Header Ads



வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில், என்னதான் நடக்குது..? (முழு விபரம்)

“ஊருக்குள்ள சக்கரவர்த்தி, ஆனால் உண்மையில்ல மெழுகுவர்த்தி” – இந்தப் பாடல்தான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்களின் தற்போதைய ரிங் டோனாக இருக்கும். 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை, மகளிர் டி20 உலகக்கோப்பை, ஆண்கள் டி20 உலகக்கோப்பை என அனைத்தும் அவர்கள் வசம்தான். ஆனால் என்ன செய்ய...?  உள்ளுக்குள்ள ஆயிரம் களேபரம். வீரர்களுக்கு ஊதியம் ஒழுங்காகத் தருவதில்லை என வீரர்கள் போர்க்கொடி தூக்க,  வழக்கம் போல் மௌனம் சாதிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சங்கத்திற்கும் வீரர்களுக்கும் பிரச்னை நடப்பது இது முதல் முறை அல்ல. 2014 -ம் ஆண்டே ஊதியப் பிரச்னையில் உடன்பாடு ஏற்படாததால், இந்தியாவிற்கு எதிரான தொடரை பாதியிலேயே புறக்கணித்துத் திரும்பியது பிராவோ தலமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி. பிறகு 2015 உலகக்கோப்பையில் பொல்லார்டு, டுவைன் பிராவோ நீக்கம், அதற்குக் குரல் கொடுத்த கெயில் மீது நடவடிக்கை என இவர்கள் பிரச்னை ஓயவே ஓயவில்லை.

அட அப்படி என்னதான்பா பிரச்னை? நம்ம ஊரு ஃபேக்டரிகள்ல நடக்கற அதே பிரச்னை தான். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு மட்டும் பிரதானமான ஒன்று கிடையாது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சங்கம் என இன்னொரு அமைப்பும் உண்டு. பல கரீபியத் தீவுகளை ஒன்றிணைத்து இவ்வணி உருவாக்கப்பட்டதால்,  இப்படி ஒரு அமைப்பு முறை. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சங்கம் என்பது வேறொன்றுமில்லை. நம்ம ஊரு தொழிலாளர் யூனியன்கள் போலத்தான். வீரர்களையும் கிரிக்கெட் போர்டையும் இணைக்கும் ஒரு அமைப்புதான் அது. வீரர்களின் பிரதிநிதியான இச்சங்கம் 1973-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. வீரர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் பற்றி கிரிக்கெட் போர்டுடன்,  வீரர்கள் சார்பாகப் பேச வேண்டிய இவ்வமைப்பு, கிரிக்கெட் போர்டுக்கு ஜால்ரா அடிக்கத் தொடங்கிவிட்டது.

 2014-ம் ஆண்டு,  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் இணைந்து ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சங்கம். அதன்படி வீரர்களின் ஊதியம் குறைக்கப்பட்டது. அச்சமயம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்,  இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த ஒப்பந்தத்திற்கு எதிராக முன்னணி வீரர்கள் குரல் கொடுக்க, சாமுவேல்சோ தொடரையே புறக்கணிக்கச் சொல்ல, அதன்படியே செய்தார் கேப்டன் டுவைன் பிராவோ. இதை மனதில் வைத்து 2015-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடருக்கான அணியிலிருந்து பிராவோ, பொல்லார்டு ஆகியோரை கழட்டி விட்டது அணி நிர்வாகம். இதில் என்ன கொடுமை என்றால் அந்த கிரிக்கெட் சங்கங்களில் பெரும்பாலும் தலைமைப் பகுதி வகிப்பவர்கள் முன்னாள் வீரர்களே. அவர்களை அணியிலிருந்து நீக்கிய தேர்வுக் குழுவின் தலைவர், இரண்டு உலகக்கோப்பைகளை வென்று தந்த கிளைவ் லாயிட். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சங்கத்தின் தலைவரோ முன்னாள் தொடக்க வீரர் வேவல் ஹிண்ட்ஸ். 

அந்த ஊதியப் பிரச்னை எழுந்தபோது “வேவல் ஹிண்ட்சால் நாங்கள் மிகவும் ஏமாற்றப்பட்டோம்” என்றார் பிராவோ. வீரர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய இவ்வமைப்பு,  கிரிக்கெட் போர்டுடன் சேர்ந்து அடிக்கடி வீரர்களின் ஊதியத்தில் கை வைத்து விடுகிறது. இம்முறையோ அவர்கள் செய்திருப்பது மிகப்பெரிய கொடுமை. கடந்த உலகக்கோப்பைத் தொடரின் போது 1 லட்சத்தி 35 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஊதியமாகப் பெற்றவர்களுக்கு, தற்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி வரும் ஊதியம் வெறும் 27 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்தான். அதாவது பழைய ஊதியத்திலிருந்து 80 சதவிகிதம் குறைந்துள்ளது.

இதனால் கோபமடைந்த வீரர்கள்,  டி20 உலகக்கோப்பையை புறக்கணிப்போம் என்று சொல்ல, “விளையாண்டா விளையாடுங்க. இல்லனா போங்க. வேற வீரர்கள் உலகக்கோப்பையில் விளையாடுவாங்க. ஆனால் இந்த புது ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் ஒருத்தரும் விமானம் ஏற முடியாது” என்று அராஜக பதிலளித்தார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாகி மைக்கேல் மூர்ஹெட். 

அவர்களின் நிலைப்பாடு இதுதான். வீரர்களோடு பேச்சு வார்த்தை நடத்தவோ, அவர்களின் நலனில் அக்கறை செலுத்தவோ, கிரிக்கெட்டை மேம்படுத்தவோ அவர்களுக்கு விருப்பம் இல்லை நேரமும் இல்லை. சமீபத்தில் தொடங்கப்பட்ட கரீபியன் பிரீமியர் லீக் தொடரும் நல்ல வருமாணம் ஈட்டித்தருகிறது. பிறகு சர்வதேசப் போட்டிகளைப் பற்றி என்ன அக்கறை? இவர்கள் சொல்வதை வீரர்கள் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள். டி20 கேப்டன் சம்மி, டுவைன் பிராவோ போன்ற பல வீரர்கள் ஒருநாள் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகும் கூட,  ஊதிய மாற்றம் பற்றி இன்னும் அச்சங்கம் வாய் திறக்கவில்லை என்பதுதான் சோகம். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் மாறி மாறி புலம்ப, அவர்களைத் தான் சாடுகிறார்களே தவிர, ஒப்பந்தத்தை மாற்ற அவர்கள் தயாராயில்லை. கோப்பையை வென்ற பிறகு பேசிய அணி கேப்டன் சம்மியோ,  “ மிகவும் வேதனையாக இருக்கிறது. கோப்பையை வென்ற பிறகு கூட சரியான மரியாதை கிடைக்கவில்லை. என்னை ஏன் ஒருநாள் போட்டி அணியில் தேர்வு செய்யவில்லை எனத் தெரியாது. நான் இனி எப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவேன் எனத்தெரியாது” என்று வேதனையோடு தெரிவித்தார். “இதுவரை ஒரு போன் கூட எங்கள் கிரிக்கெட் போர்டிடம் இருந்து வரவில்லை. நாங்கள் வென்றதை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியாது. பி.சி.சி.ஐ எங்களுக்கு அளிக்கும் உதவி அளவுக்கு கூட அவர்கள் தரவில்லை” என்று புலம்பினார் டுவைன் பிராவோ.

அவர்கள் கூறுவது மிகவும் சரிதான். வாயைத் திறந்து குற்றம் கூறினாலே நடவடிக்கையைப் பாய்ச்சுகிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சங்கம். இவர்களும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படையாய்க் கூற,  டி20 க்கு மட்டுமே திறந்திருந்த கதவுகள் கூட இனி மூடப்படலாம். நேற்று சச்சின் கூட வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். யார் பேசி என்ன பயன்? இரும்புக் கவசத்தால் செவிகளை மூடிக்கொண்டிருப்பவர்களிடையே பேச்சுவர்த்தை நடத்தி என்ன பயன்?

ஐ.சி.சி இவ்விஷயத்தில் நேரடியாகக் களமிறங்க வேண்டும். இல்லையேல் பிராவோ, சம்மி போன்ற பல அற்புத கிரிக்கெட் வீரர்களை சிவப்பு நிற உடையில் நாம் பார்ப்பது இதுவே இறுதியாக இருக்கக்கூடும். இப்பொழுது கரீபிய மண்ணில் தேவை ஒரு கிரிக்கெட் புரட்சி!

No comments

Powered by Blogger.