அமெரிக்காவின் திறனற்ற நிலையைக் கண்டுதான், எனக்கு கோபம் வருகிறது - டிரம்ப்
இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் மீது தனக்கு கோபமில்லை என்றும் அமெரிக்காவின் திறனற்ற நிலையைக் கண்டுதான் தனக்கு கோபம் வருகிறது என்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் கூறினார்.
அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது.
குடியரசுக் கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் இதில் முன்னிலை வகித்து வருகிறார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஹிலாரி முன்னிலை வகித்து வருகிறார்.
இவ்விருவரும் உள்ளநாட்டுக் கொள்கைகள் முதல் வெளிநாட்டுக் கொள்கைகள் வரை பல்வேறு விஷயங்களில் தங்களது கருத்துகளைத் தெரிவித்து ஆதரவு தேடி வருகின்றனர்.
தனது பிரசாரத்தின்போது இந்தியத் தொழிலாளர்கள் உள்பட, வெளிநாட்டுத் தொழிலாளர்களை டிரம்ப் கடுமையாக விமர்சித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இண்டியானா மாகாணத்தில் நடைபெறவுள்ள வேட்பாளர் தேர்வையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது:
எனக்கு இந்தியா, சீனா, வியத்நாம், ஜப்பான் மீது கோபமில்லை. நம் நாட்டுத் தலைவர்களின் திறமையின்மையால் அமெரிக்க மக்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கிறார்கள்.
நம் நாட்டுத் தலைவர்கள் மீதுதான் எனக்குக் கோபம்.
சீனா பற்றி உறுதியான கொள்கை நமக்கு இல்லை. நமது வேலைவாய்ப்புகளை அவர்கள் தட்டிக் கொண்டு போய்விட்டார்கள். நமது பணம் அவர்களுக்குப் போய்விட்டது. நாம் சீனாவுக்கு 1.8 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ. 117 லட்சம் கோடி) தர வேண்டியுள்ளது என்பது உங்களில் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
சீனாவுடன் ஆண்டுக்கு 50,000 கோடி டாலர் (சுமார் ரூ.32.5 லட்சம் கோடி) வர்த்தகப் பற்றாக்குறை நிலவுகிறது. நாம் அளித்த பணத்தில் அவர்கள் நாட்டைப் புதிதாக உருவாக்கிவிட்டார்கள்.
இதற்கெல்லாம் காரணமான பேச்சுவார்த்தையை யார் நடத்தியது?
ஜப்பானிலிருந்து லட்சக்கணக்கான கார்கள் அமெரிக்காவில் இறக்குமதியாகின்றன. அந்த நாட்டுடன் வர்த்தகத்தில் சமநிலை இல்லாத நிலை உள்ளது.
இதைத்தான் நான் சுட்டிக் காட்டி வருகிறேன். தாங்கள் என்ன செய்கிறோம் என்றே நமது தலைவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்களுடைய திறனற்ற நிலையை எண்ணிக் கோபம் கொள்கிறேன் என்று டிரம்ப் கூறினார்.
Post a Comment