ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் - பாராளுமன்ற அடிதடி பற்றி 2 முக்கிய முடிவுகள்
ஜனாதிபதியுடன் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் இன்று -05- காலை கூட்டமொன்று நடைபெற்றதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது, இரு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பாராளுமன்றில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளியை அனைத்து ஊடகங்களுக்கும் வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரதி சபாநாயகரால் இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் அனைத்து ஊடகங்களுக்கும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதன்போது, பாராளுமன்றில் தவறாக நடந்து கொண்டவர்களை குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளமுடியும் என அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த நடவடிக்கை குறித்து பாராளுமன்றில் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதன்பிரகாரம், தவறிழைத்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு வாரம் அல்லது மூன்று வாரம் அல்லது ஒரு மாதம் என பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றில் தகவல் அறியும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு எதிர்வரும் தினங்களில் 2ஆம் நிலை வாசிப்பு இடம்பெற இருக்கும் தருணத்தில், இந்த காணொளி மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட இருப்பதானது, மக்களின் தகவல் அறியும் உரிமையை வெளிப்படுத்துவதாக அமையும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
Post a Comment