Header Ads



கெப்டன் பதவியிலிருந்து விலகினார் அப்ரிடி - அணியில் தொடர்ந்து விளையாட விருப்பம்

பாகிஸ்தான் டி20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள சாகித் அப்ரிடி, ஒரு வீரராக அணியில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

சாகித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி டி20 உலகக்கிண்ணத்தில் மோசமாக விளையாடி லீக் சுற்றிலே வெளியேறியது.

அப்ரிடியின் மோசமான தலைமை தான் பாகிஸ்தான் அணியின் வெளியேற்றத்திற்கு காரணம் என்று கடுமையாக விமர்சனங்கள் எழுந்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அப்ரிடியை தலைவர் பதவியில் இருந்து நீக்கப் போவதாகவும், வீரராக அவர் தொடர்வது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "நான் டி20 தலைவர் பதவியில் இருந்து விலகுவதை பாகிஸ்தான் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து வித போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை வழி நடத்தியது எனக்கு கிடைத்த கெளரவம். இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், அதன் தலைவர் ஷாகாரியர் கானுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், டி20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்காகவும், மற்ற லீக் போட்டிகளிலும் ஒரு வீரராக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.