IS பயங்கரவாதிகளையும், அவர்களை உருவாக்கியவர்களையும் அல்லாஹ் சபிக்கட்டும்
இரண்டாயிரம் ஆண்டு பழம்பெருமை மிக்க பல்மைரா நகரம் கடந்த ஓராண்டு காலம் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமிப்பிடமிருந்து இந்த வாரம் மீட்கப்பட்டிருக்கிறது.
அந்த நகருக்குச் சென்ற பிபிசி செய்தியாளர் குழுவினர் பல்மைரா நகருக்கு செல்லும் சாலைநெடுக சிரிய இராணுவம் நிலை கொண்டிருப்பதைக் கண்டனர்.
சிரிய இராணுவம் மற்றும் அதன் கூட்டணிப்படைகளுக்கும் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் படைகளுக்கும் இடையில் நடந்த கடும் சண்டையின் சாட்சியாக ஏவுகணைகள், கண்ணிவெடிகளால் உருவான ஆழமான பள்ளங்கள் பலவும் அங்கு காணப்பட்டன.
மக்கள் குடியிருப்புக்கள் நிறைந்த பல்மைரா நகரின் பகுதிகளில் அமானுஷ்யமான அமைதி நிலவியது.
ஐ எஸ் அமைப்பின் கொடூர ஆட்சியில் பத்து மாதகாலம் ஈடுகொடுத்த சுமார் எழுபதாயிரம் பொதுமக்களில் பலர் நகரைவிட்டு வெளியேறிவிட்டனர்.
கலாச்சார நிகழ்வுகளுக்குப் பேர்போன நகரம் ஐ எஸ் அமைப்பின் ஆட்சியில் கொலைக்களமாக மாற்றப்பட்டிருந்தது.
பழம்பெருமை வாய்ந்த திறந்தவெளி அரங்கில் பலர் ஒன்றாக கொல்லப்படுவதை பார்க்கும்படி நகரவாசிகளை அதிதீவிர வெறிக்கும்பல் வலியுறுத்தியிருந்தது.
அவர்களில் ஒருவர் அபு அத்னன். அவரது மகனும் அப்படிக் கொல்லப்பட்டார்.
“அந்த அரங்கத்தில் வைத்து அவர்கள் அவனைக் கொன்றார்கள். பல்மைராவில் கைது செய்யப்பட்டு கொல்வதற்காக அங்கே கொண்டு செல்லப்பட்டான். என் கண்ணால் அதை பார்த்தேன். அல்லாவின் கருணை அவனுக்கு கிடைப்பதாக...... அல்லா அவர்களையும் அவர்களை உருவாக்கியவர்களையும் சபிக்கட்டும். அவர்கள் பயங்கரவாதிகள்", என்றார் அபு அத்னன்.
பல்மைரா நகரை விட்டு ஐ எஸ் அமைப்பு தற்போது அகற்றப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் பெரும் அழிவை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
புகழ்பெற்ற வெற்றியின் தோரணவாயிலும் பெல் மற்றும் பால்ஷமின் கோவில்களும் கற்குவியலாய் இடிபட்டு கிடக்கின்றன.
ஆனாலும் பழம்பெருமை மிக்க பல இடங்கள் அழிவிலிருந்து தப்பியுள்ளன. யுனெஸ்கோ உதவியுடன் இதை மீளுறுவாக்கம் செய்ய முடியுமென சிரிய அரசு நம்புகிறது.
தற்போது பல்மைரா நகர் அமைதியாக இருக்கிறது. ஆனால் இந்த நகரைத் தளமாக வைத்து கிழக்கு மற்றும் வடக்கு நோக்கிய தனது இராணுவ முன்னெடுப்பை செய்யப் போவதாக சிரிய அரசு கூறுகிறது.
Post a Comment