Header Ads



விமான நிலையத்தில் மஹிந்தவை, கைது செய்திருக்க வேண்டும் - சரத் பொன்சேகா

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாய்லாந்து சென்றிருந்த போது அவரை சந்திக்க சர்வதேச பொலிஸார் வலைவீசி தேடும் குற்றவாளியான உதயங்க வீரதுங்க வருகை தந்திருத்தார். அதற்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளன.

எனவே நல்லாட்சி அரசாங்கம் நீதியாக செயற்பட்டிருக்குமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச மீண்டும் நாட்டிற்கு திரும்பி வரும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஜனநாயக கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக வாக்களித்தே ஆட்சிக்கு வந்தது. அப்படியாயின் ஊழல் செயற்பாடுகளின் பின்புலத்தில் இருந்தவர்களையும் தற்போது கைது செய்திருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

கடந்த காலத்தில் தொழில் அமைச்சராகவிருந்து நாட்டின் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்சவும் தொழிலாளர் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை.அவர் அன்று தொழிலாளர்களுக்கு ஒன்றும் செய்யாது இன்று தொழிலாளர் தினத்தில் அரசியல் மேடையிலேறி பேசிக்கொண்டிருக்கின்றார்.

எனவே நல்லாட்சியின் தலைமைகளும் இதுபோன்று செயற்படாது தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

கடந்த மஹிந்த ராஜபக்சவின் தூய்மையற்ற ஆட்சியில் செய்ய முடியாது போன நல்ல செயற்பாடுகளை மக்கள் நலன் கருதி இன்று செய்ய வேண்டும் என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் தெரிவு தெரிவு செய்தனர்.

நான் இதற்கு முன்னர் சிறையிலிருந்து வெளியில் வந்த போது இன்னும் சில வருடங்களில் மஹிந்தவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றேன். அதேபோல் 2 வருடங்கள் 7 மாதங்களில் அவரின் ஆட்சியை கவிழ்க்க முடிந்தது.

ஆனால் அவர் பல ஊழல்களையும் செய்துவிட்டு இன்று வெளியில் உள்ளார். அண்மையில் அவர் தாய்லாந்து சென்றிருந்த போது சர்வதேச பொலிஸ் நிறுவனமான இன்டர்போலினால் தேடப்படும் உதயங்கவுடனிருந்து படம் எடுத்திருந்தார்.

எனவே நல்லாட்சி அரசாங்கத்தில் நீதி கட்டமைப்பு முறையாக இயங்கியிருந்தால் மஹிந்தவை கைது செய்து தற்போது சிறையிலடைத்திருக்க வேண்டும்.

அன்று நான் மஹிந்தவை எதிர்த்து பொது வேட்பாளராக களமிறங்க முன்வந்திருக்காத பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சி என்ற ஒன்றை அடையாளம் இல்லாமல் செய்திருப்பார்.

எனவே இவர் போன்றவர்களின் செயற்பாடுகள் நாட்டில் மீண்டும் போராட்டத்தை ஏற்படுத்தும் எனவே நாம் விழிப்பாக இருக்க வேண்டும். மீண்டும் போராட்டங்கள் எழ இடமளிக்க கூடாது என்றார்.

No comments

Powered by Blogger.