"நிர்வாண புகைப்பட கப்பம்" மாலைதீவு பணக்காரருக்கு இலங்கையிலிருந்து அச்சுறுத்தல்
-வீரகேசரி-
மார்ச் மாதத்தின் நடுப்பகுதிக்கு உட்பட்ட ஒரு நாள். மாலைதீவின் பிரபல கோடீஸ்வரர் ஹசீம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இலங்கையின் பொலிஸ் தலைமையகத்துக்கு அழைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளார். அவரின் அழைப்புக்கு பதிலளித்துள்ள பொலிஸ் தலைமையகத்தின் தொலைபேசி அலுவலர்கள் "வணக்கம்…. இது இலங்கை பொலிஸ் திணைக்களம்" என தம்மை அறிமுகம் செய்யவே ஹசீமும் பதிலுக்கு காலை வணக்கம் கூறி தமது பிரச்சினையை கூறியுள்ளார்.
ஹசீம் ஏதோ பெரும் சிக்கல் ஒன்று தொடர்பில் முறைப்பாடளிக்கவே தடுமாறுகிறார் என்பதை புரிந்துகொண்ட பொலிஸ் தலைமையகத்தின் தொலைபேசி அலுவலர் அவரின் அழைப்பை பொலிஸ் மா அதிபர் உதவிப்பிரிவுக்கு மாற்றியுள்ளார்.
இந்நிலையில் அப்போது பொலிஸ் மா அதிபர் உதவி பிரிவில் கடமையில் இருந்தவர் ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகர். குறித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹசீமின் பிரச்சினைகளை வினவினார்.
"சேர்…. என்னை ஏமாற்றி எனது நிர்வாண புகைப்படங்களை எடுத்த யாரோ அதனை இணையத்தில் பதிவேற்றப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கேட்கின்றனர். அது தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியில் தேடிய போது அவர்கள் இலங்கையில் இருந்தே செயற்படுகின்றமை தெரிந்தது. அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் சேர்…" என தனது நோக்கத்தை கூறியுள்ளார் ஹசீம்.
"மிஸ்டர் ஹசீம்….. உங்கள் பிரச்சினை புரிகிறது. நீங்கள் இலங்கைக்கு வந்து குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஒரு முறைப்பாட்டைக் கொடுங்கள். விசாரணைகளை ஆரம்பிக்கலாம்" என உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹசீமுக்கு பதிலளித்துள்ளார்.
ஹசீம் மாலைதீவுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்து விநியோகிக்கும் பிரபலமான வர்த்தகர். சுமார் 30 வயதுடைய அவர் திருமணமானவர். ஒரு பிள்ளையின் தந்தையும் கூட. சமூக வலைத்தளங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த ஹசீமுக்கு 'பேஸ்புக்கில்' ஒரு கணக்கும் இருந்தது. தனது பேஸ்புக் கணக்கை மிகக் கவனமாக ஹசீம் கையாண்டவர் எனலாம். ஏனெனில் தான் தேர்ந்தெடுத்த மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே அவரது பேஸ்புக் நண்பர்கள் பட்டியல் அமைந்திருந்தது. சமூகத்தின் உயர் நிலையில் இருந்த சுமார் 40க்கு உட்பட்ட நண்பர்களே அவரது பேஸ்புக் நண்பர் பட்டியல் எனக் கூறினால் அது இன்னும் சரியாக இருக்கும்.
இந்நிலையில்தான் கடந்த 2015 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் யுவதி ஒருவரிடமிருந்து தன்னையும் நண்பர் பட்டியலில் சேர்க்குமாறு ஹசீமுக்கு கோரிக்கையொன்று (Friend request) பேஸ்புக்கில் அனுப்பப்பட்டிருந்தது. பேஸ்புக் தகவல்களின் பிரகாரம் அவள் பெயர் லாரா. ஹசீமுக்கு லாரா தனிப்பட்ட ரீதியிலோ அல்லது வேறு அடிப்படையிலோ அறிமுகமற்றவர்.
இந்நிலையில் தனது பேஸ்புக் நண்பர்கள் தொடர்பில் மிக்க அவதானம் செலுத்தும் ஹசீம் லாராவின் கணக்கையும் ஆராய தவறவில்லை. லாராவின் முகப் புத்தக கணக்கு உயர்தரமான நிலையில் பேணப்படுவதை கணக்கை ஆராயும் போது ஹசீமுக்கு விளங்கியது. ஏனெனில் அவளது நட்புப் பட்டியலில் தேவையற்றவர்களோ அல்லது அவளது பதிவுகளில் அநாவசியமான புகைப்படங்களோ பதிவுகளோ காணப்படவில்லை. தன்னை அடையாளப்படுத்தும் புகைப்படமொன்றும் (Profile picture) பதிவேற்றப்பட்டிருந்தது. அதன்படி லாரா வெள்ளை நிற சருமத்தைக் கொண்ட கறுப்பு நீண்ட கூந்தலை உடைய ஒரு அழகிய யுவதி.
இந்நிலையில் லாராவின் நட்புக் கோரிக்கையை பேஸ்புக்கில் ஏற்றுக்கொண்ட (Accept) ஹசீம் ஏனைய முகப்புத்தக நண்பர்களைப் போன்றே நேரம் கிடைக்கும் போதெல்லாம் ‘செட்’ செய்ய ஆரம்பித்தார். இந்த ஆரம்பம் குறுகிய நாட்களுக்குள்ளேயே வலுவடைந்தது. லாரா ஹசீமின் முக்கிய நண்பரானார். லாராவுடன் ‘செட்’ செய்யாது ஹசீமால் இருக்க முடியவில்லை. இந்த நெருக்கம் லாரா, ஹசீமுக்கு இடையே காதலாக மாறியது. அந்த காதல் காமத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஒரு நாள் ''எனக்கு உன்னை பார்க்க வேண்டும்…''. ஹசீம் லாராவுக்கு பேஸ்புக்கில் தகவல் அனுப்பினான். பேஸ்புக் அடையாளப்படத்தில் (Profile picture) மட்டுமே லாராவை கண்டிருந்த ஹசீம் இப்படி தகவல் அனுப்பியதும் லாராவும் பதில் அனுப்பியுள்ளார்.
"எனக்கும் உன்னை பார்க்க ஆவலாக உள்ளது" என லாராவின் பதில் அமைந்திருந்தது. இந்த உரையாடலுடன் ஹசீமுக்கும் லாராவுக்கும் இடையிலான நெருக்கம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் நாட்கள் சில கடந்தன. அது கடந்த பெப்ரவரி மாதத்தின் ஒரு நாள். "என்னைப் பார்க்க வேண்டுமானால் ‘ஸ்கைப்’ ஊடாக வாருங்கள்" லாரா ஹசீமுக்கு தனது ‘ஸ்கைப்’ முகவரியையும் கொடுத்து தகவல் அனுப்பினாள்.
இதனைத் தொடர்ந்து இருவரும் தீர்மானித்த அடுத்த சில நாட்களிலேயே ஸ்கைப்பில் ‘வெப் கமரா’ தொழில்நுட்பம் ஊடாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள ஏற்பாடுகள் ஆயின.
வெப்கமரா இயங்கியது. எனினும் லாரா மட்டுமே பேசினாள். ஹசீம் பார்க்கும் விதமாக அவள் தனது அந்தரங்க உறுப்புக்களை ஸ்பர்ஷம் செய்துகொண்டே வலிந்து பேசலானாள். தனது ஆடைகளை சற்று உயர்த்தி ஹசீமின் உணர்வுகளை தூண்டும் விதமாக வலிந்த லாரா ஒரு கட்டத்தில் ஆடைகளை தளர்த்தி காமத்தை தூண்டும் ஆட்டத்தில் ஈடுபடலானாள்.
இதனை ஏற்றுக் கொண்ட ஹசீம் பதிலுக்கு தானும் பிறந்த மேனிக்கு மாறி பல்வேறு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளான். இவை ‘ஸ்கைப்’ வெப்கமரா முன் காட்டப்பட்ட லாராவின் படங்களுக்குள் கட்டுண்டு புரியப்பட்டது என்றால் அது மிகையாகாது. இந்த காமக்களியாட்டம் சுமார் 20 முதல் 30 நிமிடங்களுக்கு நீடித்திருக்கும்.
அதன்பின்னர் மீண்டும் பேஸ்புக் ஊடாக இருவரும் ‘செட்’ செய்ய ஆரம்பித்தனர். அதில் அவர்கள் பிறிதொரு தினத்தில் இருவரும் ஐரோப்பிய நாடொன்றில் உல்லாசம் அனுபவிப்பது குறித்து கருத்துக்களை பறிமாறிக்கொண்டனர்.
அடுத்து சில நாட்கள் கடந்தன. ஹசீமின் மின்னஞ்சலுக்கு அடையாளம் தெரியாத ஒருவரின் முகவரியிலிருந்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் "உனது நிர்வாண புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. அதனை உனது மனைவிக்கு கொடுக்காமலும் பேஸ்புக்கில் பதிவேற்றாமலும் இருக்க வேண்டுமானால் எனக்கு ஒரு மில்லியன் ரூபா வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு மில்லியன் ரூபா என்பது மாலைதீவு பெறுமதியிலாகும். அதன் இலங்கை பெறுமதி கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாவை எட்டும். இதனை ஹசீம் கணக்கிலெடுக்கவில்லை. யாரோ தன்னுடன் விளையாடுவதாகவும் தன்னை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர் எனவும் நினைத்து அதனை அலட்டிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் அதே அடையாளம் தெரியாத நபரிடமிருந்து இரண்டாவது மின்னஞ்சலும் வந்தது. அதில் லாராவுடன் ஸ்கைப்பில் ஹசீம் செய்த திருவிளையாடல்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அதனை பார்த்த போதே ஹசீமுக்கு தனது தவறிய நிமிடங்கள் ஞாபகத்துக்கு வரலானது. பிரபல வர்த்தகரான ஹசீமுக்கு தனது ஆபாச புகைப்படங்கள் வெளியானால் அதனால் ஏற்படப் போகும் சமூக பாதிப்பை நினைத்துப்பார்க்க முடியவில்லை. லாரா தன்னை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளார் என்பதை மட்டும் ஹசீம் புரிந்து கொண்டார்.
பணம் கொடுத்தேனும் புகைப்படங்களை வெளிப்படுத்துவதை தவிர்க்க தீர்மானித்த ஹசீம் குறித்த அடையாளம் தெரியாத மின்னஞ்சல் முகவரியுடன் தகவல்களை பரிமாறினார். அதன்படி நம்பிக்கையை ஏற்படுத்த முதல்கட்டமாக 5500 மாலைதீவு ரூபாவை (சுமார் 4 இலட்சம் ரூபா இலங்கை பெறுமதி) ஹசீம் தனக்கு வழங்கப்பட்ட கணக்கொன்றில் வைப்பிலிட்டார். அந்த கணக்கு ஒரு இணைய வழி கணக்காகும். அதனால் பணம் பெறுபவர் அல்லது கணக்குரிமையாளரை கண்டறிவது என்பது கடினமான விடயமாகும்.
இந்நிலையில் தன்னை இவ்வாறு சூட்சுமமாக செயற்பட்டு சிக்கவைத்தவர்கள் யார் என்பதை அறிய ஹசீமின் மனது துடித்தது. தகவல் தொழில்நுட்பத்தில் அனுபவம் கொண்ட சில நண்பர்களின் உதவியையும் இதற்காக வேண்டி ஹசீம் பெற்றுக் கொண்டான். இதன்போதே கப்பம் பெறுவோர் இலங்கையில் உள்ள பிரதான தொலைபேசி வலையமைப்பின் இணைய கட்டமைப்பு ஊடாக செயற்படுவது தெரியவந்தது. இதனையடுத்தே கப்பக்காரர்கள் இலங்கையில் இருந்தவாறே இவ்வாறு தன்னை அச்சுறுத்துவதாக அனுமானித்தே இலங்கையின் பொலிஸ் தலைமையகத்தின் உதவியை ஹசீம் நாடியிருந்தார்.
இலங்கைக்கு பல தடவை வந்து சென்ற அனுபவம் உள்ள ஹசீம் பொலிஸ் மா அதிபர் உதவிப்பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தொலைபேசியூடே வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நாள் இலங்கை வந்தார். வந்தவர் நேரடியாக கோட்டையில் உள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவில் தன்னிடமிருந்த ஆதாரங்களுடன் முறையிட்டார்.
இதனையடுத்தே இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி ஸ்ரீதாவின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் கணனி குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.என்.ஏ.எஸ்.கே.சேனாரத்ன தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
கணனி குற்ற விசாரணையில் இலங்கையில் உள்ள மிகத்திறமை வாய்ந்தவர்களில் ஒருவராக கருதப்படும் பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன கப்பக் காரர்கள் தெஹிவளை ஹில்வீதி பகுதியில் இருந்தே செயற்படுவதை இணையவலையமைப்பு சோதனை விசாரணையில் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து தெஹிவளை ஹில் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை சுற்றிவளைத்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதன் அறையொன்றில் இருந்த இரு மாலைத் தீவு பிரஜைகளை அங்கிருந்த மடிக்கணனி ஒன்றுடன் கைது செய்தனர். கைதான ஒருவர் அஸ்மின். மற்றையவர் அப்துல். அஸ்மினுக்கு 23 வயது. 2012 முதல் இலங்கைக்கு வந்து செல்லும் அவனின் தந்தை மாலே விமான நிலையத்தில் கடமையாற்றும் ஒரு விமான பொறியியலாளர். அஸ்மினுக்கு ஒரே ஒரு சகோதரன். அவனும் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
அப்துலுக்கும் வயது 23 மட்டும்தான். அவனின் தந்தை கூட மாலே துறைமுகத்தில் கடமையாற்றும் ஒரு பொறியியலாளர். அப்துல் இங்கு தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் உயர் கல்வி பயின்று வந்தான். இவ்விரு சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பல அதிர்ச்சித் தகவல்களை பொலிஸார் அறிந்துகொண்டனர்.
உண்மையில் லாரா என்ற ஒரு யுவதி சந்தேக நபர்களுடன் இல்லை. லாரா என்ற யுவதி ஒரு கற்பனையே. எனினும் அப்பெயரில் ஆரம்பிக்கப்பட்ட முகப்புத்தக கணக்கை இயக்கியவர்கள் இவ்விரு சந்தேக நபர்களே. அத்துடன் ஸ்கைப்பில் இவர்கள் நடத்திய காம நாடகம் ஒரு கம்பியூட்டர் ஜில்மார்ட். அந்த ஏமாற்று வித்தையில் ஹசீம் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.
ஹசீம் ஸ்கைப்பில் பார்த்த லாராவின் ஆபாசம், காமம் என்பன வெறும் வீடியோ பதிவே. அதற்கு ஹசீம் கொடுத்த பிரதிபலிப்பு மட்டுமே உண்மை. அதனை பதிவுசெய்து கொண்ட நடவடிக்கையே இரு சந்தேக நபர்களாலும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றப்பட்ட குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணனியை ஆராய்ந்த போது ஹசீம் மட்டும் அந்த வலையில் சிக்கவில்லையென்பதும் மேலும் பலர் சிக்கியுள்ளதும் தெளிவானது. அந்த மடிக்கணனியில் சுமார் 50இற்கும் மேட்பட்டோரின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தன. அதில் 5 பேர் மாலைத் தீவு அமைச்சர்களுக்குரியது. ஏனையவை அந்நாட்டு பிரபல வர்த்தகர்களினுடையது.
எனினும் வெட்கம் காரணமாக இதுவரை அவர்கள் முறைப்பாடளிக்காத நிலையில் ஹசீமின் முறைப்பாட்டினால் மாலைதீவு முழு செல்வந்த வர்த்தகத்தையும் தொற்றாதிருந்த இந்த 'நிர்வாண புகைப்பட கப்பம்' எனும் புற்றுநோயை புலனாய்வுப் பிரிவினர் கட்டுப்படுத்தியுள்ளனர்.
Post a Comment