Header Ads



பாராளுமன்றத்தில் என் மீதும் அடி விழுந்தது, நான் திகைத்துப் போனேன் - மைத்திரி


நாடாளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு வந்த உறுப்பினர்களுக்கா அல்லது வாக்களித்த மக்களுக்கா தண்டனை வழங்கவேண்டும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பினார்.

ஹொரனை றோயல் கல்லூரியில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'மக்கள், தங்களுடைய வாக்குகளை, நல்ல வளங்களைக் கொண்ட நாட்டைக் கட்டியெழும்பும் நோக்கிலேயே பயன்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்துக்குப் போனால் என்ன, வாக்குகளைக் கேட்பதற்கு போனால் என்ன, நல்ல கல்வியின் செயற்பாடுகள் அங்கு புலப்படும்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவத்தை விடவும் பாரிய சம்பவமொன்று, 1992ஆம் ஆண்டு இடம்பெற்றது. அன்று, காமினி லொக்குகே எம்.பி,வாசுதேவ நாணயக்கார எம்.பியை இழுத்தெடுத்துத் தாக்கி, கீழே போட்டு மிதித்து, அக்கிராசனத்துக்கு அருகிலிருந்து இழுத்துச்சென்றமை, எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் நான் தொடர்பு படாதவன். முன்வரிசை ஆசனத்துக்கு அருகில் சென்று சம்பவத்தைப் பார்த்துகொண்டிருந்தேன். அப்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர், என்னருகில் வந்து என்னைத் தாக்கினார். நான், திகைத்துப் போனேன்.

என்னைத் தாக்கிய எம்.பி, ஆறு வருடங்கள் கழிந்து, என்னைத் தேடிக்கொண்டு அமைச்சுக்கு வந்தார். அதுதொடர்பில் என்னுடைய பணியாட்கள் என்னிடம் தெரிவித்தனர். முதலில் அவரை அழைத்து வாருங்கள் என்று நான் சொன்னேன். அழைத்து வந்தனர். அவருடைய வேலையை முடித்துக்கொடுத்தேன். அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, எனக்காகவும் எனது வெற்றிக்காகவும் கடும் கஷ்டப்பட்டு உழைத்தார்.

நாடாளுமன்றத்துக்குள் சில சம்பவங்கள் இடம்பெற்றதன் பின்னர், அது நாடாளுமன்றத்துக்கு வெளியே சமரசப்படுத்தப்பட்டுவிடும்.

225 உறுப்பினர்களுக்கும், ஒரே மாதிரியான பொறுப்புக்கள் இருக்கின்றன. வெட்கப்படக்கூடிய சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது, கலரியில் பாடசாலை மாணவர்கள் இருந்தனர். மாணவர்கள் கலரியில் இருக்கும் போது, இந்த உயரிய சபையில் இவ்வாறா நடந்துகொள்வது என்று சபாநாயகரும் கேட்டார்.

இந்தப் பிழைக்கு, கோழியா அல்லது முட்டையா முதலில் வந்தது என்ற வாத - விவாதம் ஞாபகத்துக்கு வந்தது. வாக்குகளை விடவும், பழக்க வழக்கங்களே இந்த மோதலுக்குக் காரணமாய் அமைந்துள்ளன' என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.