ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆயுத கடத்தல்: துருக்கி மீது ரஷியா குற்றச்சாட்டு
சிரியாவில் உள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு துருக்கியைச் சேர்ந்த 3 அமைப்புகள் ஆயுதங்களைக் கடத்தி விற்பனை செய்து வருவதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் விட்டலி சுர்க்கின், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்களை சப்ளை செய்வதில் துருக்கி முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்நாட்டைச் சேர்ந்த 3 அமைப்புகள் துருக்கி எல்லை வழியே பயங்கரவாதிகளுக்குத் தேவையான ஆயுதங்களை அனுப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளன. அந்நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பின் மேற்பார்வையில்தான் இந்த ஆயுதப் பரிமாற்றம் நடைபெறுகிறது.
ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு இதுவரையில் 19 லட்சம் டாலர் (சுமார் ரூ.12.35 கோடி) மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் விட்டலி சர்க்கின் தெரிவித்துள்ளார். இந்தக் கடித விவகாரம் தொடர்பாக துருக்கிக்கான ஐ.நா. தூதர் உடனடியாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
சிரியாவில் கணிசமான பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியா ராணுவத்துடன் இணைந்து ரஷியா அண்மையில் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது. இதன் காரணமாக பயங்கரவாதிகளின் ஆதிக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது.
அதே சமயம், சிரியா அதிபர் பஷார் அல்-அஸாதுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளுக்கு துருக்கி, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment