலாளர் நாயகத்திற்கான அதிகாரங்களை தலைவர் ஹக்கீம் என்னிடமிருந்து இரகசியமாக பிடுங்குவதற்கான காரணம் என்ன? அந்தளவுக்கு நான் செய்த குற்றம் என்ன? செய்வதையெல்லாம் செய்து விட்டு நான் தேசியப்பட்டியல் கேட்டே தலைவருடன் முரன்பட்டிருப்பதாக ஹக்கீம் தரப்பினர் விசமப் பிரசாரங்களை வேறு கட்டவிழ்த்து விட்டுள்ளனர். என்றாலும் எல்லாவற்றுக்கும் விளக்கமளித்துக் கொண்டு கட்சியை நாறடிக்க நான் முற்படவில்லை. கட்சியை நீதிமன்றத்தில் முன்னிறுத்தவும் நான் யோசிக்கவில்லை. எல்லாவற்றையும் இறைவனிடம் விட்டுவிட்டேன் என்பதாகவே ஹசன் அலியின் பதில்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில் இப்பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் என்ன? ஏதாவது இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும் செயலாளர் நாயகம் ஹசன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் இன்றைய உயர் பீடக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைகளில் ஏதாவது இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்குமாயின் இக்கூட்டம் சத்தமில்லாமல் அமைதியாக நடந்து முடியும் என எதிர்பார்க்கலாம். இல்லையேல் அது சொற்போர்க்களமாக மாறலாம்.
Post a Comment