பசியுடன் இருப்பவர் உணவை திருடினால், அது தண்டனைக்குரிய குற்றமில்லை - இத்தாலி நீதிமன்றம்
பசியுடன் இருக்கும் ஒருவர் உணவை திருடினால் அது தண்டனைக்குரிய குற்றமில்லை என இத்தாலி நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி தலைநகரமான ரோமில் Ostriakov என்ற வீடு இல்லாத நபர் ஒருவர் வசித்து வருகிறார்.
கடந்த 2011ம் ஆண்டு நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு சென்றுள்ளார். அவரிடம் அப்போது குறைவாகவே பணம் இருந்துள்ளது.
தன்னிடம் இருந்த பணத்திற்கு ஈடாக சில ரொட்டி துண்டுகளை வாங்கியுள்ளார். ஆனால், இது தனது பசியை தீர்க்காது என தீர்மானித்த அந்த நபர் யாருக்கும் தெரியாமல் 4.07 யூரோ மதிப்புள்ள ’சீஸ்’ மற்றும் ’சாஸேஜ்’ ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாமல் வெளியே செல்ல முயற்சித்துள்ளார்.
இதனை கவனித்த ஊழியர் ஒருவர் நபரை கையும் களவுமாக பிடித்து பொலிஸிடம் ஒப்படைத்துள்ளார்.
விசாரணைக்கு பிறகு அவர் மீது வழக்கு பதியப்பட்டு 4 வருங்களாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு பல்பொருள் அங்காடியில் திருடியது குற்றம் என்பதால் நபருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும் 100 யூரோ அபாரதமும் நீதிபதிகள் விதித்தனர்.
ஆனால், ஆதரவற்ற அந்த நபருக்கு இது கடுமையான தண்டனை எனக்கூறி அவரது வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று 02-05-2016 நீதிபதிகள் முன்னிலையில் வந்துள்ளது.
அப்போது பேசிய நீதிபதிகள், ‘எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்தாலும் கூட எந்த ஒரு நபரும் பசியால் துன்பப்படக்கூடாது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பசியை தீர்த்துக்கொள்ளவும், உயிர் பிழைப்பதற்காக தன்னுடைய உடனடி தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள ஒரு நபர் உணவை திருடினால் அது குற்றமாகாது.
எனவே, நபருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை முழுமையாக ரத்து செய்து அவரை விடுதலை செய்ய உத்தரவிடுவதாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
This judgement is remembering Islamic historical judgement
ReplyDelete